தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழகத்தின் பணக்கார அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார் ஈரோட்டில் தோற்றது எப்படி? - erode aatral ashok kumar - ERODE AATRAL ASHOK KUMAR

Erode Lok Sabha constituency results: பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்த ஆற்றல் அசோக்குமார், அதிமுக மூத்த நிர்வாகிகளுடன் ஒத்துழைப்பு கொடுக்காததால் அக்கட்சியின் கொங்கு மண்டல கோட்டையாக இருந்த ஈரோடு நாடாளுமன்றத் தொகுதியில் தோல்வி அடைந்தார் என்று சொல்லப்படுகிறது.

erode lok sabha candidates
erode lok sabha candidates (Credit - Etv Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 7, 2024, 2:59 PM IST

ஈரோடு: மஞ்சள் மாநகரம் என்று அழைக்கப்படும் ஈரோடு நாடாளுமன்றத் தொகுதியில் ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த குமாரபாளையம், திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த காங்கேயம், தாராபுரம் (தனி) என 6 சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கியது.

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் காங்கிரஸைச் சேர்ந்த ஈவிகேஎஸ் இளங்கோவனும், ஈரோடு மேற்கு சட்டமன்றத் தொகுதியில் திமுகவைச் சேர்ந்த (அமைச்சர்) முத்துசாமியும், மொடக்குறிச்சி சட்டமன்றத் தொகுதியில் பாஜகவைச் சேர்ந்த சரஸ்வதியும், தாராபுரம் சட்டமன்றத் தொகுதியில் திமுகவைச் சேர்ந்த (அமைச்சர்) கயல்விழியும், காங்கேயம் சட்டமன்றத் தொகுதியில் திமுகவைச் சேர்ந்த (அமைச்சர்) சாமிநாதனும், குமாரபாளையம் சட்டமன்றத் தொகுதியில் அதிமுகவைச் சேர்ந்த தங்கமணியும் எம்எல்ஏக்களாக உள்ளனர்.

ஈரோடு கிழக்கு தொகுதியில் 2,30,448 வாக்காளர்களும், ஈரோடு மேற்கு தொகுதியில் 2,95,732 வாக்காளர்களும், மொடக்குறிச்சி தொகுதியில் 2,27,935 வாக்காளர்களும், தாராபுரம் தொகுதியில் 2,58,786 வாக்காளர்களும், காங்கேயம் தொகுதியில் 2,59,652 வாக்காளர்களும் மற்றும் குமாரபாளையத்தில் 2,55,689 வாக்காளர்களும் உள்ளனர்.

அதேபோல், ஈரோடு நாடாளுமன்றத் தொகுதியில் 7,40,298 ஆண் வாக்காளர்களும், 7,87,763 பெண் வாக்காளர்களும் மற்றும் 181 மூன்றாம் பாலின வாக்காளர்களும் என மொத்தம் 15,28,242 வாக்காளர்கள் உள்ளனர். முன்பு, திருச்செங்கோடு நாடாளுமன்றத் தொகுதியாக இருந்த ஈரோடு, தற்போது தொகுதி மறு சீரமைப்பு மூலம் 2009ம் ஆண்டு முதல் ஈரோடு நாடாளுமன்றத் தொகுதியாக உள்ளது.

2009 தொகுதி மறுசீரமைப்பு மூலம் ஈரோடு நாடாளுமன்றத் தொகுதி உருவாக்கப்பட் பிறகு நடைபெற்ற 2009, 2014, 2019 ஆகிய மூன்று தேர்தல்களிலும் மதிமுகவைச் சேர்ந்த அ.கணேசமூர்த்தி போட்டியிட்டு 2009, 2019 ஆகிய தேர்தல்களில் வெற்றி பெற்றுள்ளார்.

கடந்த 2019ஆம் ஆண்டு தேர்தலில் திமுக சின்னத்தில் போட்டியிட்ட அ.கணேசமூர்த்தி 5,63,591 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் மணிமாறன் 3,52,973 வாக்குகளும், மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் சரவணக்குமார் 47,719 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மா.கி.சீதாலட்சுமி 39,010 வாக்குகளும் பெற்றனர். இதில் திமுக வேட்பாளர் அ.கணேசமூர்த்தி, அதிமுக வேட்பாளரான மணிமாறனை விட 2,10,618 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினரானார்.

தற்போது 2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின் போது தமிழகத்திலேயே ஈரோடு நாடாளுமன்றம் அனைவரும் உற்று நோக்கும் தொகுதியாக காணப்பட்டது. இதற்கு முக்கியமான காரணம், தமிழகத்திலேயே அதிக சொத்து மதிப்பை வெளியிட்ட வேட்பாளர் உள்ள நாடாளுமன்றத் தொகுதியாக ஈரோடு திகழந்தது. தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் ஆற்றல் அசோக்குமார் 643 கோடி ரூபாய் சொத்து இருப்பதாக குறிப்பிட்டிருந்தார்.

பாஜகவில் 2020ஆம் ஆண்டு அரசியல் பயணத்தை தொடங்கிய ஆற்றல் அசோக்குமார், ஈரோடு, திருப்பூர், நாமக்கல் மாவட்டங்களிலும் ஆற்றல் அறக்கட்டளை மூலமாக குறைந்த செலவில் உணவு வழங்கும் உணவகம் மற்றும் மருத்துவமனை, அரசு பள்ளி கட்டிடம் சீரமைப்பு போன்ற சமூகப் பணிகளைச் செய்தார்.

