சென்னை:வீல் சேர் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் விளையாட்டு பயிற்சிகள் மூலம், பாரா ஒலிம்பிக் வீரர்களுக்கான மேம்பாடு குறித்து ஐஐடி ஆலோசனை செய்ய வசதியாக இருக்கும் என ஐஐடி பேராசிரியர் சத்தியநாராயணன் சென்னையில் நடந்த "திறமை - அனைவருக்கும் விளையாட்டு" பயிற்சி நிகழ்வில் தெரிவித்துள்ளார்.
சென்னை ஐஐடி-யில் விளையாட்டுப் போட்டிகளில் ஆர்வம் உள்ள மாற்றுத்திறனாளிகளை ஊக்குவிக்கும் வகையில், 'திறமை ஸ்போர்ட்ஸ் பார் ஆல்' (Thiramai Sports 4 all) எனும் விளையாட்டு பயிற்சி நேற்று (நவ.22) வெள்ளிக்கிழமை முதல் தொடங்கப்பட்டது. நேற்று தொடங்கிய இந்த பயிற்சி நவ.24 ஆம் தேதி வரை மூன்று நாட்கள் நடைபெறுகிறது. இந்த திறமை விளையாட்டு பயிற்சி முகாமில், 100க்கும் மேற்பட்ட வீல் சேர் மாற்றுத்திறனாளிகள் பங்கேற்றுள்ளனர்.
மேலும், சக்கர நாற்காலி கூடைப்பந்து, சக்கர நாற்காலி பூப்பந்து, சக்கர நாற்காலி டென்னிஸ், சக்கர நாற்காலி கிரிக்கெட், சக்கர நாற்காலி பந்தயம், டேபிள் டென்னிஸ், ஈட்டி எறிதல், வட்டு எறிதல், குண்டு எறிதல் மற்றும் போசியா 7 வகையான விளையாட்டுப் போட்டிகளுக்கு பயிற்சியாளர்கள் உதவியுடன் பயிற்சி வழங்கப்படுகின்றது.
இந்த விளையாட்டுப் போட்டிகளில் ஆர்வமுடைய, எவ்வித முன் அனுபவமும் இல்லாத மாற்றுத்திறனாளிகளுக்கு 3 நாட்கள் வழங்கப்படும் இந்த பயிற்சியின் மூலம், புத்துணர்வு பெற்று தங்களின் குறைகளைக் கண்டு ஒதுங்காமல், இயல்பாக விளையாடும் ஒரு வாய்ப்பாக அமையக்கூடும் என ஒருங்கிணைப்பாளர்கள் தரப்பில் கூறப்படுகிறது.
மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு பயிற்சி (ETV Bharat Tamil Nadu) வீல் சேர் மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப் பயிற்சியை, சென்னை ஐஐடி மாணவர்களின் டீன், பேராசிரியர் சத்தியநாராயணன் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக, இந்திய மாற்றுத் திறனாளிகள் கிரிக்கெட் அணி வீரர் சுரேஷ் செல்வம் கலந்து கொண்டார்.
விமர்சனங்கள் குறித்து கவலைப்படவில்லை: இந்நிகழ்ச்சி குறித்து மேடையில் பேசிய இந்திய மாற்றுத்திறனாளி கிரிக்கெட் வீரர் சுரேஷ் செல்வம், "எங்கள் ஊரில் நான் கிரிக்கெட் விளையாடும் போது, என்னை யாரும் மதிக்கவில்லை. அடுத்தடுத்து பயணித்து தான் நான் இயல்பான முறையில் கிரிக்கெட் விளையாடப் பழகினேன். எனக்கு ஓட முடியாது, எனக்கு பை ரன்னர் வைத்து தான் நான் விளையாடுவேன். ஆனால் நான் நன்றாக பந்து வீசுவேன். திருவண்ணாமலை மாவட்டத்தில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் மூலம் நடத்தப்படும் முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளேன்.
இதையும் படிங்க:மருத்துவரிடம் பிழைத்து வண்டலூர் பூங்காவில் இறந்த குரங்கு குட்டி
பொதுவாகவே ஒத்துழைப்பு வழங்க பல பேர் இருப்பார்கள். ஆனால் உங்களின் தனிப்பட்ட முயற்சி தான் உங்களை உயர்த்தும். கடந்த 1 வருடமாக தான் நான் வீல் சேர் கிரிக்கெட் விளையாடுகிறேன். அனைவரும் என்னிடம் இது கடினமாக இருக்கும் எனக் கூறினார்கள். ஆனால் நான் அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல், இந்த இடத்திற்கு வந்திருக்கிறேன்," எனக் கூறினார்.
