தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"வரி விதிப்பது எப்படி என எங்களுக்கு தெரியும்" - மத்திய அரசை விளாசி வீடியோ வெளியிட்ட முதலமைச்சர்! - Mk stalin on niti aayog meeting - MK STALIN ON NITI AAYOG MEETING

MK stalin: டெல்லியில் இன்று நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தை தமிழ்நாடு அரசு புறக்கணித்தது ஏன்? என்பதை விளக்கும் வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் (Credit - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 27, 2024, 10:43 AM IST

சென்னை: பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் தலைநகர் டெல்லியில் இன்று நிதி ஆயோக் நிர்வாகிகள் குழுக் கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் அனைத்து மாநில முதலமைச்சர்கள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால், மத்திய பட்ஜெட்டில் மாநில வளர்ச்சிக்கு போதுமான நிதி ஒதுக்கவில்லை என குற்றச்சாட்டுகளை முன்வைத்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூட்டத்தை புறக்கணிப்பதாக அறிவித்தார். அவரைத் தொடர்ந்து கர்நாடகா, தெலங்கானா, இமாச்சலப்பிரதேசம் உள்ளிட்ட 6 மாநில முதலமைச்சர்கள் நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணித்துள்ளனர்.

இதனிடையே, நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணித்தது ஏன் என்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "வணக்கம், இந்நேரம் டெல்லியில் நடைபெறும், பிரதமர் தலைமையிலான 'நிதி ஆயோக்' கூட்டத்தில் பங்கெடுத்திருக்க வேண்டிய நான், ஒன்றிய பாஜக அரசின் மாற்றாந்தாய் மனப்பான்மை கொண்ட நிதிநிலை அறிக்கையால், நீதி கேட்டு, மக்கள் மன்றமான உங்கள் முன் பேச வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறேன்.

தமிழ்நாட்டில் நடைபெறும் திராவிட மாடல் அரசு, கடந்த மூன்றாண்டு காலமாக எத்தகைய முற்போக்கு மற்றும் தொலைநோக்குத் திட்டங்களைச் செயல்படுத்திக் கொண்டு வருகிறதென்று, உங்கள் எல்லோருக்குமே நன்கு தெரியும், நமது அரசின் திட்டங்களின் பயன்கள், ஒவ்வொரு குடும்பத்துக்கும், ஒவ்வொரு குடிமகனுக்கும் நேரடியாகக் கிடைக்கிறது. அதனால்தான், திமுகவுக்கு வெற்றி மேல் வெற்றி குவிகிறது! "நாள்தோறும் திட்டங்கள், மக்கள் மனந்தோறும் மகிழ்ச்சி" இதுதான் நமது அரசின் எண்ணம், இப்படிப்பட்ட நமது எண்ணங்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் செயல்களை ஒன்றிய அரசு தொடர்ந்து செய்துகொண்டு வருகிறது.

முன்மாதிரி அரசு: ஒரு அரசு எப்படி செயல்பட வேண்டும் என்பதற்கான இலக்கணத்தை – நான் அடிக்கடி சொல்லிக்கொண்டு வருகின்றேன். ஒரு நல்ல அரசு என்பது வாக்களித்த மக்களுக்கு மட்டுமல்ல – வாக்களிக்க மறந்த மக்களுக்கும் சேர்ந்தே பாடுபட வேண்டும். இப்படித்தான் தமிழ்நாடு அரசு பணியாற்றிக் கொண்டு இருக்கிறது. ஏன், மோடி தலைமையிலான பாஜக. அரசு வருவதற்கு முன்பு இருந்த எல்லா ஒன்றிய அரசுகளும்கூட அப்படித்தான் இருந்தன. ஆனால், இந்தப் பெருந்தன்மை ஒன்றிய பாஜக. அரசிடம் இல்லை, இவர்கள் மட்டும்தான் அரசியல் நோக்கத்துடன் அரசை நடத்துகிறார்கள்.

