கோயம்புத்தூர்: கோவையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வந்த மை வி3 ஆட்ஸ் (Myv3 Ads) நிறுவனத்துடன் தொடர்பில் இருந்த வி3 யூடியூப் சேனல் (V3 ONLINE TV ) உரிமையாளர் விஜயராகவன், மோசடி புகாரில் இன்று கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
யார் இந்த விஜயராகவன்?நெல்லை மாவட்டத்தை பூர்வீகமாகக் கொண்டவர் விஜயராகவன். இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு மதுரை மற்றும் கோவையில், V3 online TV என்ற நிறுவனத்தை தொடங்கி நடத்தி வந்துள்ளார். பின்னர், ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இந்த நிறுவனத்தின் கிளைகளைத் தொடங்கி, கோடிக்கணக்கில் முதலீடு பெற்ற நிலையில், திடீரென அந்த நிறுவனத்தை மூடியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, இவரது நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த சக்தி ஆனந்தன் அதில் இருந்து வெளியே வந்து, MY V3 ads என்ற நிறுவனத்தை தொடங்கி நடத்தி வந்துள்ளார். இந்த நிறுவனத்திற்கான பணிகளை விஜயராகவன் மேற்கொண்டுள்ளார். மேலும், விஜயராகவனிடம் இருந்த மூலிகைப் பொருட்கள், சித்த மருத்துவ மாத்திரைகளை பெற்று வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்து வந்துள்ளார்.
இதனிடையே, கடந்த மாதம் My V3 ads நிர்வாக இயக்குனர் சக்தி ஆனந்தன் மீது, கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசார், தொழில் நுட்பத்தை பயன்படுத்தி மோசடி செய்வதாக வழக்குப் பதிவு செய்தனர். இதற்கிடையே, Myv3 ads நிறுவனத்தின் உரிமையாளர் விஜயராகவன் எனவும், இது குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தனர்.
போலி பிஎச்.டி பட்டம்: இதனையடுத்து, போலீசார் விஜயராகவனிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்பொழுது, சித்த மருத்துவம், மூலிகை பொருட்கள் உள்ளிட்டவை தயாரிப்பது தொடர்பாக அவரிடம் கேள்வி எழுப்பிய நிலையில், தான் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் இயற்கை மருத்துவம் தொடர்பாக முனைவர் பட்டம் படித்திருப்பதாகக் கூறி சான்றிதழ்களை கொடுத்திருந்தார். அவற்றை போலீசார் ஆய்வு செய்தபோது, அவை போலியான சான்றிதழ்கள் என்பது தெரிய வந்துள்ளது.