தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

யார் இந்த சி.அன்புமணி? - எப்போதும் இடைத்தேர்தலை புறக்கணிக்கும் பாமக இம்முறை போட்டியிடுவது ஏன்? - Vikravandi by Election

Vikravandi by Election: காலியாக உள்ள விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பாஜக கூட்டணியில் பாமக சார்பில் சி.அன்புமணி வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். சி.அன்புமணி பின்புலம் குறித்தும், இத்தொகுதியில் பாமகவின் பலம் குறித்தும் இச்செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.

அன்புமணியுடன் பாமக வேட்பாளர் சி.அன்புமணி
அன்புமணியுடன் பாமக வேட்பாளர் சி.அன்புமணி (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 16, 2024, 12:00 PM IST

Updated : Jun 16, 2024, 12:30 PM IST

விழுப்புரம்:விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதியின் எம்.எல்.ஏவாக இருந்த திமுகவைச் சேர்ந்த புகழேந்தி, கடந்த ஏப்ரல் 5ஆம் தேதி, நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்தின்போது மேடையிலேயே மயங்கி விழுந்தார். தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி ஏப்ரல் 6ஆம் தேதி உயிரிழந்தார். அதன் காரணமாக, அந்தத் தொகுதிக்கு வரும் ஜூலை 10ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. ஜுலை 13ஆம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

திமுக ஏற்கெனவே அன்னியூர் சிவா-வை முதலாவதாக அறிவித்து 9 அமைச்சர்கள், கூட்டணி கட்சிகளின்‌ ஆதரவுடன் தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டது. சீமானும் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக மருத்துவர் அபிநயா பொன்னிவளவனை வேட்பாளராக அறிவித்துவிட்டார். தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில், பாமக வேட்பாளராக பனையூர் சி. அன்புமணியை நேற்று அறிவிக்கப்பட்டுள்ளார்.

பாமக வேட்பாளர்:இடைத்தேர்தல் ஒருபோதும் நேர்மையாக நடைபெறாது. ஆளும் கட்சிக்கு சாதகமாகவே நடைபெறும். இடைத்தேர்தலில் ஜனநாயகத்தை விட பணநாயகம் அதிகம் காணப்படும். எனவே பாமக ஒருபோதும் இடைத்தேர்தலில் போட்டியிடாது என்கிற கொள்கையில் இருந்த மருத்துவர் ராமதாஸ் யாரும் சற்று எதிர்பாராவிதமாக, நேற்றைய தினம் சி.அன்புமணியை தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி சார்பில் வேட்பாளராக களம் இறக்கி உள்ளார்.

விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதியில், வன்னியர் அதிகம் வசிப்பதால் பாமகவுக்கு நல்ல வாக்கு வங்கி இருக்கிறது. இதை கருத்தில் கொண்டே பாட்டாளி மக்கள் கட்சி போட்டியிட்டால் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கும் என்கிற எண்ணத்தில் தான் தேசிய ஜனநாயக கூட்டணி, பாமக வேட்பாளரை இறக்கி உள்ளதாக அரசியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர். இத்தேர்தலில் யாரை வேட்பாளராக நிறுத்தலாம் என்று தைலாபுரம் தோட்டத்தில், கடந்த மூன்று நாட்களாகவே பாமக மற்றும் கூட்டணி கட்சியினரிடையே நீண்ட நெடிய விவாதம் நடைபெற்று வந்தது.

இந்த விவாதத்தில் பாமக விழுப்புரம் மாவட்ட தலைவர் தங்கஜோதி, விழுப்புரம் மாவட்ட முன்னாள் செயலாளரான புகழேந்தி, வழக்கறிஞர் பாலு, விழுப்புரம் மாவட்ட முன்னாள் செயலாளரும் தற்போது வன்னியர் சங்கத்தின் மாநில துணைத்தலைவராக இருக்கும் அன்புமணி ஆகிய நான்கு நால்வரின் பெயர்கள் அடிபட்டுள்ளது. இறுதியாக சி.அன்புமணி வேட்பாளராக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளார்.

விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கு நன்கு பரிச்சயமானவர், மூத்த நிர்வாகி கட்சியினரிடையே அனுசரித்து செல்பவர், மேலும் இதற்கு முன்னதாக இதே தொகுதியில் போட்டியிட்டு வன்னியர் வாக்குகளை பெற்றவர் போன்ற பல காரணங்களால் அவருக்கு மருத்துவர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் வாய்ப்பு வழங்கியுள்ளதாக பாமகவினரிடையே பேச்சு எழுந்துள்ளது.

