வேலூர்:வேலூர் மாவட்டம் காட்பாடியில் மூதாட்டியின் 4 சவரன் தங்க தாலி சங்கலியை பறித்துச் சென்ற இளைஞரை விருதம்பட்டு போலீசார் தனிப்படை அமைத்து தேடி வந்த நிலையில் நேற்று அவர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். கடனை அடைப்பதற்காக மூதாட்டியின் தங்க தாலியை பறித்து சென்றதாக தெரியவந்திருக்கிறது.
காட்பாடி காங்கேயநல்லூர் காந்தி தெருவை சேர்ந்த ராமசாமி என்பவரின் மனைவி மீனாட்சி (70). இவர் நேற்று முன்தினம் (நவம்பர்.17) இரவு வீட்டில் தனியாக இருந்துள்ளார். அச்சமயத்தில் நள்ளிரவில் வீட்டின் காலிங் பெல் ஒலித்ததையடுத்து மூதாட்டி மீனாட்சி கதவைத் திறந்து வீட்டுக்கு வெளியில் வந்து பார்த்து உள்ளார்.
வீட்டின் வெளியில் யாரும் இல்லாத காரணத்தால் மூதாட்டி மீனாட்சி இயற்கை உபாதை கழிக்க வீட்டின் எதிர்புறத்துக்குச் சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் மூதாட்டி மீனாட்சி அணிந்திருந்த 4 சவரன் தாலி சங்கிலியை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
அதையடுத்து, மூதாட்டி அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த விருதம்பட்டு போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் அந்த தெருவில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளைக் கொண்டும் போலீசார் ஆய்வு செய்தனர். அதன் படி அதே தெருவை சேர்ந்த கரன் (20) என்ற இளைஞர் மூதாட்டியின் தாலிச் சங்கிலியை பறித்து சென்றது தெரிய வந்தது.
இதையும் படிங்க:அசாமில் இருந்து திருச்செந்தூர் வந்த யானை! பிரேரோனா தெய்வானை ஆனது எப்படி?
இதனைத் தொடர்ந்து, போலீசார் கரனை கைது செய்து, நடத்திய விசாரணையில் தனக்கு அதிக கடன் பாக்கி இருப்பதால் இது போன்று திட்டம் தீட்டி மூதாட்டி இடம் சங்கிலி பறிப்பில் ஈடுபட்டதாக ஒப்புக்கொண்டுள்ளார். இரவில் காலிங்க் பெல்லை அழுத்திவிட்டு மறைந்து கொண்டதாகவும், மூதாட்டி வெளியே வந்ததும் பின்னால் சென்று சங்கிலியை பறித்ததாகவும் போலீசாரிடம் கூறியிருக்கிறார். மூதாட்டியின் 4 சவரன் தங்கத் தாலி சங்கிலியை கரன் வீட்டில் இருந்து போலீசார் கைப்பற்றிய நிலையில் கரன் மீது விருதம்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து, வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits- ETV Bharat Tamil Nadu) ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறியஇங்கே க்ளிக் செய்யவும்