நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நாகப்பட்டினம்: நாகை மாவட்டம், செருதூர் மீனவ கிராமத்தைச் சேர்ந்த என்.முருகன் என்பவருக்குச் சொந்தமான நாட்டுப்படகில், கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 4 மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றிருந்த நிலையில், கோடியக்கரை அருகே அதிவேக படகில் வந்த இலங்கை கடற்கொள்ளையர்கள், நாகை மீனவர்களை அரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் தாக்கியுள்ளனர்.
மேலும், மீனவர்களின் படகில் இருந்த வலை, ஜி.பி.எஸ் கருவி, செல்போன், டார்ச் லைட் உள்ளிட்ட ரூ.4 லட்சம் மதிப்பிலான பொருட்களையும் கொள்ளையடித்துச் சென்றதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, படுகாயங்களுடன் கடலுக்குள் குதித்து உயிர்த் தப்பிய மீனவர் என்.முருகன், நாகை அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக என்.முருகன் கூறுகையில், “நாங்கள் நேற்று முன்தினம் கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றோம்.
நடுக்கடலில் வலையால் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, இலங்கை கடற்கொள்ளையர்கள் அரிவாள், கட்டை போன்ற ஆயுதங்களோடு வந்தனர். பின்னர், அப்போது மீன்பிடித்துக் கொண்டு இருந்த எங்களை படகில் ஏறி மூர்க்கத்தனமாக தாக்கிவிட்டுச் சென்றனர். அதோடு, எங்களிடம் இருந்த மீன்பிடி வலைகளை வெட்டி கடலில் எரிந்துவிட்டனர்.
எங்களை கட்டைகளைக் கொண்டு தாக்கியதோடு, கத்தியாலும் வெட்டி இலங்கை கடற்கொள்ளையர்கள் காயப்படுத்தினர். எங்களிடம் இருந்த அனைத்து பொருட்களையும் கொள்ளையடித்துச் சென்றுவிட்டார்கள். அவற்றின் மதிப்பு ரூ.3 முதல் ரூ.4 லட்சம் வரை இருக்கும். மீன்பிடித் தொழிலை நம்பியே எங்களைப் போன்ற மீனவர்கள் உயிர் வாழ்கின்றோம். எங்களுக்கு இலங்கை கடற்கொள்ளையர்கள் கொள்ளையடித்துச் சென்ற பொருட்களின் சேதாரம் உள்ளிட்டவற்றை பெற்றுத் தருவதற்கு தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த நாகை மீனவர்கள் மீது கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தி கொள்ளையடித்தவற்றை மீட்டுத் தரவும், கடலில் அச்சமின்றி மீன்பிடித்தொழில் செய்ய மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நாகை மாவட்ட மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க:நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்.. நடுக்கடலில் நடந்தது என்ன? - Attacks On TN Fishermen