மதுரை:மதுரை வடக்கு தாலுகாவுக்கு உட்பட்ட வெளிச்சநத்தம் கிராமத்தில் கடந்த டிச.7 அன்று விசிக தலைவர் திருமாவளவன் கொடியேற்றுவதற்காக, ஏற்கனவே இருந்த 20 அடி உயரமுள்ள கொடிக் கம்பத்தை அகற்றிவிட்டு, அனுமதியின்றி 40 அடி கூடுதல் உயரமுள்ள கொடி கம்பத்தை கட்சியினர் நிறுவியுள்ளனர். இதனை அகற்றுமாறு வருவாய் அலுவலர்கள் மற்றும் காவல்துறையினர் அறிவுறுத்தியபோது கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
அதன்பின் கொடிக் கம்பம் வைக்க அனுமதி அளிக்கப்பட்டு மறுநாள் திருமாவளவன் கொடியேற்றினார். அங்கு கொடி கம்பம் அமைக்க விசிக சார்பில் அனுமதி கேட்டு கடிதம் அளிக்கப்பட்டுள்ளதாகவும், இதற்கு வருவாய்த்துறை அனுமதி அளிக்காத சூழலில் அத்துமீறி கொடிக் கம்பத்தை கட்சியினர் நிறுவியதாகவும், அதனை முன்கூட்டியே கவனித்து தடுக்க தவறியதாக வருவாய் ஆய்வாளர் அனிதா, கிராம நிர்வாக அலுவலர் பரமசிவம், கிராம உதவியாளர் பழனியாண்டி ஆகியோரை மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல் பணியிடை நீக்கம் செய்துள்ளார்.