சென்னை: அண்ணா பல்கலைக் கழகத்தின் வளாகத்திலேயே மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் சென்னை மாநகரை உலுக்கியுள்ளது. குற்றவாளி ஞானசேகரன் பல்கலை வளாகத்துக்குள் நுழைந்து, மாணவியை மிரட்டி பாலியல் அத்துமீறலை அரங்கேற்றியிருக்கும் நிலையில், அண்ணா பல்கலையில் என்னென்ன பாதுகாப்பு நடவடிக்கைகள் இருந்து வருகிறது என்பது நமக்கு தெரிய வந்துள்ளது.
கிண்டியின் முக்கியப் பகுதியான ராஜ்பவன் அருகில் அமைந்துள்ளது அண்ணா பல்கலைக் கழகம். 1978 ம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் எம்ஜிஆர், மறைந்த முதலமைச்சர் அண்ணாதுரையின் பெயரில் இந்த பல்கலைக் கழகத்தினை துவக்கி வைத்தார். கிண்டி பொறியியல் கல்லூரி, அழகப்பா பொறியியல் கல்லூரி, கட்டிடக்கலை மற்றும் திட்டமிடல் பள்ளி என 3 கல்லூரி வளாகங்கள் மற்றும் துணைவேந்தர் உள்ளிட்ட நிர்வாக அலுவலகங்கள் இந்த வளாகத்தில் இயங்கி வருகிறது. மேலும் இளநிலை, முதுநிலை மாணவர்கள் தங்குவதற்கு 12 மாணவர்கள் விடுதியும், 7 மாணவிகள் விடுதியும் என 19 விடுதிகளும் உள்ளன. மேலும், வெளிநாடுகளில் இருந்து வந்து தங்கிப்படிக்கும் மாணவர்களுக்கான தனியாக இன்டர்நேஷனல் விடுதியும் செயல்பட்டு வருகிறது.
மொத்தம் 189 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த வளாகத்திற்கு 4 வாயில்கள் உள்ளன. முக்கிய நுழைவு வாயில் காந்திமண்டபம் அமைந்துள்ள சர்தார்வல்லபாய் பட்டேல் சாலையிலும், அதனைத் தொடர்ந்து அழக்கப்பா கல்லூரியிலும், சர்தார் வல்லபாய் பட்டேல் சாலையில் உள்ள நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்திற்கு பக்கத்தில் ஒரு வாயிலும், தொழில்நுட்ப கல்வி இயக்குனர் அலுவலகத்திற்குள் ஒரு வாயிலும், கோட்டூர்புரம் சாலையில் ஒரு வாயிலும் உள்ளது.
பாதுகாப்பு நடவடிக்கைகள்
பல்கலைக் கழக வளாகத்தில் முக்கியமான சாலைகளில் மாணவர்களின் பாதுகாப்பிற்காக 50 சிசிடிவிக் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. தற்போது மேலும் 60 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட உ்ள்ளன. மாணவிகள் விடுதிப் பகுதியிலும் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்த வாளகத்தில் இளநிலை, முதுநிலை, ஆராய்ச்சி படிப்புகளில் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர்.