சென்னை: தமிழ்நாடு அரசில் காலியாக உள்ள 6,244 காலி பணியிடங்களுக்கான குரூப் 4 எழுத்துத் தேர்வு இன்று (ஜூன்.9) நடைபெறுகிறது. இந்தாண்டு தேர்வை 20 லட்சத்து 36 ஆயிரத்து 774 பேர் எழுத உள்ளனர்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப் 4 பதவிகளில், கிராம நிர்வாக அலுவலர் - 108, இளநிலை உதவியாளர் - 2,604, தட்டச்சர்- 1,705, சுருக்கெழுத்து தட்டச்சர்- 445, தனி உதவியாளர், கிளர்க் - 3, தனி செயலாளர் - 4, இளநிலை நிர்வாகி - 41, வரவேற்பாளர் - 1, பால் பதிவாளர் - 15, ஆய்வக உதவியாளர் - 25, பில் கலெக்டர்- 66, தொழிற்சாலை மூத்த உதவியாளர்- 49, வனப் பாதுகாவலர், காவலர்- 1,177, இளநிலை ஆய்வாளர்- 1 ஆகிய 6,244 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பைக் கடந்த ஜனவரி 30ஆம் தேதி வெளியிட்டது. பிப்ரவரி 28ஆம் தேதி வரை விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டது.
இத்தேர்வுக்கு 10ஆம் வகுப்பு தேர்ச்சி தகுதியாக இருக்கும் நிலையில், பட்டதாரிகள், முதுநிலை பட்டதாரிகள், பொறியியல் பட்டதாரிகள், எம்பில் (M.Phil) முடித்தவர்கள் என உயர்கல்வி தகுதி பெற்றவர்களும் போட்டி போட்டு விண்ணப்பித்தனர். இந்த பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு இன்று (ஜூன்.9) காலை 9.30 மணிக்கு நடைபெறவுள்ளது.
மதியம் 12.30 மணி வரை 3 மணி நேரம் கொள்குறிவகை தேர்வாக நடைபெறவுள்ளது. தேர்வர்கள் காலை 8.30 மணிக்கே தேர்வு மையத்திற்கு வர வேண்டுமெனவும், காலை 8.59 மணிக்குள் தேர்வு அறைக்குள் இருக்க வேண்டும். 9 மணிக்கு பிறகு வரக்கூடிய தேர்வர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். பிற்பகல் 12.30 மணிக்கு தேர்வு முடிந்தாலும், 12.45 மணி வரை தேர்வு அறையில் இருக்க வேண்டும்.
இத்தேர்வில், பொது தமிழ் பகுதியிலிருந்து 100 கேள்விகளும், பொது அறிவு மற்றும் நுண்ணறிவு திறன் பகுதிகளிலிருந்து 100 கேள்விகள் என மொத்தம் 200 கேள்விகள் இடம்பெறும். ஒரு கேள்விக்கு ஒன்றரை மதிப்பெண் வீதம் மொத்தம் 300 மதிப்பெண்கள் வழங்கப்படும்.
38 மாவட்டங்களில் 7,247 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. 20 லட்சத்து36 ஆயிரத்து 774 பேர் எழுதவுள்ளனர். சென்னை மாவட்டத்தில் 432 மையங்களில் 1 லட்சத்து 33 ஆயிரத்து 276 பேர் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அனைத்து இடங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் தேர்வர்களுக்குப் பல கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது.