கோயம்புத்தூர்:இன்றைய தினம் தீபாவளி பண்டிகையை பொதுமக்கள் பலரும் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில், கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள பெரியார் படிப்பகத்தில், தீபாவளியை புறக்கணித்து நரகாசுரனுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில், நரகாசுரனுக்கு வீரவணக்கம், தீபாவளியை புறக்கணிப்போம் என்று முழக்கங்கள் எழுப்பப்பட்டன. தொடர்ந்து, இந்நிகழ்வில் பங்கேற்றவர்களுக்கு மாட்டிறைச்சி பிரியாணியும், பன்றிக்கறி கிரேவியும் வழங்கப்பட்டது.
இது குறித்து பேசிய தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச் செயலாளர் கு.இராமகிருட்டிணன், "தீபாவளி பண்டிகை என்பது நரகாசுரன் கொல்லப்பட்ட நாள் என்றும், அவர் இறந்த நாளைக் கொண்டாட வேண்டும் என்று கேட்டுக் கொண்டதாக ஒரு புராண கதையைச் சொல்லி, மக்களை நம்ப வைத்து நடத்தப்படுகின்ற ஒரு பண்டிகைதான் தீபாவளி.
கு.இராமகிருட்டிணன் செய்தியாளர் சந்திப்பு (Photo Credit - ETV Bharat Tamil Nadu) இதையும் படிங்க:நீக்கப்பட்ட ஊராட்சித் தலைவர் கணவருடன் அதிகார துஷ்பிரயோகம் செய்வதாக புகார்!
அசுரர்களைக் கொன்ற நாட்களைத் தான் ஆரியர்கள் பல்வேறு கதைகளில் உருவாக்கி வைத்திருக்கிறார்கள். புராணங்கள் என்பது ஆரியர்- திராவிடர் போராட்டம் என்று ஜவஹர்லால் நேரு குறிப்பிட்டுள்ளார். ஆரியர் - திராவிடர் போர் என்று வரும் பொழுது, நம்முடைய முன்னோர்களைத் தான் கற்பனைக் கதைகளில் கூட ஆரியர்கள் உயர்வான சமூகத்தைச் சார்ந்தவர்களாக உருவாக்கி வைத்திருக்கிறார்கள்.
எனவே, இன்றைய தினம் தீபாவளியைக் கொண்டாடுவது மூடத்தனம் என்பதை வலியுறுத்தும் வகையிலும், கற்பனைக் கதையில் நரகாசுரன் நம் முன்னோர் என்பதால், அவர் இறந்ததை கொண்டாடக்கூடாது என்பதை வலியுறுத்தும் வகையிலும், அவருக்கு வீரவணக்கம் செலுத்துகின்ற நிகழ்வை நடத்துகிறோம். இந்த நிகழ்வில் திராவிடர்கள் உணவாக உண்ட உணவை, ஆரியர்கள் தடுத்த சூழ்ச்சியைத் தடுக்கின்ற வகையில் மாட்டுக்கறி, பன்றிக்கறி உண்ணுகின்ற நிகழ்வையும் நடத்தி வருகிறோம் "என தெரிவித்தார்.