தமிழ்நாடு

tamil nadu

By ETV Bharat Tamil Nadu Team

Published : 4 hours ago

ETV Bharat / state

பைக்கில் வந்த 3 பள்ளி மாணவர்கள்.. வண்டியை கொடுத்த நபர் கைது.. சிறார்களுக்கு வேலூர் போலீசார் கிடுக்குப்பிடி! - School students bike drive Vellore

வேலூரில் 18 வயது நிரம்பாத சிறுவரிடம் இருசக்கர வாகனத்தை கொடுத்தனுப்பிய பெற்றோர் மீது வழக்குப்பதிவு செய்து அவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

பறிமுதல் செய்யப்பட்ட பைக்
பறிமுதல் செய்யப்பட்ட பைக் (Credits - ETV Bharat Tamil Nadu)

வேலூர்: வேலூரில் வடக்கு காவல்நிலைய ஆய்வாளர் சீனிவாசன் தலைமையில் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது, மூன்று இளம் சிறார்கள் ஒரு பெரிய இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்துள்ளனர். எனவே, அவர்களை மடக்கிப் பிடித்த போலீசார், அந்த இருசக்கர வாகனத்தை கைப்பற்றினர்.

இதனையடுத்து, மூன்று சிறார்களையும் காவல்நிலையம் அழைத்து வந்து விசாரித்துள்ளனர். அப்போது, கணியம்பாடியைச் சேர்ந்த ஆகாஷ் என்பவர் சென்னையில் பணியாற்றி வருகிறார். எனவே, அவரது புதிய இருசக்கர வாகனத்தை அவருடைய மாமா சுந்தர் என்பவரிடம் ஒப்படைத்துவிட்டுச் சென்றுள்ளார்.

இதனை அறிந்த ஆகாஷின் அக்கா மகன், சுந்தரிடம் இருந்து பைக்கை வாங்கியுள்ளார். கணியம்பாடி அரசு மேல்நிலைப்பள்ளியில் 12ஆம் வகுப்பு படிக்கும் இவர், 18 வயது நிரம்பாத நிலையில், தனது இரண்டு நண்பர்களுடன் வேலூர் வந்தது விசாரணையில் தெரியவந்தது. மேலும், மூன்று பேரும் பள்ளி மாணவர்கள் என்பதால், அந்த வாகனத்தை கொடுத்தனுப்பி, சுந்தரத்தை வடக்கு காவல்நிலைய காவல்துறையினர் எட்டு பிரிவுகளின் படி வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்து நீதிமன்றக் காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், மோட்டார் வாகனச் சட்டப்படி சம்பந்தபட்ட வாகனத்தின் பதிவுச் சான்றை 12 மாதங்களுக்கு ரத்து செய்தும், மேலும் வாகனத்தை ஓட்டிய இளம் சிறார் 25 வயது வரை ஓட்டுநர் உரிமம் பெறுவதை தடை செய்யுமாறும் மோட்டார் வாகன ஆய்வாளருக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

18 வயது நிரம்பாத சிறுவர்களை புதிய மோட்டார் வாகனச் சட்டப்படி இருசக்கர வாகனம் ஓட்ட அனுமதித்ததால் பெற்றோர் மீது நடவடிக்கை பாயும் என்பது வேலூரில் துவங்கியுள்ளது. அதேநேரம், காவல்துறை கைப்பற்றியுள்ள அந்த இருசக்கர வாகனம் புதிய வாகனம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மோட்டார் வாகன விதி:மோட்டார் வாகன விதிப்படி, பைக் ஓட்ட வேண்டுமெனில் 18 வயது நிறைவடைய வேண்டும். அதற்கு முன்பே வாகனத்தை ஓட்ட வேண்டுமென்றால், மோட்டார் வாகன உரிமம் பெற்ற பெற்றோர் மேற்பார்வையில், அவர்களது பெயரிலுள்ள 50 சிசி திறன் வரை கொண்ட மோட்டார் வாகனத்தை மட்டுமே ஓட்டலாம். அதற்கு, 16 வயது நிறைவடைந்திருக்க வேண்டும். அதற்கு வயது சான்று, பள்ளியின் ஒப்பந்தச் சான்று, பெற்றோரின் உரிமம், ஆர்சி புத்தகம், இன்சூரன்ஸ் சமர்ப்பித்து, அதற்கென்று மோட்டார் வாகன உரிமம் (லைசென்ஸ்) பெற வேண்டும்.

ABOUT THE AUTHOR

...view details