ஈரோடு:பவானிசாகர் அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்ததால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் பவானிசாகர் அணை 105 அடி உயரமும், 32.8 டிஎம்சி கொள்ளளவும் கொண்டதாகும். இந்த அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
கடந்த சில மாதங்களாக அணையின் நீர் பிடிப்பு பகுதிகளான நீலகிரி மலைப்பகுதி மற்றும் வட கேரளாவில் மழை பெய்யாததால் பவானிசாகர் அணைக்கு நீர் வரத்து குறைந்தது. இதன் காரணமாக அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்தது. இதற்கிடையே நீலகிரி மலைப் பகுதியில் கடந்த 2 நாட்களாக பரவலாக கன மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
நேற்று காலை நிலவரப்படி அணைக்கு நீர்வரத்து 622 கன அடியாக இருந்த நிலையில் நேற்று இரவு நீர்வரத்து 6 ஆயிரத்து 944 கன அடியாக அதிகரித்தது. இன்று காலை பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 7 ஆயிரத்து 944 கன அடியாக உள்ளது. நீர்வரத்து அதிகரிப்பால் அணை நீர்மட்டம் 60.07 அடியாகவும், நீர் இருப்பு 7.2 டிஎம்சி ஆகவும் உள்ளது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக பவானி ஆற்றில் 200 கன அடி தண்ணீரும், கீழ்பவானி வாய்க்காலில் 5 கன அடி தண்ணீரும் என மொத்தம் 205 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் பாசனப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.