தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விழுப்புரத்தில் இவிஎம் வைக்கப்பட்ட அறையில் 30 நிமிடம் கட்டான கேமரா.. புகார் அளித்த விசிக வேட்பாளர்! - Viluppuram Strong room cctv issue

VCK candidate complained Returning officer: விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதி விசிக வேட்பாளர் ரவிக்குமார், இவிஎம் (EVM) மெஷின் வைத்திருக்கும் அறைகளில் கண்காணிப்புக் கேமராக்கள் 20 நிமிடங்கள் வேலை செய்யவில்லை என தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் புகார் கடிதம் அளித்துள்ளார்.

விழுப்புரம் விசிக வேட்பாளர் புகார் மனு புகைப்படம்
விழுப்புரம் விசிக வேட்பாளர் புகார் மனு புகைப்படம் (Credits - Etv Bharat Tamilnadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 3, 2024, 7:57 PM IST

விழுப்புரம்: விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதி விசிக வேட்பாளர் ரவிக்குமார், இவிஎம் (EVM) மெஷின் வைத்திருக்கும் அறைகளில் கண்காணிப்புக் கேமராக்கள் 20 நிமிடங்கள் வேலை செய்யவில்லை என தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் புகார் கடிதம் அளித்துள்ளார்.

விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதிக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVMs) வைத்திருக்கும் அறைகளில், இன்று (மே.3) காலை 9.28 மணி அளவில் திடீரென்று கண்காணிப்புக் கேமராக்கள் நின்றுவிட்டன என்றும், அவை சரி செய்யப்பட்டு 9.58 மணி அளவில் மீண்டும் ஓடத் தொடங்கின என்றும் விசிக சார்பில், அங்கு நியமிக்கப்பட்டுள்ள அய்யப்பன் தொலைபேசியின் மூலம் விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதி விசிக வேட்பாளர் ரவிக்குமாருக்கு தெரிவித்துள்ளார்.

மேலும், விழுப்புரம் மாவட்ட கண்காணிப்பாளரும், தேர்தல் நடத்தும் அதிகாரியும் விரைந்து வந்து மின் இணைப்பு சம்பந்தமான அதிகாரியை நேரில் வரவழைத்து, மின்னழுத்தத்தை மிகச் சரியான நிலையில் வைத்திருக்க வேண்டும், அதில் எப்பொழுதும் கவனத்துடன் இருக்கவேண்டும் என அறிவுறுத்தியதாகவும், அங்கு இருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி, அதிமுக ஆகிய கட்சிகளின் சார்பில் நியமிக்கப்பட்டிருந்தவர்களை அழைத்துக் கொண்டு, 6 சட்டமன்றத் தொகுதிகளுக்கான EVM-கள் வைக்கப்பட்டுள்ள ஒவ்வொரு அறைக்கும் சென்று பார்வையிட்டதோடு, அங்கு இருக்கும் பதிவேடுகளில் தேர்தல் நடத்தும் அதிகாரியும், மாவட்ட காவல் கண்காணிப்பாளரும் கையெழுத்திட்டனர் என விசிக சார்பில் அங்கு நியமிக்கப்பட்டுள்ள அய்யப்பன் தெரிவித்துள்ளார்.

மேலும், விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதி விசிக வேட்பாளர் ரவிக்குமார் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசும்போது, "விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதியில் பதிவு செய்யப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் முழுவதும் ஸ்ட்ராங் ரூமில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

இந்தப் பகுதியில் துணை ராணுவப் படையினர் மற்றும் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அது மட்டுமல்லாமல், ஒவ்வொரு கட்சியினரும் தங்களுடைய பிரதிநிதிகளை பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தி வருகின்றனர். இந்த நிலையில், தினந்தோறும் மாவட்ட ஆட்சியர் அங்கு சென்று, சிசிடிவி கேமராக்கள் இயங்குகிறதா, பாதுகாப்புப் பணி எவ்வாறு உள்ளது என்று ஆய்வு செய்து வந்திருந்த நிலையில், இன்று காலை அரை மணி நேரம் சிசிடிவி கேமராக்கள் இயங்கவில்லை. ஆறு சிசிடிவி கேமராக்கள் இயங்காததை உடனடியாக மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அதிகாரியுமான பழனிக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

உடனடியாக மாவட்ட ஆட்சியர் அந்தப் பகுதியில் ஆய்வு செய்து மின்னழுத்தம் தான் காரணம் என்று விளக்கம் அளித்து இருந்தார். ஆட்சியரைச் சந்தித்து மனு அளித்து, வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இடங்களில் ஆறு சிசிடிவி கேமராக்கள் அரை மணி நேரம் இயங்காதது தொடர்பாக ஆட்சியரிடம் விளக்கம் கேட்டிருந்தோம். மின்னழுத்தம் தான் காரணம் என்று விளக்கம் அளித்துள்ளார். மேலும், கூடுதலாக கேமராக்கள் பொருத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார். இதில் வேறு எந்த காரணமும் இருக்க வாய்ப்பு இல்லை.

மேலும், கேமராக்கள் இயங்காததது தொடர்பாக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் ஆகியோருடன் ஆலோசனை நடத்தியதாகவும், சிசிடிவி காட்சிகள் மற்றும் கேமராக்களின் கோளாறு காரணமாக வேறு எந்த அரசியல் கட்சிகளும் இதுவரை மாவட்ட ஆட்சியரைச் சந்திக்கவில்லை" எனவும் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:மதம் மாறினால் ரூ.10 கோடி என மோசடி.. மேலும் ஒருவர் கைது.. முத்துநகர் பகீர் சம்பவம்! - Thoothukudi Online Cheating

ABOUT THE AUTHOR

...view details