அதற்கு அடையாளம்தான், கடந்த 23-ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட், நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் மக்களுக்கு எதிராக நடந்து கொண்ட பாஜக.வைப் பல்வேறு மாநில மக்களும் புறக்கணித்தார்கள், அப்படி புறக்கணித்த மாநிலங்களை அந்த மாநில மக்களைப் பழிவாங்கும் பட்ஜெட்டாகத்தான், ஒன்றிய நிதி அமைச்சர் தாக்கல் செய்துள்ள பட்ஜெட் அமைந்துள்ளது, ஒட்டுமொத்த இந்திய மக்களுக்காகவும் உருவாக்க வேண்டிய பட்ஜெட்டை 'இந்தியா' கூட்டணிக்கு வாக்களித்த மக்களைப் பழிவாங்க உருவாக்கி இருக்கிறார். இது, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்பால், அவர் ஏற்றுக்கொண்ட பதவிப் பிரமாணத்துக்கே முரணானது.

பத்திரப்பதிவு கட்டணம் விளக்கம்: பட்ஜெட் உரையில் இன்னொன்றும் சொல்லியிருக்கிறார்கள், மாநிலங்களால் விதிக்கப்படும் முத்திரைத் தாள் கட்டணத்தைக் குறைப்போம் என மாநிலங்களைக் கலந்தாலோசிக்காமலேயே பட்ஜெட்டில் அறிவிக்கிறார், ஒன்றிய நிதி அமைச்சர். ஏற்கெனவே ஜி.எஸ்.டி. வரி விதிப்பு முறையைக் கொண்டு வந்து, மாநிலங்களின் வரி விதிப்பு உரிமையை எடுத்துக்கொண்டார்கள். நான் கேட்பது என்னவென்றால், ஜி.எஸ்.டி.யால் தமிழ்நாட்டுக்கு ஏற்பட்டிருக்கும் இழப்பைச் சரிக்கட்டுவதற்கான 20 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பீட்டையே இன்னும் அளிக்காத இந்த ஒன்றிய அரசுக்கு, மாநிலங்களின் வரிவிதிப்பு முறையை மாற்றி அமைக்கும் அதிகாரத்தை யார் கொடுத்தது?

கடந்த பத்தாண்டுகளாக வருமானச் வரிச்சலுகை இன்றித் தவித்துக்கொண்டு இருக்கும் நடுத்தரக் குடும்பங்களுக்கு, வெறும் 17 ஆயிரத்து 500 ரூபாய் சலுகையை மட்டும் வழங்கி, அந்தச் சலுகையும் பெரும்பான்மையோருக்குக் கிடைக்காமல் செய்துகொண்டு, பெரும் வரிச்சலுகை கொடுத்ததாக மார்தட்டிக் கொள்கிறது இந்த ஒன்றிய அரசு.

இது தமிழ்நாட்டைப் பழிவாங்கும் பட்ஜெட் மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்திய நாட்டு மக்களையே பழிவாங்கும் பட்ஜெட், சுயநலத்துக்காக நாற்காலியைக் காப்பாற்றிக் கொள்ளப் போட்டுக்கொண்ட பட்ஜெட் இது ஒன்றிய அரசுக்குத் தமிழ்நாட்டு மக்களின் குரலாக ஏன், இந்திய நாட்டு மக்களின் குரலாக ஒன்று சொல்கிறேன். மேலும் மேலும் தவறு செய்கிறீர்கள், மேலும் மேலும் தோல்விகளைச் சந்திப்பீர்கள், இந்திய நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் கொந்தளிப்பதுபோல, இந்திய மக்களின் மனங்களும் கொந்தளிப்பில் இருக்கிறது. இதற்கு பாஜக பதில் சொல்லியே தீர வேண்டும்" இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:இனி பெருங்களத்தூரில் டிராபிக் கிடையாது.. மேம்பாலம் பணிகளின் தற்போதைய நிலை என்ன?

ABOUT THE AUTHOR

...view details