விழுப்புரம்:அரசியல் தலைவராகிவிட்டார் நடிகர் விஜய், அக்டோபர் 27ம் தேதி மாலையில் விழுப்புரம் மாவட்டம் வி.சாலை கிராமத்தில் நடைபெறும் கட்சியின் முதல் மாநில மாநாட்டில் விஜய் தனது முதல் அரசியல் கன்னிப்பேச்சை கொடுக்க உள்ளார். எத்தனையோ ஆடியோ ரிலீஸ் மேடைகளில் அவர் பேசியிருந்தாலும் இதுதான் அவரது முதல் அரசியல் கன்னிப்பேச்சு.
அரசியல் மாநாடு:நடிகர் விஜய் தனது அரசியல் கட்சியை பிப்ரவரி 2 ஆம் தேதி தொடங்கினார். தமிழக வெற்றிக் கழகம் என்று பெயர் சூட்டப்பட்டுள்ள கட்சிக்கு இது தான் முதல் மாநில மாநாடு என்றாலும், மெயின்ஸ்ட்ரீம் அரசியல் கட்சிக்கான ஏற்பாடுகளுடன் களைகட்டுகிறது. விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள வி.சாலை என்ற கிராமத்தில் 85 ஏக்கர் நிலத்தை மாநாடு நடத்துவதற்கு அக்கட்சியினர் தேர்வு செய்தனர். அக்டோபர் 4 ஆம் தேதி மாநாட்டு பணிகள் தொடங்கி மாநாட்டிற்கான பந்தல், மேடை , விளக்குகள் அமைக்கும் பணிகளில் 500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக முழு வீச்சில் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிங்க:“இதய வாசலைத் திறந்து வைத்துக் காத்திருப்பேன்” - தவெக தலைவர் விஜய் கடிதம்!
கவனத்தை ஈர்த்த கட் அவுட்டுகள்:மாநாடு நடைபெறக்கூடிய பகுதியில் வேலு நாச்சியார், பெரியார், அம்பேத்கர், காமராஜர் ஆகியோரின் கட் அவுட்களுடன் விஜயின் கட் அவுட் வைக்கப்பட்டுள்ளது. மேலும், அழகு முத்துக்கோன், பெரும்பிடுகு முத்தரையர், வீரபாண்டிய கட்டபொம்மன், பூலித்தேவர், மருது சகோதரர்கள் உள்ளிட்டவர்களின் புகைப்படங்களும் வைக்கப்பட்டுள்ளது. நடிகர் விஜயின் அரசியல் பாதை எப்படி இருக்கப் போகிறது என்பதை எடுத்துக் காட்டும் விதமாக இந்த புகைப்படங்கள் உள்ளன. இது தவிர்த்து தமிழன்னை மற்றும் தமிழ் மூவேந்தர்களான சேர, சோழ, பாண்டியர்களுடன் விஜய் இருப்பது போன்ற கட் அவுட்டும் கவனம் ஈர்க்கிறது.
சேரர், சோழர், பாண்டியருடன் விஜய் கட்-அவுட் (Credit - ETV Bharat Tamil Nadu) இதையும் படிங்க:திராவிட மண்ணில் "தமிழ் தேசிய சித்தாந்தம்" பேசும் விஜய்!
தென்னாட்டு ஜான்சி ராணி அஞ்சலை அம்மாள்:மாநாட்டு முகப்பில் வேலுநாச்சியார், பெரியார், அம்பேத்கர் , காமராஜர் ஆகியோரின் புகைப்படங்களுடன் தியாகி அஞ்சலை அம்மாளும் இருக்கிறார. மொழிப்போர் போராட்டங்களில் தீவிரமாக இயங்கியதற்காக அறியப்படும் அஞ்சலை அம்மாள், மகாத்மா காந்தியடிகளால் தென்னாட்டு ஜான்சி ராணி என புகழப்பட்டார். ஒத்துழையாமை இயக்கம், உப்பு சத்தியாகிரகம் உள்ளிட்ட போராட்டங்களில் பங்கேற்று சிறை சென்ற அஞ்சலை அம்மாள், சென்னை மாகாணத்தில் மூன்று முறை எம்.எல்.ஏவாக தேர்வு செய்யப்பட்டவர் ஆவார். காங்கிரஸ் இயக்கத்தின் மூத்த தலைவர்களில் அஞ்சலை அம்மாளும் ஒருவர்.
மாநாடு அரங்கில் வைக்கப்பட்டுள்ள தலைவர்கள் கட்-அவுட்கள் (Credit - ETV Bharat Tamil Nadu) இதையும் படிங்க:2026 சட்டமன்ற தேர்தல்: உதயநிதி VS விஜய்?- இளைஞர் பட்டாளம் யார் பக்கம்?
