தமிழ்நாடு

tamil nadu

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 6, 2024, 1:40 PM IST

ETV Bharat / state

கோவை தொகுதியை கோட்டைவிட்ட அதிமுக... பாஜகவுடன் கூட்டணி வைத்திருந்தால் அண்ணாமலை ஜெயித்திருப்பாரா? - ADMK Defeat In Coimbatore Constituency

Reasons For ADMK Defeat In Coimbatore: கொங்கு மண்டலம் அதிமுகவின் கோட்டை என்று சூளுரைத்த அதிமுகவினர் நாடாளுமன்றத் தேர்தலில் கோவை தொகுதியை கோட்டைவிட்டதற்கான காரணம் என்ன என்பது குறித்து விவரிக்கிறது இச்செய்தி கட்டுரை. அத்துடன் அதிமுக - பாஜக இத்தேர்தலில் தொடர்ந்திருந்து, அப்போதும் கோவையில் அண்ணாமலை களமிறக்கப்பட்டிருந்தால் அவர் ஜெயித்திருப்பாரா என்ற கேள்வி குறித்தும் விவரிக்கிறது இக்கட்டுரை.

கோவை திமுக வெற்றி வேட்பாளர் கணபதி ராஜ்குமார், அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன்
கோவை திமுக வெற்றி வேட்பாளர் கணபதி ராஜ்குமார், அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் (GFX Credits - ETV Bharat Tamil Nadu)

கோயம்புத்தூர்:கொங்கு மண்டலத்தின் முக்கிய தொகுதியான கோவையில்பல்லடம், சூலூர், கவுண்டம்பாளையம், கோவை வடக்கு, கோவை தெற்கு, சிங்காநல்லூர் ஆகிய ஆறு சட்டமன்றத் தொகுதிகள் இடம்பெற்றுள்ளன. 2024 கோவை மக்களவைத் தொகுதியில், திமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் கணபதி ராஜ்குமார் மொத்தம் 5,68,200 வாக்குகள் பெற்று சுமார் 1,18,068 வாக்குகள் வித்தியாசத்தில் இரண்டாம் இடத்தை பிடித்த பாஜக வேட்பாளர் அண்ணாமலையை வீழ்த்தி, வெற்றி பெற்றுள்ளார். அண்ணாமலை பெற்ற மொத்த வாக்குகள் 4,50,132. அதிமுக சார்பாக வேட்பாளராகக் களமிறக்கப்பட்ட சிங்கை ராமச்சந்திரன் மொத்தம் 2,36,490 வாக்குகள் பெற்று 3ஆம் இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளார்.

அதிமுகவும் கொங்கு மண்டலமும்:கொங்கு மண்டலம் அதிமுகவின் கோட்டை என அதிமுகவினர் சூளுரைக்கும் அளவிற்கு இதற்கு முன்னதாக நடந்த பல்வேறு தேர்தல்களில் தொடர்ச்சியாக அதிமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். அந்த வகையில் கடந்த 2016 சட்டமன்ற தேர்தலில் அதிமுக, திமுக, பாஜக தனித்தனியாகப் போட்டியிட்டபோது, 6 சட்டமன்றத் தொகுதிகளிலும் சேர்த்து மொத்தமாக அதிமுக 5,31,320 வாக்குகளும், திமுக மற்றும் அதன் கூட்டணி 4,34,527 வாக்குகளும் மற்றும் பாஜக 1,17,261 வாக்குகளும் பெற்றிருந்தன.

கடந்த 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவும் பாஜகவும் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டபோது, கோவை வடக்கு தொகுதியில் அதிமுக வேட்பாளர் அம்மன் கே.அர்ச்சுனன் 81,454 வாக்குகளும், கோவை தெற்கு தொகுதியில் அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் 53,209 வாக்குகளும் பெற்றிருந்தனர்.

அதேபோல, சிங்காநல்லூரில் அதிமுக வேட்பாளர் கே.ஆர்.ஜெயராம் 81,244 வாக்குகளும், கவுண்டம்பாளையத்தில் பிஆர்ஜி அருண்குமார் 1,35,669 வாக்குகளும், சூலூரில் வி.பி.கந்தசாமி 1,18,968 வாக்குகளும், பல்லடத்தில் அதிமுக வேட்பாளர் எம்எஸ்எம் ஆனந்தன் 1,26,903 வாக்குகளும் பெற்றிருந்தனர்.

சரிந்த அதிமுகவின் வாக்கு சதவீதம்: கடந்த இரண்டு சட்டமன்றத் தேர்தலிலும் கோவையில் அதிமுக பெற்ற வாக்கு எண்ணிக்கையோடு ஒப்பிடுகையில் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவின் வாக்குகள் 50 சதவீதத்துக்கும் மேல் சரிந்திருப்பதும் திமுக, பாஜகவின் வாக்கு எண்ணிக்கை கணிசமாக அதிகரித்திருப்பதும் தெரிய வருகிறது.

