சென்னை:தமிழ்நாட்டில் கடந்த இரண்டு வாரங்களாகப் பகல் நேரத்தில் அதிக அளவு வெப்பநிலை உணரப்படுகிறது. குறிப்பாக அதிகாலை நேரத்தில் அடர்ந்த பனிப்பொழிவும் பகல் நேரத்தில் அதிக அளவு வெப்பமும் பதிவாகுவதால் பொதுமக்களுக்கு இது அசௌகரியத்தை ஏற்படுத்துகிறது. மேலும், வெயில் காலம் தொடங்குவதற்கு முன்பே 36 (97 பாரன்ஹீட்) டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவாகியுள்ளது.
இந்நிலையில் இது குறித்து டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்திரன் ஈடிவி பாரத் செய்தியாளரிடம் கூறுகையில், “தமிழகத்தின் பெரும்பான்மை மாவட்டங்களில் இன்னும் இரண்டு வாரங்களுக்கு அதிகாலை நேரங்களில் பனிப்பொழிவு அதிகளவு இருக்கும். இதனால், வளிமண்டலத்தின் வெவ்வேறு அடுக்குகளில் வறண்ட கிழக்கு காற்றின் வருகை இருப்பதால் பகல் நேரத்தில் வெப்பநிலை இயல்பை விட அதிகமாக உணரப்படும்.
வறண்ட வானிலையுடன் வெப்பமான சூழல் தொடர்வதாலும், தெளிந்த வானிலை காணப்படுவதாலும், வெப்பநிலை இயல்பை விட அதிகமாக உள்ளது. இந்த ஆண்டு கோடைக்காலத்தின் முற்பகுதியில் அதிக வெப்பநிலை பதிவாவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. அதேபோல், வெயில் காலம் ஏப்ரல் மாதத்திற்குப் பிறகு தொடங்க உள்ளது.
மேலும் இந்தாண்டு வெப்ப சலனம் காரணமாக கோடைக்கால மழை பெய்வதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. கோடை மழை பெய்யும் நேரங்களில் வெயிலின் தாக்கம் சற்று குறைந்து காணப்படும். கடந்த ஆண்டு அதிகமான வெப்பநிலை பதிவானது. அதேபோல், கடந்த மூன்று ஆண்டுகளை ஒப்பிடும் பொழுது இந்த ஆண்டு இயல்பான வெப்பநிலை பதிவாவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. கோடை மழை பெய்வதற்கான வாய்ப்புகளும் அதிகம் உள்ளது.