கோயம்புத்தூர்:கோவை தெற்கு தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினரும், பாஜக மகளிர் அணியின் அகில இந்திய தலைவருமான வானதி சீனிவாசன் ஹரியானாவில் பாஜக வெற்றி பெற்றதையடுத்து அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார்.
அதில், "மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு ஹரியானா மாநிலத்திலும், ஜம்மு - காஷ்மீர் யூனியன் பிரதேசத்திலும் சட்டப்பேரவைத் தேர்தல் நடந்தது. இதில் ஹரியானாவில் மொத்தமுள்ள 90 தொகுதிகளில் 48-ல் வென்று, தனிப்பெரும்பான்மையுடன் தொடர்ந்து 3வது முறையாக பாஜக ஆட்சி அமைக்கிறது.
மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வென்று ஆட்சி அமைத்தாலும், 99 இடங்களை வென்ற காங்கிரஸ் கட்சி, தான் வென்றுவிட்டதைப் போன்ற மாயத்தோற்றத்தை ஏற்படுத்தியது. காங்கிரஸ் தலைவராக இல்லாமல் அக்கட்சியை வழிநடத்தி வரும் ராகுல் காந்தியை பெரும் தலைவர் போல ஊடகங்கள் சித்தரித்தன.
ஹரியானாவில் காங்கிரஸ் தான் வெற்றி பெறும். ராகுல் காந்தி மாயாஜாலம் நிகழ்த்துவார் எனத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து திட்டமிட்ட பிரசாரத்தை மேற்கொண்டனர். ஊடகங்களில் ராகுல் பற்றிய செய்திகளே அதிகம் வந்தன. ஆனால், மக்கள் பாஜகவையே தேர்ந்தெடுத்துள்ளனர். தொடர்ந்து 3வது முறையாக ஒரு கட்சி ஆட்சியை தக்க வைப்பது சாதாரணமான விஷயம் அல்ல. தமிழகத்தில் திமுக தொடர்ந்து இரண்டாவது முறையாகத் தேர்தலில் வென்று ஆட்சி அமைத்ததில்லை என்ற உண்மையைத் தெரிந்து கொண்டால், ஹரியானாவில் பாஜக ஹாட்ரிக் வெற்றி பெற்றது எவ்வளவு பெரிய சாதனை என்பது புரியும்.
ஜம்மு - காஷ்மீருக்குத் தனி அந்தஸ்து வழங்கும் அரசியல் சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்ட பிறகு, சட்டப்பேரவை தேர்தல் நடப்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. ஆட்சி அமைக்க முடியாவிட்டாலும் 62 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக, 29-ல் வென்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. ஜம்மு - காஷ்மீரின் சமூக, அரசியல் சூழல் புரிந்தவர்களுக்கு இந்த வெற்றி பெரும் சாதனை என்பது தெரியும். ஜம்மு - காஷ்மீரில் 32 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் 6-ல் மட்டுமே வென்றுள்ளது.