விருதுநகர்: ராமநாதபுரம் மாவட்டம் கமுதியைச் சேர்ந்தவர் மூக்கையா (60). இவர் வட்டிக்கு கடன் வழங்கும் தொழில் செய்து வந்தார். இந்த நிலையில், விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை காளையார் கரிசல்குளத்தைச் சேர்ந்த முன்னாள் ஊராட்சித் தலைவரான செல்வக்குமார் (49), அதே பகுதியைச் சேர்ந்த முருகன் (44) ஆகியோர் இவரிடம் அவ்வப்போது கடன் பெற்று செலுத்தி வந்தனர்.
இவர்கள் இருவரும் கடைசியாக 2018ஆம் ஆண்டில் ரூ.2 லட்சம் வரை தர வேண்டி இருந்த நிலையில் மூக்கையா அவர்களை திட்டியதாகக் கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த செல்வக்குமாரும், முருகனும், சோனை பாண்டி (28) என்பவருடன் சேர்ந்து திட்டம் தீட்டி, மூக்கையாவிடம் நல்ல விதமாக பேசி முருகனின் சகோதரி ஊரான காரியாபட்டி நாசர்புளியங்குளத்திற்கு அருகே உள்ள ஆலங்குளம் கண்மாய்க்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு நான்கு பேரும் மது குடித்தனர். இருப்பினும், சற்று தெளிவாக இருந்த செல்வக்குமார் மூக்கையா அணிந்திருந்த துண்டை இறுக்க, மற்ற இருவரும் உடந்தையாக இருந்து அவரை கொலை செய்தனர். அவரிடம் இருந்து செயின், மோதிரத்தை எடுத்துக் கொண்டு வறண்ட கண்மாயில் உடலை விட்டுச் சென்றனர்.
மேலும், இதில் மாட்டிக்கொள்ளக் கூடாது என்பதற்காக மூவரும் காளையார்கரிசல்குளத்தைச் சேர்ந்த சங்கர் (28) என்பவருடன் சேர்ந்து டீசல் வாங்கிக்கொண்டு இரவு கண்மாய் வந்து உடலை எரித்தனர். பின்னர், இது தொடர்பாக முதலில் அடையாளம் தெரியாத உடல் கண்டறியப்பட்டதாக வழக்கு பதியப்பட்ட நிலையில், தொடர் விசாரணையில் செல்வக்குமார், முருகன், சோனை பாண்டி ஆகியோர் கொலை செய்திருப்பது தெரிந்தது.
மேலும், இவர்கள் மூக்கையாவின் நகைகளை அதே ஊரைச் சேர்ந்த பழியன், ரவியிடம் கொடுத்துள்ளனர். எனவே, போலீசார் செல்வக்குமார், முருகன், சோனை பாண்டி, சங்கர், பழியன், ரவி ஆகிய 6 பேர் மீது காரியாபட்டி ஆவியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கானது விருதுநகர் மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் நடந்தது. இதில் சங்கர், பழியன், ரவி விடுவிக்கப்பட்டனர். செல்வக்குமார், முருகன், சோனை பாண்டி மூவருக்கும் ஆயுள் தண்டனையும், செல்வக்குமாருக்கு ரூ. 2ஆயிரம் அபராதமும் விதித்து கூடுதல் மாவட்ட நீதிபதி ஹேமானந்தக்குமார் தீர்ப்பளித்தார். இதனையடுத்து, தண்டனை விதிக்கப்பட்ட மூன்று பேரும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
இதையும் படிங்க:நியோ மேக்ஸ் நிதி நிறுவன மோசடி வழக்கு; 15 மாதத்தில் முடிக்க உத்தரவு!