கடலூர்: நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு, விழுப்புரம் மற்றும் சிதம்பரம் ஆகிய இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டு இருந்தது. மேலும், இந்த முறை விசிக பொதுச் சின்னம் பானை வழங்கக் கோரிய நிலையில், விசிகவிற்கு பொதுச் சின்னம் நிராகரிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் கூறுகையில், "தேர்தல் ஆணையம் ஒரு சார்பாக செயல்பட்டு வருகிறது. பாரதிய ஜனதாவை எதிர்த்து அரசியல் செய்கின்ற கட்சிகளுக்கு தனிச் சின்னம், பொதுச் சின்னம் ஒதுக்குவதற்கு மறுப்பு தெரிவிக்கிறது. அதற்கு அவர்கள் சொல்கின்ற காரணம் ஏற்புடையதாக இல்லை.
பாரதிய ஜனதாவை ஆதரிக்கின்ற கட்சிகளுக்கு சில நிமிடங்களில் சின்னங்களை ஒதுக்குகின்றார்கள். இது தேர்தல் ஆணையம் பாஜகவிற்கு ஆதரவாக செயல்படுவதை மிகவும் வெளிப்படையாகத் தெரிகிறது. தமிழ்நாடு மற்றும் தென்னிந்திய மாநிலங்களில் விசிக போட்டியிடும் அனைத்து தொகுதிகளிலும் பொதுச் சின்னம் ஒதுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து இருந்தோம்.
ஒரு மாதத்திற்கு முன்னதாகவே மனு அளித்திருந்தோம். கடந்த 21ஆம் தேதி குறிப்பிடப்பட்ட கடிதம், எங்களுக்கு 25ஆம் தேதி தான் கிடைத்தது. அதில் கடந்த தேர்தலில் நீங்கள் ஒரு சதவீத வாக்குகள் பெறவில்லை என்றும், எனவே உங்களுக்கு பொதுச் சின்னம் ஒதுக்க முடியவில்லை என்று தெரிவித்துள்ளனர்.
இது குறித்து டெல்லி நீதிமன்றத்தில் ஆஜரான வழக்கறிஞர்கள், கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் விசிக 1.18 சதவீதம் வாக்குகள் பெற்றதுள்ளது, அதனால் பானை சின்னத்தை மீண்டும் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்கள். இருப்பினும், மீண்டும் அதே காரணத்தை சுட்டிக்காட்டி சின்னம் வழங்க முடியாது என ஆணையம் அறிவித்தது.
மேலும், தேர்தல் செலவுகள் குறித்த கணக்கு வழக்கு ஆவணங்களில் நோட்டரி பப்ளிக் (Notary Public) கையெழுத்து போடவில்லை என்கிற புதிய காரணத்தை கண்டுபிடித்து தெரிவித்துள்ளார்கள். இந்நிலையில், மீண்டும் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்ய உள்ளோம்" எனக் கூறினார்.
பானை சின்னம் வழங்கப்படாவிட்டால் வேறு எந்த சின்னத்தில் போட்டியிட வாய்ப்பு உள்ளது என கேட்ட கேள்விக்கு, "தென்னிந்திய மாநிலங்களில் இன்னும் வேட்பு மனுத் தாக்கல் செய்ய கால அவகாசம் உள்ளது. எனவே, மீண்டும் நாங்கள் நீதிமன்றத்தை நாடுவோம்" எனத் தெரிவித்தார்.
மேலும், "தமிழ்நாட்டில் விசிக ஏற்கனவே 4 சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் பானை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஒரு நாடாளுமன்ற மக்களவை உறுப்பினரும் பெற்றுள்ள கட்சி. எனவே, இந்த தேர்தலில் சிதம்பரம் மற்றும் விழுப்புரத்தில் போட்டியிட பானை சின்னம் வழங்க வாய்ப்புள்ளது என்று நம்புகிறோம்" எனக் கூறினார்.
இதையும் படிங்க:"இரு தினங்களில் சின்னம் குறித்து அறிவிக்கப்படும்" - மதிமுக வேட்பாளர் துரை வைகோ விளக்கம்..!