தேனி:2026 சட்டமன்ற தேர்தலில் அனைவரும் ஒன்றிணைந்தால்தான் அதிமுகவிற்கு வாழ்வு என்று கூறியுள்ள முன்னாள் முதல்வரும், அதிமுக முன்னாள் ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர்செல்வம், எந்தவித நிபந்தனையும் இன்றி அதிமுகவில் இணைய தயாராக உள்ளோம் என்றும் கூறியுள்ளார்.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கைலாசப்பட்டியில் உள்ள பண்ணை வீட்டில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர், "அதிமுக இயக்கத்தை உருவாக்கி, அதனை கட்டிகாக்க, எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா 50 ஆண்டு காலமாக பாடுபட்டனர். கட்சியின் விதிமுறைகள்படி தேர்தல் மூலமாக தான் பொதுச் செயலாளரை தேர்வு செய்ய முடியும். இந்த விதியை யாராலும் திருத்தவோ ரத்து செய்யவோ முடியாது. ஆனால் எடப்பாடி பழனிச்சாமி இந்த விதியில் திருத்தம் மேற்கொண்டார். அதனை எதிர்த்து நாங்கள் நீதிமன்றம் சென்றோம். நீதிமன்றத்திற்கு என்ன அதிகாரம் இருக்கிறதோ அதே அதிகாரம்தான் தேர்தல் ஆணையத்திற்கும் உள்ளது." என்று ஓபிஎஸ் கூறினார்.
மேலும் பேசிய அவர், "அத்திக்கடவு -அவிநாசி திட்டத்திற்கு மத்திய அரசு நிதி ஒதுக்காமல் தாமதப்படுத்தியதால் மாநில அரசின் நிதியின் மூலம் அத்திட்டத்தினை முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கொண்டு வந்தார். நானும் செங்கோட்டையனும் இணைந்து பல மாநாடுகளை முன்னின்று நடத்தியுள்ளோம். இதுகுறித்த எல்லா கேள்விகளுக்கும் பதில் சொல்ல வேண்டியவர் செங்கோட்டையன் தான்." என்று ஓபிஎஸ் தெரிவித்தார்.