சென்னை:வியாசர்பாடி அம்பேத்கர் அரசு கலைக் கல்லூரி அருகே உள்ள எருக்கஞ்சேரி நெடுஞ்சாலையில் போதை தலைக்கேறிய ஒருவர் சாலையில் சென்று கொண்டிருந்த வாகனங்களுக்கு இடையூறாக நடந்து சென்றார். தள்ளாடி போதையுடன் வந்து கொண்டிருந்த அவர் மீது எதிர்பாராத விதமாக ஆட்டோ ஒன்று உரசிச் சென்றதாக தெரிகிறது.
இதில் சிறு காயமடைந்த போதை ஆசாமி ஆத்திரம் அடைந்து ஆட்டோ ஓட்டுநர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தினார். இதில் முகம் மற்றும் பல் உடைந்து பலத்த காயம் அடைந்த ஆட்டோ ஓட்டுநர் அருகே உள்ள போக்குவரத்துக் காவலரிடம் புகார் தெரிவித்தார்.
அப்போது அங்கு வந்த போதை ஆசாமி "தன் மீது விபத்து ஏற்படுத்தி ஆட்டோ ஓட்டுநர் காலை உடைத்து விட்டதாகக்" கூறி போலீசாரிடம் அராஜகம் செய்துள்ளார். மேலும் சாலையில் செல்லும் வாகனங்களைச் செல்ல தடுத்து நிறுத்தி சாலையில் நடுவே படுத்து உருண்டார்.