சென்னை: தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தில் படித்த 10ஆம் வகுப்பு மாணவர்கள் எழுதிய பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளன. இதன்படி, 4 லட்சத்து 47 ஆயிரத்து 61 மாணவிகள், 4 லட்சத்து 47 ஆயிரத்து 203 மாணவர்கள் என மொத்தம் 8 லட்சத்து 94 ஆயிரத்து 264 மாணவர்கள் தேர்வு எழுதினர்.
இவர்களில் 4 லட்சத்து 22 ஆயிரத்து 591 மாணவிகள், 3 லட்சத்து 96 ஆயிரத்து 152 மாணவர்கள் என மொத்தம் 8 லட்சத்து 18 ஆயிரத்து 743 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதன் அடிப்படையில், 94.53 சதவீத மாணவிகள், 88.58 சதவீத மாணவர்கள் என மொத்தம் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 91.55 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மேலும், வழக்கம்போல் மாணவர்களை விட 5.95 சதவீதம் மாணவிகள் அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதேநேரம், பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான முதல் துணைத் தேர்வு ஜூலை 2 முதல் நடைபெறும் எனவும், 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் நகல் வருகிற மே 15ஆம் தேதி முதல் பெற்றுக் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.