ஆர்வத்திற்காகவே பாராட்ட வேண்டும்; விளையாட்டுப் பயிற்சியைத் தொடங்கி வைத்துப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சென்னை ஐஐடி டீன் (மாணவர்கள் பிரிவு) சத்யநாராயணன், "திறமை நிகழ்ச்சியின் மூலம் எண்ணற்ற மாற்றுத் திறனாளிகள் தங்களின் குறைகளைக் களைந்து வெளியே வந்து தங்கள் திறனை வெளிப்படுத்துவார்கள். சென்னை ஐஐடி இந்த விளையாட்டுப் போட்டிகள் வாயிலாக மாற்றுத் திறனாளிகளுக்கு, வீல் சேர் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க எந்தெந்த மாதிரியான கட்டமைப்புகளை மேம்படுத்த முடியும் என்ற ஆராய்ச்சி மேற்கொள்ள ஏதுவாக இருக்கும்.
சென்னை ஐஐடி டீன் சத்யநாராயணன்,மாற்றுத்திறனாளி கிரிக்கெட் வீரர் சுரேஷ் பேட்டி (ETV Bharat Tamil Nadu) இந்த போட்டியின் மூலம் அவர்களின் திறனைக் கண்டறிந்து, அவர்கள் அடுத்தகட்டத்திற்குச் செல்ல பயிற்சியாளர்கள் உதவி செய்வார்கள். இத்தனை நபர்கள் இங்கு வந்திருப்பது அவர்களுக்கு ஒரு தன்னம்பிக்கையும், தைரியமும் கொடுக்கிறது. தற்போது தான் அவர்கள் வெளியே வர ஆரம்பித்து உள்ளார்கள். மற்றவர்களை போல் விளையாட்டில் ஆர்வம் கொண்டு, பங்கேற்பதற்காக ஆர்வமாக வருகின்றனர். இதற்காகவே அவர்களை பாராட்ட வேண்டும்.
ஐஐடி-யில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான சலுகைகள்: சென்னை ஐஐடியில் 150 மாற்றுத்திறனாளி மாணவர்கள் உள்ளனர். அவர்களை ஊக்குவிக்கும் வகையில் உள்ளடக்கிய கல்வி முயற்சியின் கீழ் பல்வேறு சேவைகளை ஐஐடி வழங்கி வருகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கான பயிற்சி, கல்வித் தங்குமிடங்கள், தன்னார்வ சேவைகள், அணுகக்கூடிய கற்றல் வளங்களை வழங்குதல் போன்ற சேவைகளை வழங்கத் தேவையான கட்டமைப்புகள் மற்றும் செயல்முறைகளை உருவாக்கியுள்ளோம். மேலும் இவர்களுக்கான கல்விக்காக நிபுணர்களுடன் இணைந்து செவிப்புலன்- காட்சி- இயக்கத்திற்கான உதவித் தொழில்நுட்பங்களையும் இக்கல்வி நிறுவனம் வழங்குகிறது.
இதையும் படிங்க:"ஐபிஎல் ஏலத்தில் அதிக தொகை போகும் வீரர் இவர் தான்..." முன்னாள் வீரர்கள் கணிப்பு கூறுவது என்ன?
உளவியல் தேவைப்படும் இடங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு கவுன்சிலிங் வழங்குவதுடன், பல்வேறு நல்வாழ்வு நடவடிக்கைகளையும் இக்கல்வி நிறுவனம் மேற்கொண்டுவருகிறது. மாற்றுத்திறன் மாணவர்கள் செல்லும் வகையில் கட்டடங்களில் சாய்வு தளங்கள் அமைக்கப்பட்டுள்ளது. மாடிகளில் அமைந்துள்ள விடுதிகள், அனைத்துத் துறை கட்டடங்களுக்கும் லிப்ட் வசதிகளுடன், மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்த ஏதுவாக பிரத்தியேக
வாகன நிறுத்துமிடமும் அமைக்கப்பட்டுள்ளது. உயர் கல்விச்சூழலில் மாற்றுத்திறனாளி மாணவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் பற்றிய விழிப்புணர்வை மேம்படுத்துவதற்காக, இதர நிறுவனங்களுடன் கலந்தாலோசித்து வருகிறது." என தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய இந்திய மாற்றுத்திறனாளி கிரிக்கெட் வீரர் சுரேஷ் செல்வம், "இந்தியாவில் மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்களுக்கான அங்கீகாரம் முன்பெல்லாம் பெரிதாக வழங்கப்படவில்லை. ஆனால் தற்போது வளர்ச்சியடைந்து வருகிறது. பாராலிம்பிக் தொடரில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பு அதற்கு சான்றாக உள்ளது," எனத் தெரிவித்தார்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு (ETV Bharat Tamil Nadu) ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்