திருநெல்வேலி: வங்கக்கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழை பெய்தது. மேலும், அந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ரீமால் புயலாக உருமாறி, கரையைக் கடந்த போது பல்வேறு பகுதிகளில் சூறைக்காற்று வீசத் துவங்கியது.
முன்னதாக, தமிழ்நாட்டில் பெய்த தொடர் மழையால் காற்றாலை மின் உற்பத்தி சீராக நடைபெறாமல் இருந்த நிலையில், தற்போது கடந்த இரு நாட்களாகவே காற்றின் வேகம் அதிகரித்துக் காணப்படுவதால் மின் உற்பத்தி அதிகரித்துள்ளதாகவும், காற்றின் வேகம் அதிகரித்ததால் தமிழ்நாட்டில் நேற்று ஒட்டுமொத்த காற்றாலை மின் உற்பத்தி 4,111 மெகாவாட்டை எட்டியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டின் மின் தேவையில் காற்றாலை மின் உற்பத்தி மிக முக்கியப் பங்கை வகிக்கிறது. மேலும், தமிழ்நாட்டில் நாள் ஒன்றிற்கு 21 ஆயிரம் மெகாவாட்டிற்கும் அதிகமாக மின் தேவை உள்ள என்ற நிலையில், சீசன் காலங்களில் காற்றாலை மின் உற்பத்தி ஓரளவிற்கு கை கொடுக்கிறது. அதாவது, தமிழ்நாட்டில் மே மாதம் முதல் அக்டோபர் வரை காற்று சீசன். இந்த காலகட்டத்தில் 5 ஆயிரம் மெகாவாட் வரை காற்றாலை மின்சாரம் உற்பத்தி செய்யப்படும்.
அதற்காக 13 ஆயிரத்திற்கும் அதிகமான காற்றாலைகள் உள்ளன. அதில், தென் மாவட்டங்களான நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் 10 ஆயிரத்திற்கும் அதிகமான காற்றாலைகள் நிறுவப்பட்டு மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.