VIRUDHUNAGAR STONE QUARRY ACCIDENT விருதுநகர்:காரியாபட்டி அருகே ஆவியூர் - கீழஉப்பிலிக் குண்டு சாலையில் ஒரு தனியார் கிரஷர் (கல்குவாரி) செயல்பட்டு வருகிறது. இந்த கல்குவாரியில் ஜல்லி கற்கள், எம் சான்ட் போன்ற பொருட்கள் பாறைகளில் இருந்து உடைக்கப்பட்டு வருகிறது.
அங்கு, பாறைகளை உடைப்பதற்கு வெடி மருந்துகள் பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், இன்று (புதன்கிழமை) அந்த கல்குவாரியில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. பாறைகளை உடைப்பதற்காக கொண்டு வரப்பட்ட வெடி மருந்துகளை, வாகனத்திலிருந்து வெடிமருந்து வைக்கப்படும் கட்டடத்தில் இறக்கிய போது ஏற்பட்ட உராய்வு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
இந்த கோர விபத்தில் 3 பேர் உடல் சிதறி உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், அந்த வெடி மருந்து இருந்த கட்டடம் அருகே இருந்த இரண்டு வாகனங்கள் முற்றிலுமாக சேதமடைந்துள்ளது. இந்நிலையில், அந்தப் பகுதியில் வெடி மருந்துகள் இருப்பதாகவும் இதனால் அந்த பகுதிக்கு தீயணைப்பு துறையினர், போலீசார் அருகே செல்ல முடியாத நிலை இருந்து வருகிறது.
இந்த வெடி விபத்தின் போது அந்த பகுதியை சுற்றியுள்ள சுமார் 20 கிலோ மீட்டர் தூரம் வரை அதிர்வுகள் ஏற்பட்டு வீடுகள் சேதமடைந்துள்ளன. வெடி விபத்தின் சிசிடிவி காட்சிகளும் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: ஏற்காடு பேருந்து விபத்து: 6 பேர் பலி..வாகன ஓட்டிகளுக்கு கலெக்டர் விடுத்த எச்சரிக்கை! - Yercaud Bus Accident