வேலூர்:காட்பாடி அருகே ஆந்திரா- தமிழ்நாடு மாநில எல்லையில் இலட்சுமிபுரம் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் சுமார் 50க்கும் மேற்ப்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில், இந்த கிராம மக்கள், “எங்களுக்கு சாலை வசதி கூட வேண்டாம், பாதை மட்டும் அமைத்துக் கொடுங்கள்” என பரிதாபமான முறையில் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
பாதை இல்லாத ஊர்:இது குறித்து அந்த கிராம மக்கள் கூறுகையில், தங்கள் கிராமம் அமையப்பட்டு 50 ஆண்டுகள் ஆன நிலையில், இன்றுவரை பாதை என்ற ஒன்றே அமைக்கப்படவில்லை என்கின்றனர். இதனால் இலட்சுமிபுரதிற்கு அருகில் இருக்கும் குருநாதபுரம் வழியாக தனிநபர் ஒருவரின் பட்டா நிலத்திற்கு மேல் வரும் ஒற்றையடி பாதையில்தான் பல ஆண்டுகளாக தங்கள் ஊருக்குள் வர பயணித்து வருவதாக தெரிவித்துள்ளனர்.
முடக்கப்பட்ட வழி:ஆனால்,இப்போது திடீரென அந்த தனி நபரும் அவர் தேவைக்காக அந்த பாதையை மூடி விட்டார். எனவே, எங்கள் கிராமத்திற்குச் செல்ல வேறு பாதை எதுவும் இல்லாத நிலையில், இப்போது கிராம மக்கள் 2 கிலோ மீட்டர் சுற்றி மழை நீர் செல்லும் ஓடை வழியாக தங்கள் ஊருக்குச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.