சென்னை:பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த மாதம் 5ம் தேதி வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில், ரவுடி நாகேந்திரனின் மகனும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி இளைஞரணி நிர்வாகியுமான அஸ்வத்தாமன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்நிலையில், ஆம்ஸ்ட்ராங் அஸ்வத்தாமன் இருவருக்கும் இடையே கடந்த 2023ம் ஆண்டு முதல் முன்விரோதம் இருந்து வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மீஞ்சூர் கொண்டக்கரை பகுதியை சேர்ந்த தொழிலதிபரான ஜெயபிரகாஷ், கொண்டக்கரையில் ஒப்பந்த அடிப்படையில் கட்டுமான பணிகளை மேற்கொண்டு வந்தார்.
பின்னணி என்ன?:இந்நிலையில், கடந்த 2023ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஒப்பந்த பணிகளை ஜெயபிரகாஷ் பார்வையிட சென்ற போது, ரவுடியின் மகனும் தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் முதன்மை பொதுச் செயலாளருமான அஸ்வத்தாமன், ஜெயபிரகாஷ்யை மிரட்டி பணம் கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது.
அப்போது, ஜெயபிரகாஷ் பணம் தர மறுத்த நிலையில், இதனால் ஆத்திரமடைந்த அஸ்வத்தாமன் துப்பாக்கியை காட்டி மிரட்டி, ஜெயபிரகாஷை தன் ஆட்களுடன் சேர்ந்து காரில் கடத்தி சென்று மாமூல் கொடுக்கவில்லை என்றால் உயிர் வாழ முடியாது எனக்கூறி மீண்டும் கொண்டக்கரை பகுதியில் இறக்கிவிட்டதாக கூறப்படுகிறது.
இதனால், அச்சமடைந்த ஜெயபிரகாஷ் யாரிடம் உதவி கேட்பது என யோசித்து ஆம்ஸ்ட்ராங்கின் உதவியை நாடியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொடுத்த தைரியத்தின் பேரில்தான் நாகேந்திரன் மகன் அஸ்வத்தாமன் மீது ஜெயபிரகாஷ் மீஞ்சூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் என்றும் கூறப்படுகிறது.
ஜெயபிரகாஷ் அளித்த புகாரின் அடிப்படையில், போலீசார் வழக்குப் பதிவு செய்து அஸ்வத்தாமனை தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் கடந்த 2023 ஆகஸ்ட் மாதம் பெங்களூரில் இருந்து சென்னைக்கு காரில் வந்த அஸ்வத்தாமனை ஆவடி மாநகர போலீசார் சுற்றி வளைத்தனர். மேலும், அஸ்வத்தாமனிடமிருந்த துப்பாக்கியும் பறிமுதல் செய்யப்பட்டது.
சிறையில் இருக்கும் தந்தை மூலம் நடவடிக்கை: போலீசார் தன் மீது வழக்குப்பதிவு செய்ததற்கும் கைது செய்வதற்கும் முக்கிய காரணம் ஆம்ஸ்ட்ராங் தான் என கருதிய அஸ்வத்தாமன் இது பற்றி சிறையில் இருக்கும் தனது தந்தை நாகேந்திரனிடம் தெரிவித்துள்ளார். இத்னால் ஆத்திரம் அடைந்த நாகேந்திரன் சிறையில் இருந்த வாரே செல்போனில் ஆம்ஸ்டராங்கை தொடர்பு கொண்டு ஒரு முறை மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.
தொழிலதிபர் ஜெயபிரகாஷ் கடத்தல் வழக்கில் சிறையில் இருந்து வெளிவந்த பின் அஸ்வத்தாமன் நேரடியாக ஆம்ஸ்ட்ராங்கை சந்தித்து, அப்பா (நாகேந்திரன்) பேசுவதாக கூறி செல்போனை கொடுத்து பேச வைத்ததாகவும் தெரியவருகிறது. அப்போது ஜெயபிரகாஷ் கடத்தல் வழக்கை வாபஸ் பெற்று, அந்த விவாகரத்தை சுமூகமாக முடிக்குமாறு நாகேந்திரன் தரப்பில் கேட்கப்பட்டுள்ளது.
ஆனால் ஆம்ஸ்ட்ராங் இதற்கு உடன்படவில்லை என்றும் கூறப்படுகிறது. இதனால் நாகேந்திரன் கோபமடைந்த நிலையில் ஆம்ஸ்ட்ராங்குடன் செல்போனில் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் இதன் எதிரொலியாகவும்தான் கூலிப்படையை ஏவி ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், ஆம்ஸ்ட்ராங் வழக்கில் தொடர்ந்து குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் காங்கிரஸ் நிர்வாகி கைது.. போலீசார் நூல் பிடித்தது எப்படி? காங்கிரஸ் தலைமை நடவடிக்கை என்ன? - ARMSTRONG MURDER CASE