மாநாட்டு பந்தல்:மாநாட்டிற்காக 170 அடி நீளம், 60 அடி அகலம் மற்றும் 30 அடி உயரத்தில் பிரம்மாண்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது. மேலும், மாநாட்டின் பிரதான நுழைவு வாயில் தமிழ்நாட்டின் தலைமைச் செயலகமான செயின்ட் ஜாா்ஜ் கோட்டை போன்று வடிவமைக்கப்பட்டு வருகிறது. கட்சியின் தலைவர் விஜய் மேடையிலிருந்து சுமார் 800 மீட்டர் தொலைவிற்கு நடந்து சென்று தொண்டர்களை சந்திப்பதற்காக, ரேம்ப் வாக் மேடையும் அமைக்கப்பட்டுள்ளது.
100 அடியில் தயாராக உள்ள கொடிக்கம்பம் (Credit - ETV Bharat Tamil Nadu) கொடிக்கம்பம் தான் ஸ்பெஷல்:மாநாட்டின் தொடக்கமாக கட்சித் தலைவர் விஜய் கொடியேற்றுவதற்காக 100 அடி உயர கொடிக்கம்பமும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கொடிக்கம்பத்தில் 20 க்கு 30 என்ற அளவில் 600 சதுர அடி பரப்பளவு கொண்ட பிரமாண்ட கொடி ஏற்றப்பட உள்ளது. மாநாட்டுத் திடலை நோக்கி வரும் போதே கொடிதான் முதல் அட்ராக்ஷனாக இருக்கும் என த.வெ.க. நிர்வாகிகள் கூறுகின்றனர்.
ஈடிவி பாரத்துடன் பேசிய த.வெ.க. நிர்வாகி ஒருவர் இக்கொடிக்கம்பம் நிறுவுவதற்காக கான்கிரீட் தளம் அமைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடுகிறார். விஜயின் பனையூர் கட்சி அலுவலகத்தில் ஏற்கெனவே 40 அடி உயர கொடிக்கம்பம் நிறுவப்பட்டுள்ள நிலையில் அதே தனியார் நிறுவனம் தான் இந்த கொடியை நிறுவும் பணியையும் ஏற்றுக் கொண்டுள்ளதாக குறிப்பிடும் அவர், ராட்சத கிரேன் மூலம் கொடிக்கம்பம் தற்போது தூக்கி நிறுத்தப்பட்டுள்ளதை குறிப்பிட்டுள்ளார்.
டிஜிட்டல் முறையில் இயங்கும் கொடி:இந்த கொடியின் பிரமாண்டத்தை கருத்தில் கொண்டு தானியங்கி ரிமோட் அமைக்கப்பட்டுள்ளது. கொடி கீழிருந்து மேலே ஏறுவதற்கு 10 நிமிடங்கள் ஆகும். குறைந்த பட்சம் 25 வருடங்களாவது துருப்பிடிக்காத வகையில் கொடிக்கம்பம் தயாரிக்கப்பட்டுள்ளது எனவும் நிர்வாகிகள் கூறுகின்றனர். அடுத்த 5 வருடங்களுக்கு இந்த கொடிக்கம்பம் இதே இடத்தில் இருக்கும் வகையில் நிலத்தின் உரிமையாளரான விவசாயி மணி என்பவருடன் த.வெ.க. சார்பில் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாகவும் அந்த நிர்வாகி குறிப்பிட்டார்.
கழுகு பார்வையில் மாநாட்டு பந்தல் (Credit - ETV Bharat Tamil Nadu) சிறப்பு ஏற்பாடுகள்:மாநாடு நடைபெறும் பகுதியை கண்காணிக்க சுமாா் 700 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, சுமாா் 300 தற்காலிக குடிநீர் தொட்டிகளும், 350 நடமாடும் கழிப்பறைகளும் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் மாநாட்டின் முகப்பு வாயிலில் இருந்து மாநாட்டு திடல் வரும் வரை வழியில் இருபுறமும் 35 அடி உயரத்தில் 600க்கும் மேற்பட்ட கொடிக்கம்பங்கள் நடப்பட்டு அதில் 15 அடி உயரமும், 3 அடி அகலமும் கொண்ட கட்சிக்கொடியை பறக்க விடப்பட்டுள்ளது.
விஜய் செல்ல சிறப்பு சாலை:கட்சியின் தலைவர் விஜய் செல்வதற்காக சுமார் 1.5 கிலோமீட்டர் தூரம் பிரத்யேகமாக சிறப்பு சாலை அமைக்கப்பட்டுள்ளது. மேலும், விஜய் செல்லும் சிறப்பு சாலையில் யாரும் நுழைந்து விடாமல் தடுக்க 10 அடியில் இரும்பு தடுப்பும் அமைக்கப்பட்டுள்ளது. மாநாட்டில் பாதுகாப்பு பணிக்காக 10 ஆயிரம் தொண்டர்கள் சீருடையுடன் ஈடுபட உள்ளனர் என்றும், 150 மருத்துவர்கள் அடங்கிய மருத்துவ குழு மாநாட்டில் தயார் நிலையில் இருப்பார்கள் என்றும் அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
50 ஆயிரம் இருக்கைகள்:மாநாட்டில் சுமார் 2.5 லட்சம் பேர் வரை சுலபமாக பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படும் நிலையில், 1500 இருக்கைகளுக்கு தனித்தனியாக இடம் ஒதுக்கப்பட்டு, சுமார் 50,000 இருக்கைகள் போடப்பட்டுள்ளன. தரைத்தளத்தில் இருந்து மேடை 12 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளதால் மேடையில் உள்ளவர்களை எளிதில் காணக்கூடிய வகையில் இருக்கும் என மாநாட்டு நிர்வாகிகள் கூறுகின்றனர்.
