விக்கிரவாண்டி: விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி எம்எல்ஏவாக இருந்த நா.புகழேந்தி, உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் 5ம் தேதி மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தின்போது மேடையிலேயே மயங்கி விழுந்தார். அதனை தொடர்ந்து சிகிச்சை பலனின்றி ஏப்ரல் 6-ஆம் தேதி காலமானார்.
இதனால் விக்கிரவாண்டி தொகுதி காலியாக இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன் தொடர்ச்சியாக, விக்கிரவாண்டி தொகுதிக்கு ஜூலை 10-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்றும் வேட்புமனுத் தாக்கல் ஜூன் 14 அன்று துவங்கும் என்றும் அறிவிப்பு வெளியிட்டது.
இதனையடுத்து, விக்கிரவாண்டி தொகுதி இடைத் தேர்தல் தொடர்பாக அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும், முதல்வருமான மு.க. ஸ்டாலின் தலைமையிலான ஆலோசனை நடைபெற்றது. இதனையடுத்து, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தோழமைக் கட்சிகள் ஆதரவுடன் திமுக வேட்பாளராக, அன்னியூர் சிவா போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது.
அன்னியூர் சிவா அரசியல் பயணம்
1971-ம் ஆண்டு, ஏப்ரல் 3ம் தேதி பிறந்த அன்னியூர் சிவா, பி.ஏ., இளங்கலை பட்டம் படித்துள்ளார். இவருக்கு வனிதா என்ற மனைவியும், அர்ஷிதா சுடர் என்ற மகளும், திரிலோக் ஹரி என்ற மகனும் உள்ளனர். இவர் 1987-ம் ஆண்டு திமுகவில் இணைந்து, 1988ல் தபால் நிலையங்களில் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் கைதாகி சிறைக்கு சென்றுள்ளார்.
பின்னர் 1989ல் இளைஞர் அணி துணை அமைப்பாளராகவும், 1996 ஆண்டு அன்னியூர் கூட்டுறவு வங்கித் தலைவராகவும் பதவி வகித்தார். அதனை தொடர்ந்து, 2002ம் ஆண்டு ஒன்றுபட்ட விழுப்புரம் மாவட்டத்தில் பொதுக்குழு உறுப்பினராக பதவி வகித்தார். 2020ம் ஆண்டு மாநில விவசாய அணி துணை அமைப்பாளராகவும், தற்போது விவசாய தொழிலாளர் அணி செயலாளர் பொறுப்பிலும் உள்ளார்.
இதுவரை அன்னியூர் சிவா, உள்ளாட்சி தேர்தல் உட்பட மக்களால் தேர்வு செய்யப்படும் எந்த தேர்தலிலும் போட்டியிடாமல், நேரடியாக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுகிறார்.
மேலும், விக்கிரவாண்டி தொகுதியில் வன்னியர் வாக்குகள் அதிகம் உள்ள நிலையில் திமுக தலைமை வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த அன்னியூர் சிவாவிற்கு வாய்ப்பு வழங்கியுள்ளது. அன்னியூர் சிவா திமுகவில் அடிப்படைத் தொண்டனாக இருந்து தன்னை வளர்த்துக் கொண்டவர். முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு நன்கு பரிச்சயமானவரும்கூட.. மேலும், உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடியின் முழு ஆதரவுடன் தற்போது விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் களமிறக்கப்பட்டுள்ளார்.
கட்சி இளைஞர்களிடம் எளிதில் பழகக்கூடிய சிவா, கழக நிகழ்ச்சிகள் அனைத்திலும் தவறாமல் கலந்து கொள்வார் எனவும் சொல்லப்படுகிறது. திமுக, நாம் தமிழர் கட்சி ஆகிய இரண்டு கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்த நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பாக பாட்டாளி மக்கள் கட்சி போட்டியிடும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று அறிக்கை வெளியிட்டிருந்தார்.
ஆனால், இதுவரை அதிமுக வேட்பாளர் இறுதி செய்யப்படவில்லை. விழுப்புரம் மாவட்டம் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸின் பூர்வீகம் என்பதால், பாமக நன்கு பரிச்சயமான வேட்பாளர் ஒருவரை அறிவிக்கும்பட்சத்தில் திமுக மற்றும் பாமக இடையே கடும் போட்டி எழும் என அரசியல் ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
அதேபோல, அதிமுக சார்பில் முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் கைகாட்டும் நபரே வேட்பாளராக இறக்கப்படுவார் என தெரிகிறது. இவர் வன்னியர் ஓட்டுகளை பெறுவதில் தேர்தல் வியூகம் அமைத்து எப்படியாவது வெற்றி பெற்று, விழுப்புரம் மாவட்டத்தில் தன் கைதான் ஓங்கி உள்ளது என நிரூபிப்பார் என விக்கிரவாண்டி அதிமுகவினரிடையே ஓர் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இதையும் படிங்க:அதிமுகவில் மற்றொரு அணி.. எடப்பாடிக்கு அழுத்தம்? - தலைவர்கள் கூறுவது என்ன?