சென்னை: மத்திய போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு (Narcotics Control Bureau) மற்றும் டெல்லி காவல் துறையினர் இணைந்து, கடந்த பிப்ரவரி 15ஆம் தேதி டெல்லியில் கைலாஷ் பார்க் எனும் (Kailash Park) பகுதியில் உள்ள தனியார் கிடங்கு ஒன்றில் அதிரடி சோதனையில் ஈடுபட்டது.
அதில், 'மெத்தபெட்டமைன்' எனப்படும் போதைப் பொருள் தயாரிக்க பயன்படுத்தப்படும் 50 கிலோ எடையிலான போதையூட்டும், விலை உயர்ந்த வேதிப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சோதனையின்போது கைது செய்யப்பட்ட மூன்று பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் எனவும் விசாரணையில் தெரியவ ந்தது.
மேலும், இந்த கும்பல், கடந்த மூன்று ஆண்டுகளில் 2 ஆயிரம் கோடி மதிப்புள்ள சுமார் 3 ஆயிரத்து 500 கிலோ போதையூட்டும் வேதிப்பொருட்களை, தேங்காய் பவுடர்கள் ஏற்றுமதி எனக் கூறி, வெளிநாடுகளுக்கு கடத்தி வந்ததும் அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையில் தெரிய வந்தது.
இதையும் படிங்க:போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தலைமறைவாக உள்ள ஜாபர் சாதிக்கிற்கு லுக் அவுட் நோட்டீஸ்!
மேலும், இந்த கடத்தல் கும்பலுக்கு பின்னணியில் இருந்து மூளையாகச் செயல்பட்டவராக திரைப்படத் தயாரிப்பாளரும், திமுகவின் முன்னாள் நிர்வாகியுமான ஜாபர் சாதிக்கை, போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்நிலையில், தலைமறைவாக உள்ள ஜாபர் சாதிக்கின் சகோதரர் முகமது சலீம் என்பவர், விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தரப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சென்னை மாவட்டம் மத்திய சென்னை துணைச் செயலாளர் முகமது சலீம் கட்சியின் நன்மதிப்பிற்கு ஊறு விளைவிக்கும் வகையில் செயல்பட்டு வந்ததால், அவர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் தகுதியிலிருந்து நீக்கப்படுகிறார். இவருடன் யாரும் கட்சி தொடர்பாக எந்த தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தலைமறைவாக இருக்கும் ஜாபர் சாதிக், கடந்த மாதம் 17ஆம் தேதிக்கு முன்பு கென்யா நாட்டிற்குச் சென்று வந்ததை போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளதாகவும், ஜாபர் சாதிக் உடன் கென்யா சென்ற நபர்கள் குறித்த விவரங்களைச் சேகரித்து, அவர்களையும் விசாரணை வளையத்திற்குள் கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:கென்யாவிற்கு சென்ற ஜாபர் சாதிக்..! உடன் சென்றவர்கள் யார்? பட்டியலைத் தேடும் போதைப்பொருள் தடுப்பு பிரிவு