ஈரோடு: கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள டி.என்.பாளையத்தில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில், பாஜக சார்பில் பாராளுமன்றத் தொகுதி பிரதிநிதிகள் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் பாஜக மகளிர் அணி தேசியத் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த வானதி சீனிவாசன், "முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, பெண்களுக்கென கொண்டு வந்த திட்டங்கள் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. பெண்களின் உயர்கல்வி, வேலைவாய்ப்பு, பாதுகாப்பு, பொருளாதார சுதந்திரம் உள்ளிட்டவற்றை தமிழ்நாடு அரசு கண்டு கொள்ளாமல் இருப்பது குறித்து பெண்களிடம் உரையாடுகிறோம். இதன் மூலமாக பெண்கள் மத்தியில் ஒரு அரசியல் விழிப்புணர்வு ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது.
பெண்களுடைய வாக்கு என்பது, பாஜகவிற்கு நெருங்கி வருவதை நாடு முழுவதும் பார்த்துக் கொண்டிருக்கின்றோம். குஜராத், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் இங்கிருக்ககூடிய மாநிலங்களில் எல்லாம், பாஜகவிற்கு ஆண்களை விட பெண்கள் அதிகமாக வாக்களிக்கின்றனர். இவையெல்லம் ஒரு நல்ல மாற்றமாகத்தான் பார்க்கிறோம். அரசியல் என்பது ஆண்களுக்கானது என்ற சூழல் மாறி, பெண்களும் அரசியலில் தங்களது லட்சியத்தை எட்ட முடியும் என்ற நம்பிக்கையை பாஜக வழங்கி வருகிறது.
தமிழ்நாட்டின் வரியை 2 விதமாக பிரிக்க முடியும். மத்திய, மாநில அரசுகளுக்கான ஒரு பொதுவான வரி என வரும்போது, மாநில அரசுகளுக்கு குறிப்பிட்ட சதவீதம் பிரித்துக் கொடுக்கப்படுகிறது. முத்திரா திட்டத்தில், நாடு முழுவதும் இருக்கக்கூடிய மொத்த கடன் தொகைகளில், அதிகமான தொகை தமிழ்நாட்டிற்குத்தான் கொடுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு, நாம் செலுத்துகின்ற வரியை விட அதிகமாக திட்டங்களை வழங்கி வருகிறது.
திமுகவைப் போல மத்திய அரசு ஊழல் செய்யவில்லை. நேர்மையான ஆட்சிதான் நடக்கிறது. மத்திய அரசு நிதி என்பது, யாருக்கு போக வேண்டுமோ, டெல்லியில் இருந்து நேரடியாக பயனாளிகளுக்குச் சென்றடைகிறது. திமுகவில் உள்ள அமைச்சர் கூட, முதலமைச்சருடைய குடும்ப உறுப்பினர்களின் ஆதிக்கத்திற்கு கட்டுப்பட்டுள்ளனர்.