யார் இந்த சி.அன்புமணி?: தற்போது 58 வயதாகும் சி.அன்புமணி (B.A., DLL) இளங்கலை மற்றும் தொழிலாளர் சட்டத்தில் டிப்ளமோ) படித்தவர். இவருடைய தந்தை சின்னக்கண்ணு. விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த இவர், பனையபுரம் அஞ்சல், விக்கிரவாண்டி வட்டம், விழுப்புரம் மாவட்டம் பகுதியில் வசித்து வருகிறார். இவருடைய மனைவி ஜெயலட்சுமி பள்ளியில் தலைமை ஆசிரிரியராக பணிபுரிந்து வருகிறார்.

ஆரம்பகாலம் முதல் இன்று வரை:1982ஆம் ஆண்டு வன்னியர் சங்க கிளை செயலாளராகவும், 1986ஆம் ஆண்டு வன்னியர் சங்க ஒன்றிய செயலாளராகவும் பதவி வகித்துள்ளார். 1992ஆம் ஆண்டு வன்னிய சங்க மாவட்ட தலைவர் மற்றும் பாமக மாவட்ட துணை செயலாளராக பணியாற்றினார். 2001 ஒன்றிய கவுன்சிலராகவும் (முண்டியம்பாக்கம்) 2000 முதல் 2024 தற்போது வரை வன்னியர் சங்க மாநில துணைத் தலைவராக உள்ளார். மேலும் 2016 விக்கிரவாண்டி சட்டமன்ற வேட்பாளராக களம் கண்டுள்ளார்.

விக்கிரவாண்டியில் பாமகவின் பலம் என்ன?:தொகுதி மறுசீரமைப்பில் 2011-ல் தான் விக்கிரவாண்டி தொகுதி உருவானது. அந்தத் தேர்தலில் திமுக கூட்டணியில் பாமக அங்கம் வகித்தது. ஆனால், அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட சி.பி.எம் வேட்பாளர் ராமமூர்த்தி வெற்றி பெற்றார். 2016ஆம் ஆண்டு நடைபெற்ற விக்கிரவாண்டி சட்டமன்றத் தேர்தலில் அதிமுக 56 ஆயிரத்து 622 வாக்குகளும், திமுக 63 ஆயிரத்து 203 வாக்குகளும், பாமக 41 ஆயிரத்து 428 வாக்குகளும் பெற்றிருந்தன. இதில் மொத்த வாக்குகளில் 23.19 சதவீத வாக்குகளை பாமக பெற்றது. இத்தேர்தலில் பாமக வேட்பாளராக தற்போது களமிறக்கப்பட்டுள்ள சி.அன்புமணி போட்டியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

2019-ல் நடந்த இடைத்தேர்தலில், பாமக - அதிமுக கூட்டணியில், அதிமுக சார்பில் போட்டியிட்ட முத்தமிழ் செல்வன் வெற்றி பெற்றார். அதிமுகவின் வெற்றியில் பாமகவின் பங்கு அதிகம் என அப்போது அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டது.

தொடர்ந்து 2021ஆம் ஆண்டு தேர்தலில் பாமக, அதிமுக கூட்டணியில் அங்கம் வகித்தது. இதில் திமுக வேட்பாளர் புகழேந்தி வெற்றி பெற்றார். தொடர்ந்து 2024ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில், விழுப்புரம் மக்களவைத் தனி தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பாமக போட்டியிட்டது. இதில் விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதியும் அடங்கும். இத்தேர்தலில் பாமக சார்பில் போட்டியிட்ட முரளி சங்கர், விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதியில் மட்டும் 32 ஆயிரம் வாக்குகளைப் பெற்று மூன்றாம் இடம்பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அதிமுக புறக்கணிப்பதாக அறிவித்துள்ள நிலையில், திமுக vs பாமக என இருமுனைப் போட்டியாக களம் மாறியுள்ள நிலையில், இத்தேர்தலில் வெற்றி பெறப்போவது யார் என்பது ஜுலை 13 ஆம் தேதி தெரிந்துவிடும்.

இதையும் படிங்க:யார் இந்த அன்னியூர் சிவா? முதல்முறை தேர்தலில் களமிறக்கும் திமுக..! - VIKRAVANDI BY ELECTION

Last Updated : Jun 16, 2024, 12:30 PM IST

ABOUT THE AUTHOR

...view details