சென்னை:தமிழ்நாட்டில் 18 வயதிற்கும் கீழ் கரோனா காலத்தில் 14 ஆயிரத்து 31 பேர் கர்ப்பமாகி உள்ளதாகவும், கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 36 ஆயிரத்து 134 குழந்தைகள் கர்ப்பம் அடைந்துள்ளதாகவும், மாதம்தோறும் 800க்கும் மேற்பட்டவர்கள் கர்ப்பம் அடைந்து வருகின்றனர் என பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத்துறை அதிர்ச்சியான தகவலை வெளியிட்டுள்ளது.
18 வயதிற்குட்பட்ட குழந்தைகளை கர்ப்பம் அடையச் செய்தவர்கள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும், தமிழ்நாடு அரசு இது குறித்து அதிகளவில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன், சம்பந்தப்பட்ட துறைகள் ஒன்றிணைந்து நடவடிக்கையை எடுக்க வேண்டும் என குழந்தை நல ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்தியச் சட்டப்படி, குழந்தை திருமணம் என்பது 18 வயதுக்குட்பட்ட பெண் அல்லது 21 வயதுக்குட்பட்ட ஆண் செய்துகொள்ளும் திருமணம் ஆகும். பெரும்பாலான குழந்தை திருமணங்கள் இளம் பெண்களிடையே நடைபெறுகின்றன. அவர்களில் பலர் மோசமான சமூக - பொருளாதார நிலை மற்றும் விழிப்புணர்வு இல்லாதவர்களாக இருக்கின்றனர்.
தமிழ்நாட்டில் குழந்தை திருமணத்தை ஒழிப்பதற்கும், 18 வயதிற்குட்பட்ட பெண்கள் கர்ப்பம் அடைவதைத் தடுக்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனால், பொது சுகாதாரத்துறையின் கணக்கெடுப்பில், மாதம்தோறும் சுமார் 800க்கும் மேற்பட்ட பெண்கள் 18 வயதிற்கும் கீழ் கர்ப்பம் அடைகின்றனர் என்ற தகவலை வெளியிட்டுள்ளது.
சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் பிரபாகர், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்ட கேள்விக்கு, பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருத்துவத்துறை அளித்துள்ள பதிலில், "கடந்த 2021ஆம் ஆண்டு முதல் 2024ஆம் ஆண்டு வரை 18 வயதிற்கும் கீழ் கர்ப்பம் அடைந்தவர்கள் விவரம் சுகாதார மேலாண்மை தகவல் அமைப்பிலிருந்து அளிக்கப்பட்டுள்ளது.
அதில், கடந்த 2021ஆம் ஆண்டில் ஜனவரியில் 1,031 பெண்களும், பிப்ரவரி 1,104, மார்ச் 1,495, ஏப்ரல் 1,221 பெண்களும், மே 1,087, ஜூன் 1,106, ஜூலை 1,179, ஆகஸ்ட் 1,145, செப்டம்பர் 1,232 பெண்களும், அக்டோபர் 1,129, நவம்பர் 1,087 மற்றும் டிசம்பரில் 1,215 பெண்களும் கர்ப்பம் அடைந்துள்ளனர்.
அதேபோல், கடந்த 2022 ஆம் ஆண்டில் ஜனவரி மாதத்தில் 978 பேரும், பிப்ரவரியில் 993, மார்ச் 1,030, மே 986, டிசம்பரில் 969 பேர் கர்ப்பம் அடைந்துள்ளனர். கடந்த 2023ஆம் ஆண்டிலும் இதே நிலை நீடித்து, 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை 36 ஆயிரத்து 134 குழந்தைகள் கர்ப்பம் அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இது குறித்து வழக்கறிஞர் பிரபாகர், ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திற்கு அளித்த சிறப்புப் பேட்டியில், "தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் 18 வயதிற்கும் கீழ் கர்ப்பம் அடைந்தவர்கள் விவரத்தை கடந்த 2021 முதல் 2024ஆம் ஆண்டு வரை பொது சுகாதாரத்துறையில் கேட்டிருந்தோம்.
அதன் அடிப்படையில், 4 ஆண்டுகளில் 36 ஆயிரத்து 134 பேர் இளம் வயதில் கர்ப்பம் அடைந்த தகவல் அதிர்ச்சியாக உள்ளது. கடந்த 2021ஆம் ஆண்டில் கரோனா காலத்தில் மக்கள் எளிதாக கோயில்களில் திருமணங்களைச் செய்தனர். அந்த காலகட்டத்தில், 14 ஆயிரத்து 31 பேர் கர்ப்பம் அடைந்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து, 2022ஆம் ஆண்டில் 10 ஆயிரத்து 901 பேரும், 2023ஆம் ஆண்டில் 9 ஆயிரத்து 565 பேரும் கர்ப்பம் அடைந்துள்ளனர். விடுமுறை காலங்களில் இளம் வயது திருமணம் மற்றும் கர்ப்பம் அதிகரித்து வருகிறது. இதில், இளம் வயது குழந்தைகள் வீட்டை விட்டு ஓடிவிட்டார்கள் என மட்டும் கூற முடியாது. பெற்றோர்களே விரும்பி திருமணத்தைச் செய்து வைக்கின்றனர்.
திருச்சியில் அதிர்ச்சி அளிக்கும் வகையில் அதிகளவில் எண்ணிக்கை உள்ளது. இளம் வயது கர்ப்பம் திருச்சி, சேலம், தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. மாவட்ட ஆட்சியர் தலைமையில் சிறப்பு நடவடிக்கை எடுத்தால் மட்டுமே தடுக்க முடியும். அரசு தொடர்ந்து கண்காணித்தால் மட்டுமே குறைக்க முடியும்.
மேலும், 18 வயதிற்குப்பட்டவர்கள் கர்ப்பம் அடைந்தால் போக்சோ சட்டத்தின் படி தவறாகும். அதன்படி, 36 ஆயிரம் போக்சோ வழக்குகள் பதிவு செய்திருக்க வேண்டும். ஆனால் அப்படிச் செய்யவில்லை. எங்கு பாலியல் ரீதியான அத்துமீறல் நடைபெற்று வழக்கிற்குச் செல்லும்போது தான் போக்சோ வழக்காக மாறுகிறது.
அரசு மருத்துவமனைக்குச் செல்லும் போது அவர்களுக்கு அளிக்க வேண்டிய சிகிச்சைகளை முறையாகக் கொடுக்கின்றனர். ஆனால், அரசின் நலத்திட்டங்களைக் கொடுப்பதில்லை. 18 வயதிற்கு கீழ் யாருக்கும் பாலியல் ரீதியான தகவல் வந்தால் சட்டப்படி தவறாகும்.
இவர்களை அரசு மருத்துவர் பரிசோதித்த உடன் காவல்நிலையத்திற்கு முறைப்படி தகவல் கொடுக்க வேண்டும். ஆனால், அரசு மருத்துவர்கள் காவல்துறைக்கு தகவல் அளிப்பது இல்லை. அவர்களுக்கு சிகிச்சை அளித்து அனுப்பி விடுகின்றனர். பாலியல் ரீதியாக பிரச்னை வரும் இடங்களில் மட்டுமே போக்சோ வழக்காக மாறுகிறது.