வேலூர்: வேலூர் மாவட்டம் குடியாத்தம் வனப்பகுதியை ஒட்டி உள்ள சாமியார்மலை பகுதியை சேர்ந்தவர் விவசாயி ஏழுமலை. இவர் விவசாய நிலத்தில் ஆடு, மாடு, கோழிகளை வைத்து வளர்த்து வருகிறார். இந்நிலையில், நேற்று (பிப்.5) இரவு நேரத்தில் கொட்டகையில் ஆடுகளின் அலறல் சத்தம் கேட்டுள்ளது. உடனடியாக சென்று பார்த்த போது கொட்டகையில் சிறுத்தை இருப்பதைக் கண்ட ஏழுமலையின் அண்ணன் அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டுள்ளார்.
இதையடுத்து, அங்கிருந்து ஒரு ஆட்டை சிறுத்தை இழுத்துக் கொண்டு காட்டுப்பகுதிக்குள் சென்றுவிட்டது. இதற்கு முன்னர் கொட்டகையில் இருந்து 3 ஆட்டுக்குட்டிகள், வான்கோழி, நாய் குட்டிகளை இதுவரை சிறுத்தை கடித்து கொன்றுள்ளது. இந்நிலையில், குடியாத்தம் வனத்துறையினருக்கு இது குறித்து ஏழுமலை தகவல் தெரிவித்தன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.