சென்னை:முன்னாள் இந்தியப் பிரதமர்கள் சவுத்ரி சரண் சிங், பி.வி.நரசிம்ம ராவ், மற்றும் வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் ஆகியோருக்கு 'பாரத ரத்னா' விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில், அண்மையில் மறைந்த வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன், தமிழ்நாட்டின் தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஆவார்.
யார் இந்த எம்.எஸ்.சுவாமிநாதன்? தஞ்சை மாவட்டம், கும்பகோணத்தில் 1925ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7ஆம் தேதி பிறந்தவர் எம்.எஸ்.சுவாமிநாதன். இவரது முழுப்பெயர் மான்கொம்பு சாம்பசிவம் சுவாமிநாதன். அதனைச் சுருக்கி எம்.எஸ்.சுவாமிநாதன் என்று அழைக்கிறோம். கும்பகோணத்தில் பள்ளிப்படிப்பை முடித்ததும், திருவனந்தபுரம் மஹாராஜா கல்லூரியில் விலங்கியல் பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றார்.
சுவாமிநாதனின் தந்தை மருத்துவர் என்பதால், எம்.எஸ்.சுவாமிநாதனும் மருத்துவராகி, தந்தையின் மருத்துவமனையை கவனித்துக் கொள்ள வேண்டும் என அவரது பெற்றோர் ஆசைப்பட்டனர். ஆனால், வங்கத்தில் 1942ஆம் ஆண்டு ஏற்பட்ட பஞ்சம் சுவாமிநாதனை வெகுவாக பாதித்தது. அதன் விளைவாக, வேளாண் துறையில் ஆராய்ச்சி செய்ய முடிவுவெடுத்தார்.
பின்னர், கோயம்புத்தூர் வேளாண் கல்லூரியில் இளநிலைப் பட்டமும், டெல்லியில் மரபணு பயிர்கள் குறித்த முதுநிலைப் பட்டமும் பெற்றார். ஐபிஎஸ் அதிகாரியாக 1948ஆம் ஆண்டு தேர்வானார், இருந்தும் பணியில் சேரவில்லை. பல ஆய்வு நிறுவனங்களில் பணியாற்றி, கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்தையும் அவர் பெற்றார். சிறந்த ஆராய்ச்சியாளரான எம்.எஸ்.சுவாமிநாதன், நூற்றுக்கணக்கான ஆராய்ச்சிக் கட்டுரைகளையும், புத்தகங்களையும் எழுதியுள்ளார்.
கோதுமை புரட்சி: அமெரிக்காவின் விஸ்கான்சின் பல்கலைக்கழகத்தில் வேலை கிடைத்தும், 1954-இல் நாடு திரும்பினார். ஒடிசா மாநிலம் கட்டாக்கில் வேளாண் துறையில் அரசுப் பணி கிடைத்தது. 1960-களில் உணவுப் பஞ்சம் ஏற்பட்டபோது, அமெரிக்காவில் இருந்து கோதுமை இறக்குமதி செய்யப்பட்டது.
இந்தியர்களால் உணவு உற்பத்தி செய்ய முடியாது. பசியால் கொத்துக் கொத்தாக உயிரிழப்பார்கள் என்று பல நாடுகள் கூறியது. இதை பொறுத்துக்கொள்ள முடியாத எம்.எஸ்.சுவாமிநாதன், ஜப்பானில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய ரக கோதுமையை இந்தியாவில் அறிமுகம் செய்து அதிக உற்பத்தியையும், 200 சதவீத்துடன் லாபத்தையும் கொடுத்து சாதித்துக் காட்டினார்.
இதை 'கோதுமை புரட்சி' என்று பாராட்டினார், அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி. சீன நெல் வகைகளை அறிமுகம் செய்து, நெல் விளைச்சலிலும் இந்தியாவை தன்னிறைவு பெற வைத்து, நாட்டின் முதுகெலும்பான வேளாண் துறையில் அபரிமித வளர்ச்சியை ஏற்படுத்தி, உலக அரங்கில் இந்தியாவை தலைநிமிரச் செய்தவர். இந்தியா, உணவுப் பொருட்களை இறக்குமதி செய்த நிலை மாறி, வேளாண் உற்பத்தி பொருட்களை உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் நிலையை உருவாக்கி காட்டியதில் எம்.எஸ்.சுவாமிநாதனின் பங்கு அளப்பறியது.
'பட்டினி இல்லாத இந்தியாதான் என் கனவு' எனக் கூறிய எம்.எஸ்.சுவாமிநாதன், 1988-இல் ஆராய்ச்சி அறக்கட்டளையை நிறுவினார். இந்தியாவில் மட்டுமின்றி, உலக அளவிலும் புகழ்பெற்ற ஆய்வு நிலையங்களில் பேராசிரியர், ஆராய்ச்சி நிர்வாகி, தலைவர் ஆகிய பதவிகளை வகித்தார். இதுமட்டுமின்றி, மத்திய வேளாண்மை துறைச் செயலாளர், மத்திய திட்டக் குழு உறுப்பினர் போன்ற பதவிகளையும் வகித்தவர்.
வேளாண் புரட்சியில் அளப்பறிய சாதனைகளை புரிந்த எம்.எஸ்.சுவாமிநாதன், உலகம் முழுவதும் சுமார் 38 பல்கலைக்கழகங்களில் கவுரவ டாக்டர் பட்டம், கொலம்பியா பல்கலைக்கழகத்தின் 'வால்வோ' விருது, ராமன் மகசேசே விருது, பத்ம விபூஷன் விருது உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட விருதுகளுக்குச் சொந்தக்காரர். தனது 90 வயதிலும் சுறுசுறுப்புடன் வேளாண் ஆராய்ச்சியில் ஈடுபட்டவர் என்ற பெருமை இவரையே சேரும்.
இந்த நிலையில், முன்னாள் இந்தியப் பிரதமர்கள் சவுத்ரி சரண் சிங், பி.வி.நரசிம்ம ராவ், மற்றும் வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் ஆகியோருக்கு 'பாரத ரத்னா' விருது அறிவிக்கப்பட்டுள்ளது. விவசாயம் மற்றும் விவசாயிகள் நலனில், டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன் ஆற்றிய மகத்தான பங்களிப்பைப் போற்றும் வகையில், இந்திய அரசு பாரத ரத்னா விருதை வழங்குவது மகிழ்ச்சியளிக்கிறது.
இதையும் படிங்க: சரண் சிங், பி.வி.நரசிம்ம ராவ், எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு பாரத ரத்னா விருது - பிரதமர் மோடி அறிவிப்பு