சென்னை: தமிழ்நாட்டில் உள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்றத் தொகுதி என 40 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும் ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வாக்குப்பதிவு நாள் அன்று வாக்குச்சாவடியில் பணியாற்றுவதற்கு வாக்குச்சாவடி தலைமை அதிகாரி உட்பட 4 பேர் நியமனம் செய்யப்படுவார்கள். அவர்களுக்கு தேர்தலின் போது எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதற்காக 3 கட்ட பயிற்சி அளிக்கப்படும்.
இந்தப் பயிற்சியின் போது வாக்குச்சாவடியில் பணியாற்றுவதற்கு தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு, அவர்கள் பணியாற்றும் பள்ளி அல்லது அலுவலகத்தின் மூலம் தகவல் அளிக்கப்படும். வாக்குச்சாவடியில் பணியாற்றுவதற்கான பணியாளர்கள் விவரத்தை தேர்தல் ஆணையம் அந்தந்த துறைகளில் இருந்து முன்கூட்டியே பெற்றுக் கொள்ளும்.
அதன் அடிப்படையில், மாவட்டத் தேர்தல் நடத்தும் அலுவலர் உத்தரவின்படி பயிற்சி அளிக்கப்படும். தமிழ்நாட்டில் 6 கோடியே 23 லட்சத்து 33 ஆயிரத்து 925 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இதில் 3 கோடியே 6 லட்சத்து 5 ஆயிரத்து 793 ஆண்களும், 3 கோடியே 17 லட்சத்து 19 ஆயிரத்து 665 பெண்களும், 8,467 மூன்றாம் பாலினத்தவரும் அடங்குவர்.
முதல் முறை வாக்களிக்கக்கூடிய வாக்காளர்களின் எண்ணிக்கை 10 லட்சத்து 92 ஆயிரத்து 420 பேர். மேலும், 120 வயதிற்கு மேற்பட்ட 55 பேரும், 100 வயதிற்கு மேற்பட்ட 5,368 பேரும், 90 வயதிற்கு மேற்பட்ட 2 லட்சத்து ஆயிரத்து 37 பேரும் தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளில் 68,144 வாக்குச்சாவடிகளில் வாக்களிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 85 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் படிவம் 12 டி பயன்படுத்தி வாக்களிக்கலாம்.
தேர்தல் பணியில் 4 லட்சம் பணியாளர்கள் ஈடுபட உள்ளனர். சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டமன்றத் தொகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள 3,726 வாக்குசாவடிகளில் பணியாற்றுவதற்கு 19 ஆயிரத்து 396 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கான முதல்கட்ட பயிற்சி கடந்த மார்ச் 24ஆம் தேதி நடைபெற்றது.