மதுரை:தேவர் ஜெயந்தியை முன்னிட்டு, மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு பல்வேறு கட்சித் தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அந்த வகையில், தேமுதிக சார்பாக விஜயபிரபாகரன் மாலை மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறுகையில், “பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குரு பூஜையில் கலந்து கொள்வது இதுவே முதல் முறை. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். பல ஆண்டுகளுக்கு முன் எனது தந்தை உடன் வந்துள்ளேன். அதன் பின் இப்போது வந்துள்ளேன். விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதியில் வேட்பாளராக நின்றபோது கூட தேவருக்கு மரியாதை செலுத்திவிட்டுதான் எனது பிரச்சாரத்தைத் தொடங்கினேன்.
விஜய பிரபாகரன் செய்தியாளர் சந்திப்பு (Credits - ETV Bharat Tamil Nadu) இதையும் படிங்க:அஜித்துக்கு வாழ்த்து சொன்னால் விஜய்க்கு கோவம் வருமா? உதயநிதி குறித்து தமிழிசை கேள்வி!
விஜய்யின் தவெக மாநாட்டில் பங்கேற்ற தொண்டர்களை விட விஜய்காந்த்தின் தேமுதிக மாநாட்டில் பல லட்சக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்றனர் என்பதை தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமதா விஜயகாந்த் ஒப்பிட்டுப் பேசியதில் எந்தவித தவறும் இல்லை. நீண்ட நாள் போராட்டத்திற்குப் பிறகு விஜய் தமிழக வெற்றிக் கழக மாநாட்டை நடத்தியிருக்கிறார், அதற்கு வாழ்த்துகள்.
விஜயகாந்தை எடுத்துக்காட்டாக முன்வைத்து விஜய் மாநாடு நடத்தியுள்ளார். விஜயகாந்த் தலைமையில் நடந்த மாநாட்டை தினமும் நினைவுபடுத்திக் கொண்டுதான் இருக்கிறோம். இதே மதுரையில் தான் அந்த மாநாடு நடைபெற்றது. அந்த மாநாடும், அதன் எழுச்சியும் எவ்வாறு இருந்தது என்பதை மக்களுக்குப் புரிய வைக்கவே நாங்கள் பேசினோம்.
தமிழ்நாட்டில் புதிதாக ஒரு மாநாடு நடக்கும்போது நினைவுகளை சுட்டிக் காட்டுவது வழக்கம். ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு என்பதை வலியுறுத்தி விஜய் பேசியுள்ளது அவரது கருத்து. அதிகாரத்தில் பெரிய கட்சி இருக்கும் போது அதை சரிசமமாக அனைவரும் பகிர்ந்துகொள்ள வேண்டும் என பல கட்சிகள் பேசுவதை நாங்களும் முன்வைக்கிறோம் என்றார். தற்போது ஒரு மாநாட்டை அவர் முடித்துள்ளார். இன்னும் நாட்கள் இருக்கின்றன. அதற்காக அவர்கள் உழைக்க வேண்டும" என தெரிவித்தார்.