சென்னை: தமிழ்நாட்டில் தொடக்கக்கல்வித் துறையில் இடைநிலை ஆசிரியர் பணியில் 1,768 பணியிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்பங்கள் பிப்ரவரி 14ஆம் தேதி முதல் மார்ச் வரை ஆன்லைன் மூலம் பெறப்பட்டன. தமிழ், உருது, தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிப் பாடங்களுக்கும் இடைநிலை ஆசிரியர்கள் தேர்வு நடைபெற உள்ளது.
இடைநிலை ஆசிரியர் பணிக்கு 2024 ஜூலை மாதம் 53 வயது உள்ளவர்கள் பொதுப் பிரிவிற்கும், இட ஒதுக்கீட்டு பிரிவில் உள்ளவர்கள் 2024 ஜூலை மாதம் 58 வயது முடிய உள்ளவர்களும் விண்ணப்பிக்க தகுதி பெற்றவர்கள். ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்பட்ட தகுதித் தேர்வு தாள் ஒன்றில் தகுதி பெற்றிருக்க வேண்டும். தமிழ்நாட்டில் அனைவரும் தமிழ் மொழித் தேர்வில் தகுதி பெற வேண்டும். தமிழ் தகுதித் தேர்வில் 40 சதவீதம் மதிப்பெண் பெற்றால் மட்டுமே அவர்களின் அடுத்த தாள் திருத்தப்படும்.
போட்டி எழுத்துத் தேர்வில் தகுதி ஒன்றில் தமிழ் மொழித் தாள் தேர்வில் 30 கேள்விகள் 50 மதிப்பெண்களுக்கு கேட்கப்படும். அதில் தேர்வர்கள் 40 சதவீதம் மதிப்பெண் பெற வேண்டும். பகுதி இரண்டில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், உருது, ஆங்கிலம், கணக்கு, அறிவியல், சமூக அறிவியல் ஆகிய பாடங்களில் ஐந்து பாடங்களில் இருந்து 150 மதிப்பெண்களுக்கு 3 மணி நேரம் தேர்வு நடைபெறும் வகையில் 150 கேள்விகள் கேட்கப்படும்.
மொழிப் பாடங்களில் தமிழ் அல்லது சிறுபான்மை மொழியில் ஏதாவது ஒன்றினை அவர்கள் பகுதி இரண்டு தேர்வு செய்து கொள்ளலாம். வினாத்தாளில் மொழிப் பாடத்திற்கான தேர்வுகள் அந்தந்த மொழிகளிலும், ஆங்கில பாடத்திற்கான வினாக்கள் ஆங்கிலத்திலும், கணக்கு, அறிவியல், சமூக அறிவியல் பாடத்திற்கான வினாக்கள் தமிழ் மற்றும் ஆங்கிலத்திலும் இடம்பெறும்.