எல்இடி திரை & விளக்குகள்:மாநாட்டில் லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் மேடையில் நடைபெறும் நிகழ்வு மற்றும் கட்சியின் தலைவர் விஜயின் பேச்சை எல்லோரும் பார்க்கும் வகையில் நூற்றுக்கும் மேற்பட்ட எல்இடி திரைகள் அமைக்கப்பட்டுள்ளன, அதேபோல் மாநாட்டு பந்தல் மற்றும் நுழைவு வாயில் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 1500 எல்இடி விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
இதையும் படிங்க:“காவல்துறைக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்..” - தொண்டர்களுக்கு விஜய் வேண்டுகோள்!
பெண்களுக்கான ஏற்பாடுகள்: பெண்கள், கர்ப்பிணிகள், மாற்றுத்திறனாளிகளுக்கு என தனியாக இடம் ஒதுக்கப்பட்டு அங்கு அவர்களுக்கு இருக்கைகள் போடப்பட்டுள்ளது. மேலும் அவர்களுக்கு என தண்ணீர், கழிவறை மற்றும் உதவும் குழு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. மாநாட்டிற்கு சுமார் 2 லட்சத்திற்கும் அதிகமான ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படும் நிலையில்
பார்க்கிங் வசதி:மாநாட்டிற்கு வரக்கூடிய வாகனங்களை பாதுகாப்பாக நிறுத்துவதற்கு 207 ஏக்கர் நிலம் வாடகைக்கு எடுக்கப்பட்டு சுமார் நான்கு பகுதிகளில் வாகன பார்க்கிங் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
உள்ளே / வெளியே:மாநாட்டு பந்தலுக்கு வரக்கூடிய தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் கூட்ட நெரிசலில் சிக்கிக் கொள்ளாதவாறு, ஐந்து நுழைவு வாயில்களும் 15 வாயில்கள் வெளியேறவும் அமைக்கப்பட்டுள்ளன. மாநாட்டிற்கு வரக்கூடியவர்கள் யாரேனும் தவறும் பட்சத்தில் அவர்களை கண்டுபிடிப்பதற்கு missing zone அமைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:"தவெக மாநாட்டில் பட்டாசுகள் வெடிக்கக்கூடாது" - நிர்வாகிகளுக்கு காவல்துறை அறிவுறுத்தல்!
விஜய்க்கு துபாய் பவுன்சர்கள் பாதுகாப்பு: பணிகள் நடைபெற்று வரும் நிலையில், பொதுமக்கள் மற்றும் ரசிகர்கள் மாநாடு நடைபெறும் பகுதிக்கு கூட்டமாக வருவதனால் பணிகள் பாதிப்பு ஏற்படுவதாக கூறி மாநாடு நடைபெறக்கூடிய பகுதியில் பவுன்சர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அதேபோல் கட்சியின் தலைவர் விஜய் மாநாட்டிற்கு வந்தது முதல் அவரை திருப்பி அனுப்பும் வரை அவருக்கான பாதுகாப்பு பணியில் துபாயிலிருந்து 30க்கும் மேற்பட்ட பவுன்சர்கள் வரவழைக்கப்பட்டுள்ளதாக த.வெ.க. நிர்வாகிகள் கூறியுள்ளனர்.
கட்சி தொடங்கியதில் இருந்து உறுப்பினர் சேர்க்கை, மாநில நிர்வாகிகள் நியமனம், கட்சி கொடி, பாடல் அறிமுகம் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொண்டு வந்த விஜய், கட்சியின் கொடியை கடந்த ஆகஸ்ட் 22 ஆம் தேதி பனையூரில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் அறிமுகம் செய்தார்.
விஜய் வருகை மற்றும் கொடியேற்றம்:மாநாட்டு பந்தலுக்கு நடிகரும் கட்சியின் தலைவருமான விஜய் 3 மணி அளவில் வருவார் என்றும் அதனைத் தொடர்ந்து கட்சியின் கொடியினை 100 அடி கம்பத்தில் ஏற்றுவார் எனவும் தகவல் வெளியாகி உள்ளது. தொடர்ந்து கலை நிகழ்ச்சிகளும் மற்ற முக்கிய பிரமுகர்கள் உரையாற்றுவார்கள் என தெரியவந்துள்ளது. இறுதியாக விஜய் 6 மணிக்கு மேல் மேடைக்கு வருவார் என்றும் குறைந்தபட்சம் 2 மணி நேரம் கட்சியின் கொள்கை செயல்திட்டம் தொடர்பாக விரிவான உரையை நிகழ்த்துவார் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.