சென்னை: வெள்ளப்பெருக்கு என்பது பொதுவாக அடிக்கடி நிகழும் இயற்கை சீற்றங்களில் ஒன்று. உலக நாடுகளில் அதிக வெள்ள பாதிப்பு ஏற்படும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. அதனை வெளிப்படுத்தும் விதமாக சமீபத்தில் கேரள மாநிலத்தில் உள்ள வயநாட்டில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு சம்பவம், அதிகமான உயிரிழப்பையும் பெரும் பொருட்சேதங்களையும் ஏற்படுத்தியது.
இதுபோன்ற வெள்ள பாதிப்பு ஏற்படும் சூழலில் பொதுமக்கள் செய்யவேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை என்னென்ன என்பது குறித்து தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் பட்டியலிட்டுள்ளவற்றை இங்கு காண்போம்.
வெள்ள பாதிப்பு ஏற்படுவதற்கு முன்பு:
- வீண் வதந்திகளைப் புறக்கணித்து, பீதி அடையாமல் அமைதியாக இருக்கவும்.
- உங்கள் அலைப்பேசிகளில் சார்ஜ் முழுமையாக உள்ளதா என்பதை பார்த்து முழுமையாக சார்ஜ் செய்து வைத்துக்கொள்ளவும்.
- உங்கள் ஏரியாவின் அவசர தொடர்பு எண்களை அறிந்து வைத்துக்கொள்ளவும்.
- வானொலி, தொலைக்காட்சி, செய்தித்தாள்கள் உள்ளிட்டவற்றின் மூலமாக மட்டுமே வானிலை அறிவிப்புகள் மற்றும் வெள்ளஎச்சரிக்கை செய்திகளை தெரிந்துகொள்ளவும்.
- வீட்டில் உள்ள கால்நடைகள் மற்றும் விலங்குகளை கட்டி வைக்கக்கூடாது.
- மருந்துகள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய அவசரக்கால பெட்டியைத் தயாரித்து வைத்துக்கொள்ளவும்.
- பாதுகாப்பு மற்றும் உயிர்வாழ்வதற்கான பொருட்கள்.
- உங்களது ஆவணங்கள் மற்றும் மதிப்புமிக்க பொருட்களை நீர் புகாதவாறு பாதுகாப்பாக எடுத்துவைக்கவும்.
- எப்போது வேண்டுமானாலும் பாதுகாப்பான இடங்களுக்கு உடனடியாக வெளியேறும் வகையில் அருகிலுள்ள பாதுகாப்பு முகாம்களுக்கு செல்லும் வழிகளை அறிந்து வைத்துக்கொள்ளவும்.
- குறைந்தது ஒரு வாரத்திற்கு தேவையான உணவு மற்றும் தண்ணீரை போதுமான அளவு சேமித்து வைக்கவும்.
வெள்ள பாதிப்பின்போது:
- தப்பிக்கும் நோக்கிலோ அல்லது வேறு எந்த காரணத்திற்காகவோ வெள்ள நீருக்குள் செல்லக்கூடாது.
- சாக்கடை கால்வாய்கள், வாய்க்கால், மதகுகள் போன்ற பகுதிகளிலிருந்து தூரமாக இருங்கள்.
- மின் கம்பங்கள் மற்றும் மின் கம்பிகள் விழுந்திருக்கும் பகுதிகளில் மின்கசிவு ஏற்பட வாய்ப்புள்ளது.ஆகவே அப்பகுதிகளுக்கு செல்லாதீர்கள்.
- சிவப்பு கொடிகள் அல்லது தடுப்புகள் காணப்பட்டால் அங்கு திறந்த வடிகால்கள் போன்ற ஆபத்தான இடங்கள் உள்ளது என பொருள். ஆகவே அப்பகுதிகளுக்கு செல்லக்கூடாது.
- வெள்ள நீரில் நடக்கவோ, வாகனம் ஓட்டவோ கூடாது.
- புதிதாக சமைத்த அல்லது உலர்ந்த உணவை உண்ணுங்கள் மற்றும் சுடுநீர் அல்லது குளோரின் கலந்த தண்ணீரை குடிக்கவும்.
- உங்கள் சுற்றுப்புறத்தை பராமரிக்க கிருமிநாசினிகளைப் பயன்படுத்தவும்.
வெள்ள பாதிப்பிற்கு பிறகு:
- குழந்தைகளை வெளியே விளையாட அனுமதிக்காதீர்கள்.
- சேதமடைந்த மின்சாதனப் பொருட்களை பயன்படுத்த வேண்டாம்.
- வெள்ளத்தில் கெட்டுப்போன உணவை உண்ணாதீர்கள்.
- வெள்ளத்தில் அடித்து வரப்படும் குப்பைகளில் கம்பிகள், கூர்மையான பொருள்கள் மற்றும் சேதமடைந்த மின்கம்பங்கள் போன்றவை இருக்கக்கூடும். ஆகவே கவனமாக இருப்பது மிகவும் அவசியம்.
- வெள்ள பாதிப்பின்போது மலேரியா போன்ற கொசுக்களால் பரவும் நோய்கள் அதிகம் காணப்படும் என்பதால், அதனை தடுக்க கொசு வலைகளைப் பயன்படுத்துங்கள்.
- வெள்ளத்தின்போது பொதுவாக பாம்புகள் போன்ற விஷ ஜந்துக்கள் அதிகம் உலாவும் என்பதால் அவற்றிடம் கவனமாக இருப்பது அவசியம்.
- வெள்ள பாதிப்பில் வீடு மற்றும் பொது தண்ணீர் தொட்டிகளில் கழிவுநீர் கலந்திருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். எனவே, சுகாதாரத்துறை அறிவிக்கும் வரையில் குழாய் தண்ணீரை பயன்படுத்தக்கூடாது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க:தத்தளித்த தமிழ்நாடு எக்ஸ்பிரஸ்.. விஜயவாடாவை புரட்டிப்போட்ட கனமழை.. பல்வேறு ரயில் சேவைகளும் ரத்து!