தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஹிமாச்சலில் சடலமாக மீட்கப்பட்ட வெற்றி துரைசாமி..! இன்று சென்னையில் உடல் தகனம்..முழு விபரம்.. - Himachal accident

Vetri Duraisamy: ஹிமாச்சல பிரதேசத்தில் கார் விபத்தில் சிக்கி உயிரிழந்த வெற்றி துரைசாமியின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக இன்று வைக்கப்பட்டு, மாலை 6 மணியளவில் கண்ணம்மாபேட்டை மயானத்தில் தகனம் செய்யப்பட உள்ளது.

Vetri Duraisamy last rites
வெற்றி துரைசாமி இறுதி சடங்கு

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 13, 2024, 7:23 AM IST

சென்னை: ஹிமாச்சல பிரதேசம், கின்னூர் பகுதியில் உள்ள சட்லஜ் நதியில் கடந்த 4ஆம் தேதி கார் விபத்தில் சிக்கிய சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமியின் உடல் சட்லஜ் நதியில் இருந்து ஐந்து கி.மீ தொலைவில் கண்டெடுக்கப்பட்டது.

சென்னை பெருநகர மாநகராட்சியின் முன்னாள் மேயரும், மனிதநேய கல்வி அறக்கட்டளையின் தலைவருமான சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி, அவரது நண்பர் கோபிநாத் உடன் ஹிமாச்சல பிரதேசத்திற்குச் சுற்றுலா சென்றுள்ளனர். அங்கு வாடகை கார் ஒன்றில் கடந்த 4ஆம் தேதி பயணம் செய்துகொண்டிருந்த போது, அவர்கள் சென்ற கார் கின்னூர் பகுதியில் உள்ள சட்லஜ் நதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் கார் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அதைத் தொடர்ந்து, படுகாயங்களுடன் மீட்கப்பட்ட திருப்பூர் வெள்ளகோவில் பகுதியைச் சேர்ந்த வெற்றி துரைசாமியின் நண்பர் கோபிநாத், கின்னூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனிடையே, விபத்தில் சிக்கிய வெற்றி துரைசாமி மட்டும் கிடைக்கவில்லை.

ஆகையால், காணாமல் போன வெற்றி துரைசாமியைத் தேடும் பணியில் காவல்துறை, ராணுவம், விமானப்படை மற்றும் நீர்மூழ்கி வீரர்கள் என பெரும் படை களமிறக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, கடந்த 8 நாட்களாகத் தொடர் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. மத்திய, மாநில அரசின் தொடர் முயற்சியால் எட்டு நாட்காளுக்குப் பிறகு அவரது உடல் சட்லஜ் நதியில் இருந்து ஐந்து கி.மீ தொலைவில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

உடலை மீட்ட மீட்பு படையினர், உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்நிலையில், வெற்றி துரைசாமியின் பூத உடல் இன்று (பிப்.13) மாலை 5 மணிக்கு, சென்னை நந்தனத்தில் உள்ள சி.ஐ.டி நகர், முதல் பிரதான சாலையில் உள்ள இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படும். அதைத்தொடர்ந்து, இன்று மாலை 6 மணியளவில் கண்ணம்மாபேட்டை மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இது தொடர்பாக, சைதை துரைசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், 'சென்னை பெருநகர மாநராட்சியின் முன்னாள் மேயர் மற்றும் மனிதநேய கல்வி அறக்கட்டளையின் தலைவர் திரு. சைதை துரைசாமி அவர்களின் மகன் மனிதநேய அறக்கட்டளையின் இயக்குனர் வெற்றி துரைசாமி அவர்கள் 2024 பிப்ரவரி 04 ஆம் தேதி இமாச்சல பிரதேசம் கின்னுர் மாவட்டத்தில் பயணம் செய்து கொண்டிருந்தபொழுது வாகனம் சட்லஜ் நதியில் விழுந்து விபத்துக்குள்ளானது.

மத்திய, மாநில அரசின் தொடர் முயற்சியால் எட்டு நாட்களுக்கு பிறகு அவரது உடல் சட்லஜ் நதியில் இருந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவில் கண்டெடுக்கப்பட்டது என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறோம். அன்னாரது பூத உடல் நாளை 13/02/2024 செவ்வாய்க் கிழமை மாலை 5 மணிக்கு அவரது உடல் கீழ்கண்ட இல்லத்தில் பொது மக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டு இறுதிச்சடங்கு மாலை 6 மணியளவில் கண்ணம்மாபேட்டை (தி. நகர்) மயான பூமியில் தகனம் செய்யப்படுகிறது.

மேலும் அதில், முகவரி: எண்:28, முதல் பிரதான சாலை, சி. ஐ. டி. நகர், நந்தனம் சென்னை - 35. (நந்தி சிலை அருகில்), தொடர்புக்கு: 8428431107, 9840043335 எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி சடலமாக மீட்பு!

ABOUT THE AUTHOR

...view details