சென்னை:தமிழ்நாடு பாஜகவில் நிகழ்ந்து வரும் வழக்கத்திற்கு மாறான சில நிகழ்வுகள் பலரையும் புருவம் உயர்த்தச்செய்துள்ளது. இந்த சூழலில்தான் ஆந்திர முதலமைச்சராக சந்திரபாபு நாயுடு பதவியேற்கும் விழாவிற்குச் சென்ற தமிழிசை மற்றும் அமித்ஷா இடையிலான உரையாடல் கவனம் ஈர்த்துள்ளது.
பொதுவாகவே செய்தியாளர்களை சந்திப்பதில் எந்த தயக்கமும் காட்டியிராத பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை நேற்று கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்திப்பதைத் தவிர்த்தார். டெல்லி சென்று திரும்பிய நிலையில், கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்கள் அவரிடம் சில கேள்விகளை எழுப்பினர் இதற்கு பதிலளித்த அவர், "இனி வாழ்நாளில் எப்போதும் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்திக்க மாட்டேன். பத்திரிகையாளர் சந்திப்பு அனைத்துமே இனி திட்டமிட்டுதான் நடக்கும். எப்போது பத்திரிகையாளர் சந்திப்பு என்பதை தலைவர்கள் திட்டமிட்டு உங்களுக்கு தெரிவிப்பார்கள் " என்றார்.
அண்ணாமலையின் இந்த வழக்கத்திற்கு மாறான முடிவு ஒருபுறம் இருக்க, இவரின் கீழ் இயங்கி வரும் வார் ரூமின் செயல்பாடு தொடர்பாக கட்சி மேலிடத்திற்கு அனுப்பப்பட்ட புகார்களையும் கட்சியின் சீனியர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். ஈடிவி பாரத்திடம் பேசிய பெயர் வெளியிட விரும்பாத பாஜக சீனியர் நிர்வாகி ஒருவர், "பாஜகவில் அண்மைக் காலமாக சீனியர்கள் நிர்வாகிகள், வார் ரூம் எனப்படும் கட்சி சாராத நபர்களால் விமர்சிக்கப்படுவது அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.
நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளைப் பொறுத்த வரையிலும், 2014ம் ஆண்டு தேர்தலுக்கு இணையான வாக்கு சதவிகிதம் பெற்றிருந்த போதிலும், அண்ணாமலை தன்னை உயர்த்திக் காட்டுவதற்காக சீனியர்களை குறைத்து மதிப்படுவதாகவும் அதிருப்தி எழுந்துள்ளது." என்றார். இது மட்டுமின்றி அண்மையில் செய்தியாளர்கள் சந்திப்பின் போது பேசிய தமிழிசை சௌந்தரராஜன், சீனியர் தலைவர்களை அவதூறாக பேசினால், கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் என்ற முறையில் கடுமையான நடடிவக்கை எடுப்பேன் என எச்சரித்தார். அதிமுக மற்றும் பாஜக இணைந்திருந்தால் சில மக்களவைத் தொகுதிகள் கிடைத்திருக்கும் என்று தனது கவலையையும் வெளிப்படுத்தினார்.
அதிமுகவின் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி போன்றோரும் இதே கருத்தை முன்வைத்திருந்த நிலையில், இதில் அண்ணாமலை கடுமையாக முரண்பட்டார். தான் மாநிலத் தலைவராக இருக்கும் வரை பாஜக தமிழ்நாட்டில் அதிமுகவுடன் கூட்டணி அமைக்காது என கூறிய அவர் 2026ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலிலும் கூட்டணி இல்லை என கூறினார்.
அண்ணாமலை பேச்சுக்கு எடப்பாடி பழனிசாமியும் காட்டமாக பதிலளித்துள்ளார். இந்நிலையில் நாடாளுமன்றத் தேர்தலில் கட்சியின் செயல்பாடு தொடர்பாக கட்சி மேலிடம் மாநிலத் தலைமையிடம் அறிக்கை கேட்டுள்ளது. தேர்தலில் ஒப்பீட்டளவில் செயல்பாடு திருப்தி அளிக்காத உத்தரபிரதேச மாநிலத்திலும் இது போன்ற அறிக்கை கேட்கப்பட்டுள்ளது. தேர்தலுக்குப் பின்னர் இது வழக்கமான நடைமுறைதான் என்றாலும், சமீபத்தில் டெல்லி சென்ற அண்ணாமலைக்கு சில உத்தரவுகள் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதன் விளைவு தான் விமான நிலையங்களில் இனி செய்தியாளர்களை சந்திக்கப் போவதில்லை, திட்டமிட்ட பத்திரிகையாளர் சந்திப்புகளை மட்டுமே நடத்துவது என்ற முடிவும் என கூறுகின்றனர் தமிழ்நாடு பாஜகவினர்.