விழுப்புரம்:தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு வரும் 27 ஆம் தேதி விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வி.சாலையில் நடைபெற இருக்கின்றது. இதற்கான ஏற்பாடுகளும் அங்கு தீவிரமாக நடைபெற்று வருகின்றன. சமீபத்தில் கூட மாநாட்டுக்கான பந்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் விஜய் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி என்.ஆனந்த் தலைமையில் பந்தக்கால் நடும் விழா நடைபெற்றது.
தற்போது தவெக மாநாடு நடைபெறும் இடத்தை, விழுப்புரம் மாவட்ட சரக காவல் துணைத் தலைவர் திஷா மிட்டல், காவல் கண்காணிப்பாளர் தீபக் சிவாச் ஆகியோர் ஆய்வு செய்து வருகின்றனர். மாநாட்டில் கூட்ட நெரிசல் அதிகம் ஏற்படாமல் இருக்க தென்மாவட்ட பகுதியான திருச்சி, மதுரை, கோயம்புத்தூர், கன்னியாகுமரி என பல்வேறு பகுதிகளில் இருந்து சென்னை வரும் வாகனங்களுக்கு மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க:தவெக மாநாடு வெற்றி பெற நடிகர் தாடி பாலாஜி பிரார்த்தனை
அதன்படி, தென்மாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்களை விழுப்புரத்தில் இருந்து செஞ்சி, திண்டிவனம் வழியாக சென்னைக்கு செல்ல திட்டமிடப்பட்டுள்ளதாகவும், வாகனங்கள் தடையின்றி செல்லவும், விபத்துக்கள் ஏற்படாமல் இருக்கவும், பேரிகார்ட் அமைப்பது குறித்தும் அதிகாரிகள் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.