சென்னை: பெரம்பூர் பகுதியை பூர்வீகமாக கொண்டு, பெரம்பூர் வேணுகோபால சுவாமி கோயில் தெருவில் வசித்து வந்தவர் ஆம்ஸ்ட்ராங். ஆம்ஸ்ட்ராங்கின் தந்தை, தீவிர பெரியார் சிந்தனை மற்றும் திராவிடர் கழக ஆதரவாளர். பள்ளி காலத்தில் இருந்தே அரசியல் ஆர்வத்துடன் இருந்த ஆம்ஸ்ட்ராங் திருப்பதி வெங்கடேஸ்வரா பல்கலைக்கழகத்தில் சட்டம் படித்து, வழக்கறிஞராக பணியாற்றி வந்தார். 2000-ம் ஆண்டு முதல் தீவிர அரசியலில் ஈடுபடத் தொடங்கிய அவர், பூவை மூர்த்தியின் தலைமையை ஏற்று, புரட்சி பாரதம் என்ற கட்சியில் இணைந்தார்.
பூவை மூர்த்தி மறைவுக்கு பிறகு, அக்கட்சியில் இருந்து விலகி 2006 ல் டாக்டர் பீமாராவ் தலித் அசோசியேஷன் எனும் அமைப்பை அப்பகுதி இளைஞர்களுடன் இணைந்து தொடங்கினார். பிறகு 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் சென்னை மாநகராட்சி கவுன்சிலர் தேர்தலில் 99வது வார்டில் சுயேட்சையாக போட்டியிட்டு வென்று சென்னை மாமன்ற உறுப்பினர் ஆனார் ஆம்ஸ்ட்ராங். அதைத் தொடர்ந்து பகுஜன் சமாஜ் கட்சியில் இணைந்த அவர், 2007-ம் ஆண்டு அக்கட்சியின் மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்டார்.
2006ம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் வன்முறை நடைபெற்றதாக தொடரப்பட்ட வழக்கில், 2007ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பைத் தொடர்ந்து திமுகவின் அப்போதைய தலைவர் கருணாநிதியின் உத்தரவுப்படி, திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி கவுன்சிலர்கள் 98 பேர் ராஜினாமா செய்த நிலையில், அப்போது கூட்டணியில் அங்கம் வகித்த பகுஜன் சமாஜ் கட்சியின் கவுன்சிலரான ஆம்ஸ்ட்ராங் ராஜினாமா செய்ய மறுத்தது பெரும் பரபரப்பாக பேசப்பட்டது.
2011 சட்டப்பேரவை தேர்தலில் கொளத்தூர் தொகுதியில், மு.க.ஸ்டாலினை எதிர்த்து போட்டியிட்டார். அந்தத் தேர்தலில் கணிசமான வாக்குகளை பெற்று, அனைவரின் கவனத்தையும் பெற்றார். 2016 சட்டப்பேரவை தேர்தலிலும் போட்டியிட்டார். 17 ஆண்டுகளாக தொடர்ந்து, பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக செயல்பட்டு வந்த அவர் நேற்று இரவு படுகொலை செய்யப்பட்டார்.
மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவராக நீண்ட காலமாக இருந்த ஆம்ஸ்ட்ராங், வடசென்னையில் உள்ள பெரம்பூர் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்தார். சட்டப்படிப்பு படித்திருந்த இவர் ஆரம்ப காலத்தில் அடிதடி, மோதல் உட்பட பல்வேறு குற்ற வழக்குகளில் சிக்கினார். பின்னர், நீதிமன்றம் சென்று தன் மீதான அனைத்து வழக்குகளிலும் இருந்து விடுதலையானார்.
இருப்பினும் பழைய குற்ற வழக்குகளில் இவரால் பாதிப்புக்கு உள்ளானவர்கள் வெவ்வேறு குழுக்களாக செயல்பட்டு அவரை பழிவாங்க காத்திருந்ததாக கூறப்படுகிறது. ஆனால், ஆம்ஸ்ட்ராங் மிகவும் செல்வாக்கு மிக்கவராக வலம்வந்தார். அவரது ஆதரவாளர்கள் நிழல் போல் 24 மணி நேரமும் உடனிருந்து வந்ததாக தெரிகிறது.