சென்னை: சென்னை ஐஐடி மாணவர்களால் துவங்கப்பட்ட 'அக்னிகுல்' ஸ்டார்ட் அப் நிறுவனம், 3டி பிரிண்டிங் முறையில் தயாரிக்கப்பட்ட 'அக்னிபான்' என்னும் ராக்கெட்டை ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஏவி இன்று (மே 30) வெற்றிகரமாக பரிசோதனையை மேற்கொண்டது.
'அக்னிபான்' ராக்கெட் குறித்து சென்னை ஐஐடியின் ஏரோ நாட்டிக்கல் இன்ஜினியரிங் துறை பேராசிரியர் எஸ்.ஆர்.சக்ரவர்த்தி ஈடிவி பாரத்திற்கு அளித்த சிறப்பு பேட்டியில், “இன்று விண்ணில் ஏவப்பட்டு பரிசோதித்க்கப்பட்ட அக்னிபான் ராக்கெட்டானது, 3டி பிரிண்டிங் முறையில் முழுமையாக கட்டுப்படுத்தப்பட்ட செமி கிரியோஜெனிக் ராக்கெட் ஆகும்.
அக்னிபான் படைத்துள்ள சாதனைகள்: 3டி பிரிண்டிங் மூலம் செய்யப்பட்ட இயந்திரம் என உலக அளவில் சாதனை படைத்துள்ள இந்த அக்னிபான் ராக்கெட்டில், முதல் முறையாக செமிக்கிரியோ இயந்திரம் பயன்படுத்தப்பட்டு, இந்திய அளவிலும் சாதனை படைக்கப்பட்டுள்ளது. இதுவரை எந்த ஒரு தனியார் நிறுவனமும் முழுமையாக கட்டுப்படுத்தப்பட்ட செயற்கைக்கோள் வாகனத்தை ஏவியது இல்லை, அந்தச் சிறப்பையும் இந்நிறுவனம் அடைந்துள்ளது. இது மூன்றும் எங்களுக்கு மிகப்பெரிய சாதனையாகும்.
சென்னை ஐஐடியில் உள்ள என்.சி.சி.ஆர்.டி மையத்தில் இதன் ஆரம்பகட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதையடுத்து கரோனா தொற்று ஏற்பட்ட காலத்திற்குப் பின், தையூரில் புதிதாக அமைக்கப்பட்ட வளாகத்தில் இதற்கான ஆராய்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அண்மையில், சென்னை ஐஐடியின் ஆராய்ச்சி நிறுவனத்தில் 3டி பிரிண்டிங் ராக்கெட் நிறுவனம் ஒன்று துவக்கி ராக்கெட் தயார் செய்து வருகிறோம். கடந்த 7 ஆண்டுகளாக இதற்கான பணிகள் நடைபெற்று வந்தன.
அக்னிகுல் உருவாக்கப்பட்டதன் முக்கிய நோக்கம்: செயற்கைக்கோளை ஏவ தேவையான ராக்கெட்டை உருவாக்குவதற்குரிய காலத்தினை குறைப்பதே அக்னிகுல் உருவாக்கப்பட்டதன் முக்கிய நோக்கமாகும். ஒரு ராக்கெட்டை செய்வதற்கு அதிக நாட்கள் தேவைப்படும், அவ்வாறூ நாட்கள் அதிகரிக்கையில், அதற்கான செலவுகளும் அதிகமாகும்.
3டி பிரிண்டர் மூலம் ஒரு இன்ஜினை மூன்று நாட்களில் செய்ய முடியும், ஒரு 3டி பிரிண்டரில் 2 இன்ஜின்களை தயாரிக்கலாம். 8 இன்ஜினை ஒரு வாரத்திற்குள் தயாரித்துவிட முடியும், அடுத்த ஒரு வாரத்திற்குள் அதனை பொருத்திவிட்டால், இரண்டு வாரத்திற்குள் விண்வெளிக்குச் செல்லும் ராக்கெட்டை நம்மால் உருவாக்க முடியும். இந்த நோக்கத்துடன் தான் இப்பணியைச் செய்து வருகிறோம், ஆனால், இதனை அடைவதற்கு இன்னும் ஓராண்டு ஆகும்.
இன்று விண்ணில் செலுத்தப்பட்டது விண்வெளிக்குச் செல்லாத, சப் ஆர்பிட்டல் ராக்கெட் ஆகும். அடுத்ததாக விண்வெளிக்குச் செல்லும் ராக்கெட்டை தயாரிக்க உள்ளோம். ஆனால், இதனை செய்வதற்கு பல கட்டங்கள் உள்ளன. இதனையும் தயார் செய்து பரிசோதனை செய்ய உள்ளோம். விண்வெளிக்குச் செல்லும் 3டி ராக்கெட்டை உருவாக்குவதற்கான பணிகளை படிப்படியாக மேற்கொண்டால், 2 ஆண்டுகளுக்குள் வெற்றிகரமாக முடிக்க முடியும் என நம்புகிறோம்.
இன்று மேற்கொள்ளப்பட்ட சோதனை எதற்காக? ஒரு இன்ஜின் பொருத்தப்பட்ட இந்த சப் ஆர்பிட்டல் ராக்கெட்டானது ஸ்ரீ ஹரிகோட்டாவில் உள்ள சதிஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து இன்று பரிசோதிக்கப்பட்டது. ஒரு இன்ஜின் பயன்படுத்தினால் எவ்வளவு தூரம் செல்ல முடியும் என்பதையும், எவ்வளவு கட்டுப்படுத்த முடியும் என்பதையும் தெரிந்துகொள்ள இன்றைய பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.