விழுப்புரம்:தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு, விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய விஜய், தமிழக வெற்றிக் கழகத்தின் செயல் திட்டம் என்ன, கொள்கை என்ன என்பது குறித்து தெரிவித்தார். மேலும் தமிழக வெற்றிக் கழகம் என பெயர் வைக்கப்பட்டது ஏன்? என்பது குறித்து விளக்கம் அளித்து வீடியோ ஒன்றை வெளியீட்டு இருந்தார்.
தமிழகம்:அந்த வீடியோவில் விஜய் பேசியதாவது, “நமது கட்சியின் முதல் சொல் தமிழகம். 'தமிழகம்' என்பதற்கு தமிழர்களின் அகம், அதாவது தமிழர்கள் வாழும் இடம் என்று சொல்லலாம். புறநானூறு, சிலப்பதிகாரம், மணிமேகலை, பதிற்றுப்பத்து உள்ளிட்ட பல இலக்கியங்களில் 'தமிழகம்' என்ற வார்த்தை உள்ளது.
தமிழை ஆழமாக ஒழுங்காகப் படித்த நிறைய பேர் நமக்கு சொல்லிக் கொடுத்த வார்த்தை என்பதால்தான் 'தமிழகம்' என்ற பெயரை நாங்கள் முதல் வார்த்தையாக வைத்துள்ளோம். அண்ணா, அதனால்தான் 'தமிழ்நாடு' என்று பெயர் சூட்டினார்.
வெற்றி:ஒரு ஒட்டுமொத்த கூட்டத்தை உணர்ச்சியோடு உச்சத்தில் வைக்கிற சொல், நாடி நரம்புகள் எல்லாம் உணரக்கூடிய சொல் என்றால், அது ‘வெற்றி’. என்றைக்கும் தன்னுடைய தன்மையை இழக்காத ஒரு சொல். மேலும், ஒட்டுமொத்த கூட்டத்தையும் உற்சாகப்படுத்தும் சொல். ஒரு விஷயத்தை மிச்சம் மீதி இல்லாமல் செய்து முடிப்பது, மனதுக்குள் தோன்றும் நோக்கத்தை நிறைவேற்றுவது, வாகை சூடுவது என்ற பல அர்த்தங்கள் உள்ள ஒரு சொல் தான் நமது கட்சியின் மையப் பகுதியில் அமைந்துள்ளது.
கழகம்:மூன்றாவதாக, 'கழகம்'. கழகம் என்றால் சிங்கங்கள் பயிலும் இடம் என்று அர்த்தம். நமது இளைஞர்கள் என்ற இளம் சிங்கங்களாக இருக்கும் இடம்தான் கழகம். தமிழக + வெற்றி + கழகம், இந்த 3 வார்த்தைகளைக் கொண்டு மூண்டெழுந்திருக்கும் அரசியல் உலகின் அணையா பெருஞ்சுவர்தான் 'தமிழக வெற்றிக் கழகம்' என்றார்.
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்:அடுத்ததாக, 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்ற திருவள்ளுவரின் வார்த்தையும் சேர்த்து நம் கட்சியின் அடையாளமாக மாறியுள்ளது. இனி வரப்போகிற நாட்களில், ஒட்டுமொத்த மக்களின் ஆதரவையும், ஆசீர்வாதத்தையும் தமிழ்நாட்டின் வெற்றிக்கும், தமிழ்நாட்டில் இருக்கும் மக்களின் வெற்றிக்கும் அடித்தளமாக்கி, தமிழ்நாட்டை உலகத் தமிழர்களின் ஒரு மிகப்பெரிய அடையாளமாக மாற்றுவோம்" என அந்த வீடியோவில் தெரிவித்து இருந்தார்.