சென்னை:சென்னையில் வேலை தேடிக் கொண்டிருக்கும் பெண்கள் மற்றும் சென்னை நகருக்கு வேலை தேடி வரும் இளம்பெண்களிடம் தனியார் நிறுவனங்களில் நல்ல சம்பளத்தில் வேலை வாங்கித் தருவதாக ஆசை வார்த்தைகள் கூறி, அவர்களை அழைத்துச் சென்று கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வருவது தொடர் கதையாகி வருகிறது.
இதுபோன்ற நபர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்க சென்னை பெருநகர காவல் ஆணையாளர் உத்தரவிட்டதன் பேரில், காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான தனிப்படையினர் ரகசியமாக கண்காணித்து குற்றச் செயல்களில் ஈடுபடும் பாலியல் தொழில் தரகர்களை கைது செய்து, நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக வளசரவாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், சென்னை, வளசரவாக்கம், காரம்பாக்கம், ராஜேஸ்வரி நகர் 2வது தெருவில் உள்ள ஒரு வீட்டை கண்காணித்தபோது, அங்கு பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்தியது உறுதி செய்யப்பட்டது.
பின்னர், பெண் காவலர்கள் உள்ளிட்ட காவல் துறையினர் வீட்டில் சோதனை மேற்கொண்டு, அங்கு பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்திய கஸ்தூரி என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 1 செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், அங்கு பாலியல் தொழிலில் ஈடுபடுத்த இருந்த 3 பெண்கள் மீட்கப்பட்டனர். மேலும், கைது செய்யப்பட்ட கஸ்தூரி விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார். மீட்கப்பட்ட பெண்கள் அரசு மகளிர் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.
இதையும் படிங்க:காதலன் வீட்டில் கல்லூரி மாணவி மர்ம மரணம்.. சென்னையில் நடந்தது என்ன?