இதனால் ஈரோடு தொகுதியில் கட்சி கடந்து அசோக்குமார், ஆற்றல் அசோக்குமார் என பொதுமக்கள் மத்தியில் அறிமுகமானதுடன் பிரபலமானார். மேலும், பல்வேறு பகுதிகளில் கோயில் திருப்பணிகளுக்கு நிதி உதவி செய்தும், பல்வேறு நலப் பணிகளுக்கு நிதி வழங்கியும் பொதுமக்கள் பேசும் அளவுக்கு பெயர் பெற்ற ஒரு நபராக இருந்து வந்தார்.

ஆற்றல் அசோக்குமாரின் உறவினரான சி.கே.சரஸ்வதி பாஜகவின் மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினராக இருந்ததால், பாஜக மாநில பொறுப்பும் பெற்று கட்சிப் பணிகள் செய்து வந்தார். கடந்த 2023ஆம் ஆண்டு அதிமுக - பாஜக கூட்டணி முறிவு காரணமாக பாஜக சார்பில் போட்டியிட்டால் ஈரோடு தொகுதியில் தனது வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்காது என்பதால், திடீரென்று பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் இணைந்தார்.

அதிமுகவில் இணைந்த ஆற்றல் அசோக்குமார், பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகள் என பல நிறுவனங்களை நடத்தி வருகிறார். அதிமுகவில் மாநில எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, சில மாதங்களில் அதிமுக தலைமை ஈரோடு நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளராக ஆற்றல் அசோக்குமாரை அறிவித்தது.

ஆற்றல் அசோக்குமார் திடீரென அதிமுகவில் இணைந்தவுடன் சீட்டு வழங்கியது, அதிமுகவில் பல ஆண்டுகளாக பணியாற்றிய மூத்த நிர்வாகிகளுக்கிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இருப்பினும், கட்சித் தலைமை தொண்டர்கள், நிர்வாகிகளை சமாதானம் செய்து தேர்தல் பணியை முன்னெடுக்கச் சொன்னது. ஆனால், வேட்பாளர் அசோக்குமார் ஏழை எளிய மக்களுக்கான அரசியல் செய்யாமல் தனக்கே உரிய பாணியில் கார்ப்பரேட் அரசியலை நடத்தியதால், அதிமுகவினரிடம் மட்டுமல்லாது சாதரணமாக பொதுமக்கள் கூட வேட்பாளர் அசோக்குமாரை நெருங்க முடியாத நிலை ஏற்பட்டது.

தனக்கென ஒரு ஐடி விங், பாதுகாவலர்கள், பர்சனல் பிஏ என வைத்துக் கொண்டு யாருமே எளிதில் அணுக முடியாத ஒரு வேட்பாளராகவே ஆற்றல் அசோக்குமார் இருந்து வந்தார். இதன் காரணமாக நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக வேட்பாளராக இருந்த ஆற்றல் அசோக்குமாருக்கு, அதிமுகவினரே வாக்கு செலுத்தவில்லை என கூறப்படுகிறது. இவை அனைத்தும் எதிர்க்கட்சி வேட்பாளராக போட்டியிட்ட திமுக வேட்பாளர் கே.இ.பிரகாஷ்-க்கு சாதகமாக அமைந்ததாக கூறப்படுகிறது.

பாரம்பரிய திமுக குடும்ப பிண்ணனி கொண்ட திமுக வேட்பாளர் கே.இ.பிரகாஷ் திமுகவில் மாநில இளைஞர் அணி துணைச் செயலாளராக உள்ளதால், ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் அறியப்பட்ட நபராக பல ஆண்டுகளாக பணியாற்றி உள்ளார்.

மேலும், திமுக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அன்பைப் பெற்ற கே.இ.பிரகாஷ்க்கு சீட்டு வழங்கப்பட்டது. இதன் காரணமாக நடைபெற்ற தேர்தலின் போது அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார் பெற்ற 3,25,773 வாக்குகள் பெற்ற நிலையில், 5,62,339 வாக்குகள் பெற்று கே.இ.பிரகாஷ் வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், வேட்பாளர் அறிவிப்பு, பிரபலமானவர்கள் போன்றவற்றில் அதிமுக வேட்பாளர் அசோக்குமார் வெற்றி வாய்ப்பு முதலில் பிரகாசமாக இருந்த நிலையில், பொதுக்கூட்டம், வேட்பாளர் அறிமுக கூட்டம், ஊராட்சி நிர்வாகிகள் தொடங்கி, மாநகராட்சி நிர்வாகி வரை அசோக்குமார் இணக்கமாக இல்லாததால் அசோக்குமாரின் கார்ப்பரேட் அரசியல் கை கொடுக்காமல் தோல்வி அடைந்தார் என்று அதிமுகவினரின் குமுறலாக உள்ளது.

இதையும் படிங்க:அதிமுக - பாஜக கூட்டணி இல்லாததால்தான் தோல்வியா? - வானதி சீனிவாசன் சொல்லும் லாஜிக் இதுதான்!

ABOUT THE AUTHOR

...view details