தஞ்சாவூர்:சிபிஐ-எம்எல் கட்சியின் கட்சி சார்பில், இந்தியா கூட்டணியில் (INDIA Alliance) உள்ள கட்சித் தலைவர்கள் பங்கேற்ற பொதுக்கூட்டம் நேற்று (பிப்.1) நடைபெற்றது. இக்கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் பங்கேற்றிருந்தார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், "எந்த தரப்பை சார்ந்த மக்களுக்கும் பயனளிக்க கூடிய வகையில் அறிவிப்புகள் ஏதும் இல்லாத, ஒரு வெற்று அறிக்கையாக இருக்கிறது, இந்த பட்ஜெட் அறிக்கை. பட்ஜெட்டுக்கு பிறகு நேரடியாக தேர்தலை சந்திக்க இருக்கக்கூடிய நிலையில், அவர்கள் (பாஜக) ஏதேனும் புதிய திட்டங்கள் குறித்த அறிவிப்புகளை செய்வார்கள் என்கிற எதிர்பார்ப்பு இருந்தது.
பாஜக கட்சி ஆதரவாளர்கள் உட்பட அனைவருக்கும் ஏமாற்றம் அளிக்கக்கூடிய வகையில் ஒன்றுமில்லாத ஒரு பட்ஜெட்டாக அமைந்துள்ளது. பாஜக தடுமாற்றம் அடைந்திருக்கிறது. தேர்தலை சந்திப்பதில் அவர்களுக்கு மிகப்பெரிய நெருக்கடி உருவாகி இருக்கிறது என்பதை இதன் மூலம் உணர முடிகிறது.
திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகளை ஒவ்வொன்றாக அழைத்து, டி.ஆர்.பாலு தலைமையிலான குழு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. அந்தவகையில், விரைவில் விடுதலை சிறுத்தைகள் கட்சியும் பேச்சுவார்த்தையில் பங்குபெறும். 10-க்கும் மேற்பட்ட கட்சிகளுடன், ஒரு கட்டுக்கோப்பான கூட்டணி திமுக தலைமையிலான கூட்டணி இருக்கிறது.