சென்னை: சென்னையில் உள்ள மூன்று நாடாளுமன்ற தொகுதிகளும் ஒவ்வொரு வகையில் முக்கியத்துவம் வாய்ந்தவைதான் என்றாலும், மத்திய சென்னை தொகுதியை கூடுதல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கூறலாம்.
தலைமை செயலகம், பொது மருத்துவமனைகள், சென்ட்ரல் ரயில் நிலையம், எழும்பூர் ரயில் நிலையம், சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானம் என தேசிய மற்றும் சர்வதேச அளவில் முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் அமைந்துள்ளதால் மத்திய சென்னை தொகுதி கூடுதல் கவனம் பெற்றுள்ளது.
நடைபெற்று முடிந்த 2024 நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் மத்திய சென்னையில் மொத்தம் 31 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். இத்தொகுதியில் அமைந்துள்ள அண்ணா நகர், துறைமுகம், வில்லிவாக்கம், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி, ஆயிரம் விளக்கு, எழும்பூர் ஆகிய ஆறு சட்டமன்ற தொகுதிகளும் திமுகவிற்கு மிகவும் நெருக்கமான தொகுதிகள் என்று சொல்லலாம்.
இதுவே, மத்திய சென்னை நாடாளுமன்ற தொகுதியில் சிட்டிங் எம்பியும், முன்னாள் மத்திய அமைச்சருமான தயாநிதி மாறன் மீண்டும் களமிறங்கி வெற்றி பெற்றுள்ளார். இவர் மூன்றாவது முறையாக மத்திய சென்னை நாடாளுமன்ற தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.
அது மட்டும் தயாநிதி மாறனின் தந்தையும் முன்னாள் மத்திய அமைச்சராக இருந்த முரசொலி மாறன் தொடர்ச்சியாக மூன்று முறை மத்திய சென்னை நாடாளுமன்ற தொகுதியில் இருந்து தான் எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
நடந்து முடிந்த தேர்தலில் திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் வில்லிவாக்கம் சட்டமன்ற தொகுதியில் 72,027 வாக்குகளும், எழும்பூர் தொகுதியில் 63 ஆயிரத்து 219 வாக்குகளும், துறைமுகம் தொகுதியில் 53 ஆயிரத்து 649 வாக்குகளும், சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் 80 ஆயிரத்து 833 வாக்குகளும், ஆயிரம் விளக்கு தொகுதியில் 66 ஆயிரத்து 15 வாக்குகளும், அண்ணா நகர் தொகுதியில் 76 ஆயிரத்து 543 வாக்குகளும் என மொத்தம் 413,848 பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள்:திமுக வேட்பாளர் தயாநிதிமாறனை எதிர்த்து போட்டியிட்டவர்களில் முக்கிய வேட்பாளராக பாஜகவின் வினோஜ் பி.செல்வம் இருந்தார். கடந்த சட்டமன்ற தேர்தலில் துறைமுகம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியுற்ற இவர், இம்முறை முக்கிய எதிர்க்கட்சி வேட்பாளராக களத்தில் இருந்தார். தேமுதிகவை சேர்ந்த பார்த்தசாரதி, நாம் தமிழர் கட்சியை சேர்ந்த மருத்துவர் கார்த்திகேயன் ஆகியோரgcd களத்தில் இருந்தனர்.
இவர்களில் பாஜகவின் வினோத் பி செல்வம் ஒரு லட்சத்து 69 ஆயிரத்து 159 வாக்குகளும், தேமுதிக பார்த்தசாரதி 72 2016 வாக்குகளும், நாம் தமிழர் கட்சியை சார்ந்த மருத்துவர் கார்த்திகேயன் 46 ஆயிரத்து 31 வாக்குகளும் பெற்றிருந்தனர்.
இத்தொகுதியில் நோட்டாவுக்கு 11,163 வாக்குகள் பதிவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.