இத்தொகுதியில் அதிமுகவின் வாக்கு வங்கி சரிந்ததற்கு, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை போட்டியிட்டது முக்கிய காரணமாக கருதப்படுகிறது. அவர் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி என்பதால், அவருக்கு அரசு ஊழியர்களின ஓட்டு கணிசமாக விழுந்துள்ளதாகவே தெரிகிறது.

கோவை தொகுதியில் மொத்தம் 7,352 தபால் வாக்குகள் பதிவான நிலையில், திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமாருக்கு 2,772 வாக்குகளும், பாஜக வேட்பாளர் அண்ணாமலைக்கு 2,524 வாக்குகளும் கிடைத்தன. ஆனால் அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரனுக்கு 887 வாக்குகள் மட்டுமே விழுந்தன. அதேநேரம் தபால் வாக்குகளில் 696 வாக்குகள் செல்லாதவை என்றும் அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அதிமுகவின் தோல்விக்கான காரணம்: கடந்த தேர்தல்களைக் காட்டிலும் இந்த தேர்தலில் அதிமுகவின் வாக்கு சதவீதம் குறைவாக முக்கிய காரணம், முதலில் பாஜகவுடன் கூட்டணி, பின்னர் பாஜக அல்லாத கூட்டணி என்று தேர்தல் கூட்டணி வியூகம் வகுத்ததில் அதிமுகவில் நிலவிய குழப்பம் ஒரு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. அதுமட்டும் இல்லாமல், பாஜக சார்பில் அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை போட்டியிட்டதும் அதிமுகவின் தோல்விக்கு காரணமாக கருதப்படுகிறது இவை எல்லாவற்றையும் விட கொங்கு மண்டலத்தில் தளபதி என அதிமுகவினரால் அழைக்கப்படும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கோவை நாடாளுமன்றத் தொகுதியில் பிரச்சாரமே மேற்கொள்ளாதது அதிமுகவின் வாக்கு வங்கி சரிவுக்கு முதல் முக்கிய காரணம் என அதிமுக வட்டாரங்கள் வருத்தத்துடன் தெரிவிக்கின்றனர்.

அதிமுக - பாஜக கூட்டணி தொடர்ந்திருந்தால்:மேலும், பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலக வேண்டாம் என எஸ்.பி.வேலுமணி கூறியதாக சொல்லப்படும் நிலையில், அவரது கருத்து மாறாக கட்சித் தலைமை முடிவெடுத்ததால், அவர் தீவிர பிரச்சாரம் மேற்கொள்ளவில்லை என்றும் அதிமுக வட்டாரங்கள் மேலும் கூறுகின்றன.

ஒருவேளை, இத்தேர்தலில் அதிமுக -பாஜக கூட்டணி அமைத்து போட்டியிட்டிருந்தாலோ, அப்போதும் கோவை தொகுதியில் அண்ணாமலை களமிறங்கி இருந்தாலோ, நிச்சயம் அவர் ஜெயித்திருக்க அதிக வாய்ப்புகள் இருந்திருக்கும் என்பது தற்போது வெளியாகி உள்ள தேர்தல் வாக்கு எண்ணிக்கை நிலவரத்தை வைத்து இரு கட்சிகளின் வட்டாரத்திலும் முணுமுணுக்கப்படுகிறது.

இதுகுறித்து அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரனிடம் கேட்டபோது, "தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்து வருவதால் இதுகுறித்து தற்போதைக்கு கருத்து ஏதும் தெரிவிக்க முடியாது" என கூறினார்.

'30 -35 சீட்கள்':இதனிடையே, கோவையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, "இதற்கு முன் பாஜக கூட்டணியிஸ் அதிமுக இருந்தபோது தமிழிசை, எல்.முருகன் போன்றவர்கள் அக்கட்சியின் தலைவர்களாக இருந்துள்ளனர். ஆனால் அப்போது எல்லாம் எந்த பிரச்சனையும் வந்தது கிடையாது. அண்ணாமலை வந்த பிறகுதான் அண்ணா, ஜெயலலிதா, ஆகியோர் குறித்தும் கூட்டணியில் இருந்து கொண்டே எடப்பாடி பழனிசாமி குறித்தும் பேசினார். அதிமுக -பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியதற்கு அண்ணாமலைதான் காரணம். அதே கூட்டணி தொடர்ந்து இருந்தால் 30 முதல் 35 சீட்கள் கிடைத்திருக்கும்" என்று எஸ்.பி.வேலுமணி கூறினார்.

இதையும் படிங்க:மதுரை தொகுதியில் அதிமுக தனது செல்வாக்கை இழக்க காரணம் என்ன? - சிறப்பு அலசல்

ABOUT THE AUTHOR

...view details