ஈரோடு:ஈரோடு மாநகராட்சியில் உள்ள 60-வார்டுகளில் 37-வார்டுகள் ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கு உள்ளாக வருகிறது. பரப்பளவில் சிறியதாக உள்ள ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் மொத்தம் 53- வாக்குச்சாவடி மையங்களில் உள்ளன. அதில், உள்ள 237 வாக்குச்சாவடியில் 110,305- ஆண் வாக்காளர்களும், 117,142 பெண் வாக்காளர்களும் 33- மாற்றுப் பாலினத்தவர்களும் என மொத்தம் 227,480 வாக்காளர்கள் உள்ளனர்.
ஈரோடு கருங்கல்பாளையம் காவிரி கரையில் தொடங்கி ஈரோடு மையப் பகுதியில் உள்ள பிராமண பெரிய அக்ரஹாரம் வரை நகரின் மையப்பகுதி அனைத்தும் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உள்ளாக வருகின்றது. கடந்த 2023-ம் ஆண்டு நடைபெற்ற ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் தமிழகமே உற்று நோக்கும் இடைத்தேர்தலாக அமைந்தது.
இந்த இடைத்தேர்தலில் ஆளும் திமுக கட்சியினர் முழு பலத்துடன் அனைத்து துறை அமைச்சர்கள் முதல் கட்சியினர் வரை களத்தில் இறக்கி ஈரோடு மாநகராட்சி 37-வார்டுகளிலும் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டனர். இதன் காரணமாக திமுக-காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் 66,575 வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.
மூன்றாவது முறையாக இடைத்தேர்தல்? :
இந்நிலையில் ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவைத் தொடர்ந்து மீண்டும் இடைத்தேர்தலை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த 2021ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலிலும், அதற்கு பிறகு நடைபெற்ற இடைத்தேர்தலிலும் திமுக தலைமையிலான கூட்டணி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது.
இந்த முறையும் காங்கிரஸ் கட்சிக்கு சீட் ஒதுக்கப்பட்டால் இடைத்தேர்தலின் போது ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு எதிராக போர்க் கொடியைத் தூக்கிய காங்கிரஸ் கட்சி தெற்கு மாவட்ட தலைவர் மக்கள் ஜி.ராஜனுக்கு போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படுமா? அல்லது திமுகவே வேட்பாளரை நிறுத்துமா என்ற எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.