திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் - பேர்ணாம்பட் புறவழிச்சாலையில், நேற்றிரவு இளைஞர் ஒருவர் அரை நிர்வாணமாக சாலையில் சென்ற வாகனங்களை நிறுத்தி, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்திய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. அந்த இளைஞருக்கு மனநிலை பாதிக்கப்பட்டிருக்கலாம் என்றும் கூறப்பட்டது. இந்த நிலையில், ஆம்பூர் நகர போலீசார் இச்சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்து குடிபோதையில் அலப்பறையில் ஈடுபட்ட இளைஞர் குறித்து விசாரணை நடத்தினர்.
வைரல் ஆசாமி:விசாரணையில், சாலையில் அலப்பறை செய்தவர் ஆம்பூர் அடுத்த வெங்கடசமுத்திரம் பகுதியைச் சேர்ந்த சேட்டு (22) என்பது தெரிய வந்துள்ளது. இவர் காட்பாடியில் உள்ள தனியார் காலணி தொழிற்சாலையில் பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணமாகிய நிலையில், அவரது மனைவி மூன்று மாதம் கர்ப்பமாக உள்ளார். இந்நிலையில், நேற்று கணவர் - மனைவி இருவரும் வேலூர் சென்று, பின்னர் வெங்கடசமுத்திரம் கிராமத்திற்கு பேருந்தில் வந்து கொண்டிருந்துள்ளனர்.
ஓடும் பேருந்தில் இறங்கி அலப்பறை:அப்போது, இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அதாவது, சேட்டுவின் மனைவி, சேட்டுவிடம் வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பில் இருக்கிறாயா என்று கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சேட்டு, தன் மனைவி தன்னை சந்தேகப்பட்டுவிட்டதாகக் கூறி ஓடும் பேருந்தில் இருந்து இறங்கி, ஆம்பூர் புறவழிச்சாலையில் உள்ள மதுபானக் கடையில் மதுபானம் வாங்கி குடித்துவிட்டு, ஆம்பூர் புறவழிச்சாலையில் குடிபோதையில் வாகனங்களை நிறுத்தி அலப்பறையில் ஈடுபட்டுள்ளார்.