தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திமுக அலை எங்கு வீசுகிறது என 2026ல் பார்ப்போம்; வானதி சீனிவாசன் சவால்..! - VANATHI SRINIVASAN

திமுக அரசு தங்களது சுய லாபத்திற்காக தமிழ்நாட்டை தனி தீவாக உருவாக்கி வருகிறது என்றும் இதனால் வருங்கால தலைமுறைக்கு மிகப்பெரிய துரோகத்தை திமுக அரசு செய்து வருகிறது எனவும் வானதி சீனிவாசன் விமர்சித்துள்ளார்.

கோவை தெற்கு எம்எல்ஏ வானதி சீனிவாசன்
கோவை தெற்கு எம்எல்ஏ வானதி சீனிவாசன் (credit - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 22, 2024, 8:21 PM IST

கோயம்புத்தூர்:கோவை ராம் நகர் பகுதியில் உள்ள தனியார் ஹோட்டலில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கான பயிற்சி முகாம் நடத்தப்பட்டது. இந்நிகழ்வில் வானதி சீனிவாசன் கலந்து கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு 20 லட்சம் ரூபாய் வரை எந்தவித உத்தரவாதமும் இல்லாமல் கடன் உதவி வழங்குகின்ற திட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தி வருகிறது. சுய உதவி குழுக்களுக்கு நிதி உதவி மட்டும் வழங்கி வராமல் வேறு பயிற்சிகள் அளிக்கும் திட்டம், தொழில் துவங்குவதற்கான ஏற்பாடுகள் ஆகியவற்றை செயல்படுத்தி வருகிறது.

குறிப்பாக பிரதமரின் கனவு திட்டமான நமோ ட்ரோன் திதி (Drone Didi) எனும் திட்டம் மூலம் கிராமப்புற பெண்களுக்கு ட்ரோன் இயக்குவதற்கான பயிற்சி வழங்கப்பட்டு, அவர்களது வாழ்வாதாரம் மேம்படுத்தப்பட்டு வருகிறது. இது போன்ற திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கான பயிற்சி முகாம் இங்கு நடத்தப்படுகிறது.

திமுக செயற்குழு கூட்டம்:

திமுகவின் செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றுள்ளது. அதில் மத்திய அரசை குற்றம் சாட்டி பல்வேறு தீர்மானங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக 'புயல் பாதிப்பிற்கான நிவாரணம் வழங்கவில்லை, டங்ஸ்டன் சுரங்கம் எடுக்க பாஜக துணை நிற்கிறது' என பொய்யான குற்றச்சாட்டுகள் அதில் உள்ளன. மாநில அரசு மத்திய அரசின் திட்டத்திற்கு முதலில் ஒப்புதல் வழங்கிவிட்டு, அதை நடைமுறைப்படுத்தும் போது திட்டத்தை எதிர்த்து வருகிறது. அதாவது கல்வித் துறைக்கு நிதி வேண்டும் என குறிப்பிட்ட திட்டத்தின் அடிப்படையில் மாநில அரசு கேட்கும்போது அதற்கான விளக்கத்தையும், அமல்படுத்தும் முறை குறித்தும் மத்திய அரசு கேட்கும், முதலில் திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கிவிட்டு நடைமுறைப்படுத்தும் போது மாநில உரிமை என பல்வேறு பொய்களை கூறி இவர்கள் திட்டத்தை அமல்படுத்துவதில்லை.

இதேபோன்று 'மாத்ரு வந்தன யோஜனா' எனும் கர்ப்பிணிகளுக்கான நிதி உதவி திட்டத்தின் கீழ் உரிய தகவல்களை பதிவேற்றம் செய்யாததால், தமிழகத்தில் உள்ள கர்ப்பிணிகளுக்கு அந்த பலன் கிடைக்கவில்லை. ஆயுஸ்மான் பாரத் காப்பீடு திட்டத்தில் பயன்பெற, 'மோடி அட்டை' என மக்கள் அதனை குறிப்பிட்டு கேட்கின்றனர். ஆனால், மாநில அரசு மருத்துவமனைகளுக்கு அழுத்தம் கொடுத்து மாநில அரசின் காப்பீடு திட்டத்தை மட்டுமே கொடுக்க வேண்டும் என கூறியிருக்கிறது.

