கள்ளக்குறிச்சி:நாடாளுமன்ற மக்களவை தேர்தல், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ம் தேதி நடைபெறவுள்ளது. அதன்படி, தேர்தல் களம் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ள நிலையில், அரசியல் கட்சியினர் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில், திமுக கூட்டணியில் விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் போட்டியிடும் ரவிக்குமாரை ஆதரித்து உளுந்தூர்பேட்டையில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், உயர்கல்வித்துறை அமைச்சர் க. பொன்முடி ஆகியோர் தேர்தல் பரப்புரை மேற்கொண்டனர்.
அப்போது திருமாவளவன் பேசுகையில், “இந்த தேர்தல் வழக்கமான தேர்தல் இல்லை. நாட்டையும், நாட்டு மக்களையும் காப்பதற்கு, ஜனநாயகத்தை காப்பதற்கு, புரட்சியாளர் அம்பேத்கரின் அரசமைப்பு சட்டத்தை பாதுகாப்பதற்கு ஒட்டுமொத்த இந்திய மக்களும் நடத்துகிற யுத்தம் தான் இந்த தேர்தல்.
திமுக தலைவர் ஸ்டாலின் கடந்த ஐந்து ஆண்டுகளாக மேற்கொண்ட முயற்சியினால் தான் மம்தா பானர்ஜி, அரவிந்த் கெஜ்ரிவால் போன்றோர் பாஜகவிற்கு எதிராக திரண்டுள்ளனர். பாஜகவின் பத்தாண்டு கால ஆட்சியில் இந்த நாடு வளர்ச்சி அடைந்ததா என்றால் இல்லை. அவர்களின் ஆட்சியில் வளர்ச்சி அடைந்தது அம்பானியும், அதானியும் மட்டும் தான்.
மோடி ஆட்சி நடத்துவது எளிய மக்களுக்காக இல்லை. எளிய மக்கள் பயன்படுத்தும் அத்தனை பொருட்களுக்கும் 18 சதவீதம் ஜிஎஸ்டி போட்டு மக்களை சுரண்டுகின்ற ஆட்சியாக தான் பாஜக ஆட்சி நடக்கிறது. சட்டமன்றத்தில் போராடி அண்ணன் பொன்முடி மீண்டும் அமைச்சராகி வந்திருக்கிறார். ஆளுநரை எதிர்த்து பேசினார் என்பதற்காக தான் ஆர்எஸ்எஸ் ரவி பொன்முடிக்கு நெருக்கடியை கொடுத்தார்.
ஹேமந்த் சோரன், அரவிந்த் கெஜ்ரிவால், செந்தில் பாலாஜி ஆகியோரை சிறையில் வைத்துள்ளதற்கு காரணம் பாஜகவை எதிர்க்கிறோம் என்ற ஒரே காரணம் தான். உச்ச நீதிமன்றம் ஆளுநர் ரவியை செவிலில் அறைந்தது போல் தீர்ப்பளித்தது. பாஜகவை எதிர்க்கிறவர்களை ஓரங்கட்டுகிற முயற்சியில் எவ்வளவு வெளிப்படையாக செயல்படுகிறார்கள் என்பதை பானை சின்னம் விவகாரத்தில் மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.
அரசியலில் காமெடியன் அண்ணாமலை தினம் தோறும் திமுகவை ஏதாவது பழி சொல்லி பேசி வருகிறார். பாஜக அதிமுக பாமக 3 பேரும் ஒரே அணியில் இருந்தபோதே 2019ல் 39 தொகுதிகளில் நாம் வெற்றி பெற்றோம். இப்பொழுது அவர்கள் சிதறி கிடக்கிறார்கள் நாம் எப்பொழுதும் போல் ஒரு அணியில் இருக்கிறோம். சிறுத்தைகளை விலைக்கு வாங்க எந்த சக்தியும் இந்த மண்ணில் பிறக்கவில்லை.
திமுக கூட்டணி தமிழ்நாடு முழுவதும் வெற்றி பெறுவதற்கு விடுதலை சிறுத்தைகள் தான் காரணம் என்று பேசும் அளவிற்கு விடுதலை சிறுத்தைகள் உழைக்க வேண்டும். 40க்கு 40 திமுக கூட்டணி வெற்றி பெற்றால் தான் பாஜகவை ஆட்சி அதிகாரத்தில் இருந்து தூக்கி எறிய முடியும். ரவிக்குமார் சென்றமுறை ஒன்றரை லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் இந்த முறை மூன்று லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டுகிறேன்” என்றார்.
இதையும் படிங்க:90 காலி பணியிடங்களுக்கான குரூப்-1 தேர்வு அறிவிப்பை வெளியிட்டது டிஎன்பிஎஸ்சி! - Tnpsc Group 1 Exam