விஸ்வகர்மா யோஜனா திட்டம்:

விஸ்வகர்மா யோஜனா திட்டம் என்பது குலத்தொழிலை ஊக்குவிக்கும் திட்டம் எனக் கூறி எதிர்ப்பு தெரிவித்து, இப்போது அதே திட்டத்தை 'கைவினை கலைஞர்கள்' திட்டம் என அமல் படுத்துகிறது. எந்தப் பெயராக இருந்தாலும் தமிழகத்தைச் சேர்ந்த கைவினைக் கலைஞர்கள் இதில் பலனடைய வேண்டும் என்பதே எங்களது விருப்பம். விஸ்வகர்மா திட்டத்தின் மூலம் சர்வதேச சந்தையில் கைவினை கலைஞர்களின் பொருட்களை விற்பனை செய்வதற்கான வாய்ப்புகள் உருவாக்கப்படும்.

இந்தி கட்டாயம் இல்லை:

நவோதயா பள்ளிகளில் இந்தி கட்டாயம் இல்லை என மத்திய அரசு கூறிய போதும், நவோதயா பள்ளிகளை தமிழகத்தில் திறக்க மறுக்கின்றனர். திமுக அரசு தங்களது சுய லாபத்திற்காக தமிழ்நாட்டை தனி தீவாக உருவாக்கி வருகிறது. இதனால் வருங்கால தலைமுறைக்கு மிகப்பெரிய துரோகத்தை திமுக அரசு செய்து வருகிறது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மிக மோசமாக சீர்குலைந்துள்ளது. சாத்தனூர் அணை படிப்படியாக திறக்கப்பட்டதற்காக பாராட்டு விழா நடத்தப்படுகிறது. ஆனால் சாத்தனூர் அணை திறந்த போது மக்கள் தத்தளித்ததை நாம் பார்த்தோம். இதுகுறித்து சட்டப்பேரவையில் பேசுவதற்கு கூட சபாநாயகர் அனுமதிக்க மறுக்கிறார். இதுவா இவர்களின் ஜனநாயகம்?.

இது போன்ற எத்தனை பொய் குற்றச்சாட்டுகளை பாஜகவின் மீது சுமத்தினாலும், வரும் 2026 தேர்தலில் மக்கள் திமுகவிற்கு சரியான மதிப்பெண்களை வழங்குவார்கள். 200 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என முதலமைச்சர் கூறியுள்ளார். அதில் இரண்டு பூஜ்ஜியங்களை நீக்கினால் உள்ள தொகுதிகளில் மட்டுமே திமுக வெற்றி பெறும் நிலையில் உள்ளது.

2026ல் பார்ப்போம்

திமுக அலை எங்கு வீசுகிறது என 2026ல் பார்ப்போம். கேரளாவிலிருந்து மருத்துவ கழிவுகளை தமிழகத்தில் கொட்டும் பிரச்சனை நெல்லை போன்று கோவை மாவட்டத்திலும் குறிப்பாக பொள்ளாச்சியிலும் உள்ளது. இதனை மாவட்ட நிர்வாகம் கவனமாக கண்காணித்து தடுத்திட வேண்டும். தமிழகம் கழிவுகளை கொட்டும் குப்பைத் தொட்டி அல்ல. இது குறித்து பாஜக மாநில தலைவர் அறிக்கை வெளியிட்டுள்ளார். பசுமை தீர்ப்பாயம் சரியான நடவடிக்கை எடுத்துள்ளது.

பெரியார் சிலை திறப்பிற்காக கேரளா செல்லும் முதல்வர் இது போன்று தமிழக மக்களின் பிரச்சினைகள் குறித்தும் கேரளா அரசிடம் பேச வேண்டும். குறிப்பாக சிறுவாணி அணையின் பராமரிப்பு மிக மோசமாக உள்ளது. மழை பெய்யும்போது நீரின் அளவு குறைக்கப்படுகிறது, இதையெல்லாம் கேரள முதல்வருடன் தமிழக முதல்வர் பேசவில்லை.

புயல், வெள்ள பாதிப்பு போன்ற பாதிப்புகளின் போது பேரிடர் பாதிப்பு நிதியிலிருந்தும், பிரதமரின் சிறப்பு நிதியில் இருந்தும் நிதி வழங்க வழிமுறை உண்டு. இதற்கான கோரிக்கையை மாநில அரசு தெரிவித்து, அதற்கு உரிய விளக்கத்தினை மத்திய அரசு எழுத்துப்பூர்வமாகவே வழங்கியுள்ளது. இதில் விருப்பு வெறுப்புக்கு எந்த இடமும் இல்லை'' என அவர் தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details